- ராதா குமார்
கொரொனா தொற்றின் இரண்டாவது அலை நம்மை உலுக்கி எடுக்கும் இவ்வேளையில் கோடைக்கானலுக்கு இது மூன்றாவது முறையாக விடுமுறைக் காலத்தில் வரும் இழப்பு. ஊட்டி, ஏற்காடு போன்ற மற்ற மலை வாசஸ்தலங்களைப் போல இங்கும் சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளது.
2021 ம் வருடத்தின் மாஸ்டர் திட்டத்தின்படி, 42,000 மக்கள் ஜனத்தொகை உள்ள கோடைக்கானல் நகரத்தில்(நகரத்தின் பொருளாதாரம் விடுமுறைக்கால சுற்றுலா பயணிகளை சார்ந்திருந்தது)– முதலில், 2018ல் கஜாப்புயலினாலும், பிறகு 2019ல் , ஹோட்டல்கள், தங்குமிடங்கள் சட்டரீதியாக மூடப்பட்டதாலும், 2020லும் மற்றும் 2021(இவ்வருடம்) கொரொனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்காலும் – சுற்றுலா வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜனவரியில், மூன்றாவது வருடமாக தொடர்ந்து ஏற்பட்ட இழப்புக்களையும், நஷ்டங்களையும் வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை சுற்றுலா காலத்தில் சமாளிக்கலாம் என்று தோன்றிய எண்ணங்கள், ஏப்ரல் மாதத்தில் வந்த அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவால், தவிடு பொடியாகிப் போயின. ஊரடங்கானது இந்த ஊரின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டுவிட்டது. பயணியர் விடுதிகள், சிறு சாப்பாட்டுக்கடைகள், டாக்ஸிக்கள், குதிரை ஓட்டிகள், தரைக்கடை வியாபாரிகள், மற்ற பல சிறு வணிகர்கள் கொதித்தெழும் நிலை – இன்னொரு வருடமும் பெருத்த பொருளாதார பாதிப்பும் பட்டினியும் தான் என்று எண்ண தோன்றுகிறது.
அதே சமயம், இந்த ஊரடங்கு, கொரொனா பரவுவதை தடுத்து மக்களை பாதுகாக்க, ஒரு மிக நல்ல வாய்ப்பு என்பதை மறுக்க முடியாது. வெகு குறைவான மருத்துவ வசதிகளே கொண்ட நம் ஊருக்கு, திடீரென வரும் பயணியர் கூட்டங்களால் ஏற்படும் கொரொனா தொற்றின் பாதிப்புகளைத் தாங்கும் வலிமை இல்லை என்பதே உண்மை. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடைக்கானலையும் சேர்த்து, இங்குள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசிகள் மிகக்குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன – ஹிந்து நாளிதழின் அறிக்கைப்படி – அதாவது 60வது வயதுக்கு மேற்பட்டவர்களில், 10லிருந்து 20சதவீதம் பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சரிவர செயல்படுத்தக்கூடியதான தீர்வு இதற்கு ஏதேனும் உண்டா? ( என்பதே இக்கட்டுரையின் வினா ).
கோடைக்கானலின் அங்கீகாரம் பெற்ற சுற்றுலா சங்கங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், டாக்சி ஓட்டுனர் மேலும் சுற்றுலாத் தடை வந்ததால் பாதிக்கப்பட்ட பலரும், நகராட்சிக்கு சில கட்டுப்பாடுகளைப் பரிந்துரைத்துள்ளனர்: இவை சுற்றுலாவிற்கு முழுவதுமாக தடை விதிக்காமல் பயணியர் வரவைக் கட்டுபடுத்துவதற்கான விதிமுறைகளாகும். இவை கீழ்வருமாறு:
- தமிழ் நாட்டை ச்சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படும்
- “தொற்றுஇல்லை” என்கிற சர்டிபிகேட் அவசியம்
- தங்குமிடம், மற்றும் எவ்வளவு நாட்கள் தங்குகிறார்கள் என்ற விவரம் கட்டாயமாகத் தெரிவிக்கப்பட வேண்டியவை {டிராக்கிங் வசதிக்காக};
- விடுதிகளில் 50% தான் இருப்பிடம்;
- டாக்சியில் மூவருக்கு மேல் கூடாது
இவை மிக நல்ல கருத்துக்களே எனினும் தொற்றின் தீவிரப்பரவலைக் கட்டுப்படுத்த இவை மட்டும் போதுமா என்றால், இல்லை என்பதே உண்மை. உள்ளூரில் வசிக்கும் நோயாளிகளுக்கே நம்மூர் மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகளில்லை – 2021 மாஸ்டர் பிளானின் படி மொத்தம் 145 படுக்கைகளும், 15 மருத்துவர்களுமே உள்ளனர்; இரண்டு ஆஸ்பத்திரிகளில்தான் கோவிட் 19 க்குத்தேவையான ஆக்சிஜனுடன் கூடிய தனி வார்டுகள் இருக்கின்றன { அரசாங்க ஆஸ்பத்திரி, மற்றும் வான் ஆலன் ஆஸ்பத்திரி மட்டும் தான் } ஸ்வீடிஷ் ஹவுசிலும் மதர் தெரெசா பல்கலைக்கழகத்திலும், நோயின் கடுமை குறைவாக உள்ளோருக்கென 79 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்றவர் எல்லோரும் மதுரைக்கோ திண்டுக்கல்லுக்கோ தான் போகவேண்டும் – இரண்டரை அல்லது மூன்று மணிநேரப்பயணம்!
சீசனின் போது மாதத்திற்கு எட்டு லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் கோடைக்கானலில், இதன் பாதி என்றாலும், நான்கு லட்சம் பேர், { அதுவும் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் } தவிர அதிக கூட்டமில்லாத மாதங்களில், ஒன்றிலிருந்து மூன்று லட்சம் பேர் என்ற கணக்கு வருகிறது – 2021ம் வருட மாஸ்டர் திட்டத்தின்படி ஏறக்குறைய 2000 ஹெக்டேர் பரப்பளவுள்ள சிறிய ஊரில், அதுவும் 889 ஹெக்டேர்தான் வசிக்கத்தகுந்த இடமாகும்.
எந்த ஊரில் இருந்தாலும் சுற்றுலா செல்வதென்பது இந்த இரண்டாவது அலையினால் சற்று சிரமம்தான்; இருப்பினும் இங்கேயே வசிப்போரின் நலனுக்குக் கேடு வராமல் எவ்வளவு பயணியர் வந்தால் இவ்வூர் தாங்கும் என்று நாம்தான் சற்று ஆலோசிக்கவேண்டும்.
இந்த மதிப்பீடு செய்வதற்கு அந்தந்த இடங்களின் அமைப்பின்படி சுற்றுலா வருவோரையும் அங்குள்ள மருத்துவ வசதிகளையும் கணக்கெடுக்கத்தேவை. சுங்கச்சாவடிகள், விடுதி உரிமையாளர்கள், டாக்சி ஓட்டுனர்கள், பிரயாண ஏற்பாடு செய்பவர்கள், எனப்பலரிடமிருந்தும் நகராட்சியினர் தகவல் சேகரிக்க வேண்டும்; மேலும் மருத்துவர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் உள்பட டெமோகிராபர்கள், புள்ளியியல் வல்லுனர்கள் ஆகிய பல்வகை நிபுணர்களடங்கிய குழு அமைக்கவேண்டும்.
ஊரில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நம்மை கடுமையாக பாதித்திருக்கும் இவ்வேளையில் கோடைக்கானலில் இத்தகைய பல்வகைப்பட்ட நிபுணர்கள் கிடைப்பது கடினமல்ல. நகராட்சித்தலைவர்கள் மனது வைத்தால், இங்குள்ளோர் மூலமாகவே இத்தகைய நிபுணர் குழு ஒன்று அமைத்து சில வாரங்களுக்குள் ஒரு மதிப்பீடு தயார் செய்து விடலாம்.
எவ்விதத் தடையுமின்றி எல்லோரும் இங்கு வந்து செல்வதென்றால், நோய் தீவிரமாகப்பரவும் அபாயம் அதிகரிக்கத்தான் செய்யும்; கட்டாய ஊரடங்கினால் வாழ்வாதாரம் குலைவதோடு கோடைக்கானல் வாசிகளின் நலனுக்கும் கெடுதலே என்பது நம்மைத் தீவிரமாக ஆலோசிக்க வைக்கிறது. நம்மில் சுற்றுலாவினால் பாதிக்கப்படாதவர் அனைவரும், தாங்கள் இப்போது கடைபிடிக்கும் சுகாதார விதிகளை இன்னும் கடுமையாக்கிக்கொள்ள வேண்டியதுதான் – எப்போதும் மாஸ்க் அணிவதும், அதிகம் வெளியேபோகாமலிருப்பதும், ஆனால் அப்படிப் போகும் அவசியம் ஏற்படின் கட்டாயமாக மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைய் கடைபிடிக்கவும், அடிக்கடி கை கழுவுவது, கிருமிநாசினி உபயோகப்படுத்துவது, முதலிய சுகாதார விதிகளைக் பின்பற்றுவது மிக மிக அவசியம். இதில் சற்றுக்கூடத் தளர்வு இல்லாமல் கவனித்துக்கொள்ளவேண்டும்.
டாக்சி ஓட்டுபவர்கள், விடுதி உரிமையாளர்கள், சிறு வணிகர்கள், குதிரைக்காரர்கள், தரைக்கடை வியாபாரிகள், இவர்கள் எல்லோருக்கும் இதில் முக்கிய பங்குண்டு. வரும் பயணியர்களும் கொரொனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டும். மாஸ்க் அணிதல் , கை கழுவுதல், சமூக இடைவெளி விடுதல் ஆகியவை மிக மிக முக்கியம்.
இதனுடன் நகராட்சிக்கு முக்கியமான பணி ஒன்றுண்டு : கோவிட் 19 சிகிச்சைக்காக என, இங்கிருக்கும் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப்பிரிவு ஒன்று சீக்கிரமாக ஏற்படுத்துவது –( சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதித்தாலும், இல்லாவிட்டாலும் ) நம் கொடைக்கானல் வாசிகளுக்காக மிகவும் அவசியம். நமது தமிழ் நாட்டின் ராணுவம் இந்த மாதிரி அவசர காலங்களில் களப்பணியாற்றுவதில் நிகர் அற்றது; குறுகிய கால அவகாசத்தில் களங்களில் தீவிர சிகிச்சைக்கென வசதிகள் அமைப்பதிலும், மருத்துவர்கள், செவிலியர்கள், வாகனங்கள், மருந்துகள் முதலியவற்றைக் கொண்டு சேர்ப்பதிலும் தேர்ந்தவர்கள். ஆனால் அதற்காகும் செலவினங்களைக் கணக்கிட்டு, நகராட்சி செயல் பட வேண்டும். நகராட்சிக்கு இதற்கு வேண்டிய பணவசதி இல்லாத பட்சம், இந்த நகரத்தின் ஜனத்தொகை குறைவாக இருந்தாலும், இங்குள்ள தன்னார்வலர்கள், நன்கொடைகள் மூலம் ஒரு கணிசமான தொகை சேகரிக்க முடியும்.
நாடு முழுவதும் கொரொனாத்தொற்றின் தாக்கம் அதிகரித்திருப்பதாலும் இந்த இரண்டாவது அலையையும் தாண்டி பல மாதங்கள் மேன்மேலும் அதிகரிக்க கூடிய அபாயமிருப்பதாலும், கோடைக்கானல் நகராட்சி போர்க்கால அடிப்படையில், இது பற்றித்தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆசிரியர் – ராதா குமார் – அட்டுவான்பட்டியில் வசிக்கும் எழுத்தாளர், POLICY ANALYST.
அவரது சமீப காலத்திய படைப்புகள் – PARADISE AT WAR : A POLITICAL HISTORY OF KASHMIR { 2018 } ; GENDER ATLAS OF INDIA {2018}