பல இடங்களில் கொரொனாவால் எற்பட்ட பாதிப்புகள் எண்ணிலடங்கா. கோடைக்கானலில் அதன் தாக்கம் மிகவும் கொடூரமானது. 42,000 பேர் ஜனத்தொகை உள்ள ஒரு சிற்றூருக்கு மாதந்தோறும் ஆறு லக்ஷம் சுற்றுலாப்பயணிகள் வருவர். ஊரின் முக்கால் வாசி ஜனங்கள், இப்பயணியரை நம்பியே வாழ்கின்றனர். அவர்களுக்கு 2021ன் இந்த இரண்டாவது லாக்டவுன் ஒரு கடும் தண்டனை ஆகிவிட்டது. மே 10 லிருந்து 24 வரை தினசரி உபயோகத்திற்கு அவசியமில்லாத பொருட்களை விற்கும் கடைகள் மூடப்பட்டு விட்டன; மளிகை காலை 10 மணி வரை தான்; சாப்பாட்டுக் கடைகளில் அங்கு அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை – எடுத்துப்போக மட்டும் தான் முடியும் ; மிக மிக அவசியமான வேலைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல முடியும்.
இந்த இரு வருடங்களாக உணவகங்கள் நடத்தி வருவோருக்கு { இந்த ரிப்போர்ட்டர் உள்பட} அவரவர் சேமிப்புகள் கரைந்து விட்டன. பலருக்கு பணத்தட்டுப்பாடினால் எற்பட்ட மன உளைச்சலால் உடல் நலம் கெட்டு விட்டது. இதற்கு ஒரு முடிவே இல்லையா என்கிற ஏக்கம், இதுவே நிரந்தரமாகி விடுமோ எனும் அச்சம் பலரைக் காவு கொண்டிருக்கிறது.
எம்ஜியார் நகரில் வசிக்கும் 32 வயதுள்ள .B.கணேஷ், தனது கடன் தவணைகளை சரிவரக் கட்டத் தடுமாறுகிறார் – “ ஓர் இருண்ட இடத்தில் மாட்டிக்கொண்டு விட்டோமோ” எனக் கவலைப்படுகிறார். 3 டாக்சிகளுக்குச் சொந்தக்காரரான கணேஷின் மனைவி ஒரு ஹோட்டலில் பணி புரிகிறார்; அவர்களுக்கு இரு பெண்கள். “ “ “வருமானமில்லை என்பதை வங்கிகள் ஒத்துக்கொள்வதில்லை – அரசு உங்களைத்தான் வேலைக்குப் போகச் சொல்கிறதே , அதனால் நீங்கள் ஏதாவது வேலை செய்து தவணை கட்டத்தான் வேண்டும் “ என்கின்றன – வேலை எங்கே இருக்கிறது ? – என்னிடம் பணி புரிபவருக்கு முழு ஊதியமும் என்னால் கொடுக்க முடியாது, முடிந்ததைக் கொடுக்கிறேன் , அதிலேயே என் சேமிப்பு கரைந்து விடுகிறது “ என்று கவலைப்படுகிறார்.
தற்போது சாலைப்போக்குவரத்து குறைந்து விட்டது ; லேக்கில் ஒரு படகு கூட இல்லை – தென்றலின் அலைகள்தான் உள்ளன; குதிரைகள் இல்லை; சைக்கிள் சவாரிசெய்வோர் காணோம் ; லேக்ரோடைச் சுற்றியுள்ள கடைகள் பூட்டிக்கிடக்கின்றன; வறுத்த வேர்கடலையின் மணமோ, சுட்ட சோளத்தின் நறு மணமோ, மாங்காய்,கொய்யா விற்பனையோ இல்லை. அண்ணாசாலையில் கடைகள் அனேகமாக மூடப்பட்டு விட்டன; அத்தியாவசியப்பொருட்களை ஊரடங்கிற்குள் வாங்க மக்கள் விரைகிறார்கள். கோடைக்கானல் நகரம் வெகு அமைதியான, காலியான நகரமாக { அல்லது பாழடைந்த தாக – உங்கள் பார்வையைப்பொறுத்து ! } மாறி விட்டது. முக்கியமாக அடித்தட்டு மக்களுக்கு, வருமானம் வெகுவாகக் குறைந்து விட்டது.
லாக்டவுன் மறுபடி வரலாம் என்ற அச்சத்தால், டாக்சி உரிமையாளர் சங்கமும், சுற்றுலாப்பயணியோருக்கான சிறு கடை உரிமையாளர் சங்கமமும் இவற்றில் பணி புரிவோரும் மூஞ்சிக்கல்லில் ,ஏப்ரல் 19ந்தேதி கூடினர். வாழ்வாதாரம் கெட்டுப்போகாமல் சுற்றுலாவை முழுதுமாகத் தடை செய்யாது, சில விதிகளுடன் அனுமதிக்கக் கோரினர்.. பொறுப்பில் உள்ள வருவாய் அதிகாரி திரு எஸ். சிவகுமார்{ RDO IN CHARGE} , மாவட்ட ஆணையரிடம் இது பற்றிப் பரிந்துரைப்பதாக கூறியதால் போராட்டம் கை விடப்பட்டது. அதிகாரிகளிடமிருந்து இது வரை எந்தப்பதிலும் இல்லை .
ஊரையும் பாதுகாத்துக்கொண்டு, வாழ்வாதாரத்தையும் குலைக்காமல் எங்ஙனம் செயல்படுவது என்பது கேள்விக்குறியாகிவிட்டது. கோடைக்கானலின் BLOCK MEDICAL OFFICER , டாக்டர். அரவிந்த் அவர்கள் தந்த தகவலின் படி : மார்ச் 2020 லிருந்து மே 18,2021 வரை இங்கு மொத்தம் 728 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது; இதில் மார்ச் 1ம் தேதிக்கு மேல் ஏற்பட்ட 226 பேரில் மூவர் இறந்துள்ளனர்
லாக்டவுனை தீவிரமாக்குவதற்கு மூன்று முக்கிய காரணங்களுள்ளன என்கிறார் டாக்டர் அரவிந்த். அதிகமாக சுற்றுலாப்பயணீகளுடன் பழகும் கடைக்காரர்கள், டாக்சி ஓட்டுனர், உணவகப்பணியாளர்கள் ஆகியோரால் தொற்று அதி தீவிரமாகப்பரவும் அபாயம் உள்ளது. அதைச் சமாளிக்க கோடைக்கானலில் போதுமான மருத்துவ வசதி இல்லை { தவிர , கான்டாக்ட் ட்ரேசிங் செய்வதும் கடினம்} , ஜனங்களிடமும் பாதுகாப்பாக இருக்கும் பழக்கமும் இல்லை ; அதனாலே யே லாக்டவுன் அவசியமாகிறது ; மே 18ந்தேதி வரை 21 கொரொனா நோயாளிகள் இருந்ததாகக்கூறுகிறர். தொற்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட சதவிகிதம் 2.27%. 2000த்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன- அவற்றில் காய்ச்சல் போன்ற குறியீடுகள் உள்ளவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது; ஒன்றரை லக்ஷம் பேருக்குமேல் இதில் பயனடைந்துள்ளனர்; 17030 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மற்ற சில குறிப்புகள் கவனிக்கப்பட வேண்டியவையே .
காமாக்ஷி ஸ்டோர்ஸ் என்னும் மளிகைக் கடை உரிமையாளர், திரு மனோகரன் அவர்கள் கூறுகிறார் : “ இங்கு உழைத்துப்பிழைப்போர் எல்லோருமே வெகுவாக கஷ்டப்படுகிறார்கள்; சீசனுக்காக நாங்கள் எல்லோரும் நிறைய முதலீடுகள் செய்திருக்கிறோம்; பலவிதமான மசாலாப்பொருட்கள்,சாக்லேட்கள்,இன்னும் பல பொருட்கள் வாங்கி விட்டோம்; உணவு விடுதி நடத்துபவர்களே எங்களுடைய முக்கிய வாடிக்கையாளர்கள் ; உணவகங்களே நடக்கவில்லை என்னும்போது என்னிடம் அவர்கள் எப்படி வாங்குவார் ? உள்ளூர் வாசிகள் கூட போன வருடம் போல இப்போது வாங்குவதில்லை”
அண்ணா சாலையில் ஹார்டுவேர் கடை வைத்திருக்கும் ராஜன் ஸ்டோர்ஸ் அதிபர் திரு , நாகராஜன், தான் போன லாக்டவுனின் போது கடைச்சிப்பந்திகளுக்கு ஊதியம் வழங்கியதாகவும், தற்போது வியாபாரம் 75% குறைந்து விட்டதாலும் தற்சமயம் சற்று பெரிய இடத்திற்கு மாறி இருப்பதாலும், கடை வாடகையும் தந்து, 8 சிப்பந்திகளுக்கும் ஊதியம் தருவது எப்படி என்கிற கவலையில் இருக்கிறார்.
கோடைக்கானல் கிளப்பின் இணைச்செயலளார், திரு கிருஷ்ண ராஜேந்திரன், நிச்சயம் மாற்றம் வரும் என்று உறுதியாகச் சொல்கிறார். “ இங்கு அறைகளை வாடகைக்கு விடலாம் என்கிறார்கள், ஆனால் யாராவது வந்தால்தானே ? விருந்தினர் வர வேண்டும், அப்போதுதான் விடுதியாளர்கள் சமாளித்துக் கொண்டு, பணி புரிவோருக்கு தேவையான ஊதியமும் கொடுக்கமுடியும் – அவை ஒன்றோடொன்று சங்கிலிபோல் பிணைந்தவை “ என்கிறார் அவர்.
சில உள்ளூர் வாசிகளுக்கு வேறு விதமாக எண்ணங்கள் உள்ளன. வெகு காலமாக இங்கு வசித்து வரும் ஓய்வு பெற்ற மூத்த குடிமகன் ஒருவர், கோடைக்கானலில் லாக்டவுன் இருப்பதுதான் நல்லது , மக்கள் போன வருடத்திலிருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள வில்லை ; பாதுகாப்பாக மாஸ்க் அணிவதிலிருந்து, சமூக இடைவெளி கடைப்பிடிப்ப தும் இல்லை, சிறிது கூட கவனமில்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். “ கடை கண்ணி வைத்திருப்பவர், வியாபரமில்லை என்று புலம்புவதை விட, விவசாய சம்பந்தப்பட்ட மற்ற சிறு தொழில்களிலோ, தேனீ வளர்ப்பது ,முதலியவற்றிலோ தம்மை ஈடுபடுத்திக் கொண்டு மாற்றுத்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் ‘- நம் மக்கள் புத்திசாலிகள் , அவர்களால் நிச்சயம் முடியும்” என்று அறிவுரை கூறுகிறார்.
பல்வேறு திறமைகளை ப் புதிதாக கற்றுக் கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் அவசர தேவைக்கு முடியாது .
மூஞ்சிக்கல் அருகே, காட் ரோடில் காய் கடை வைத்திருக்கும் 26 வயதுள்ள சுபாஷினி, இரு குழந்தைகளுக்குத்தாய்; அவர் கணவர் ஓர் உணவகத்தில் சமைத்து வந்தவர், தற்சமயம் சம்பளமில்லை. போக்குவரத்துக்கோளாறால் காய் கடையும் மூடப்பட்டுவிட்டது. மக்கள் வாரச்சந்தைக்குச்சென்று வேண்டியவற்றை வாங்கி விடுவதால், மிகக் கஷ்டப்படுகிறார். “ எங்கள் கடைகளை மூடி விடுகிறார்கள் ஆனால் வாரச்சந்தைக்கு மட்டும் எப்படி அனுமதி தருகிறார்கள் என்பது புரியவில்லை ! போன வருடம் எவ்வளவோ தேவலை “ என்பதே அவருடைய கூற்று.
இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படித் தாண்டி வருவது என்றே கேள்விக்குறியாக உள்ளது. Herd immunity வருவதற்கு எல்லோருக்கும் தடுப்பூசி போடுவது என்பது ஒரு தீர்ப்பு. இதை எளிமைப்படுத்த, பல கடை, உணவக உரிமையாளர்கள் தங்களிடம் பணி புரிவோருக்கு தடுப்பூசி போட முயல்கிறார்கள். கோடைக்கானல் ரோட்டரி சங்கம், அரசாங்கத்தின் பிரைமரி ஹெல்த் சென்டர் முதலியவை வாக்சின் இலவசமாக வழங்க முன்வந்திருக்கின்றன,இலவச முகாம்களும் நடத்தி வருகின்றன, ஆனால் பலர், பல் வேறு காரணங்களுக்காக இவற்றைப் பயன்படுத்தி கொள்வதில்லை.
தேர்தல் கூட்டங்களும், பல்வேறு மதம்சார்ந்த திருவிழாக்களும் தொற்றை அதிகரிக்கச்செய்கின்றன என்று நம்பும் பலர், சுற்றுலா பயணிகள் வருவதை தடை செய்யக்கூடாது , ஆனால், விதிமுறைகளை கடுமையாகக்கடைப்பிடிக்கவேண்டும் என்கின்றனர். இதனைக் கருத்தளவில் ஆதரிக்கும் டாக்டர் அரவிந்த், எவ்வளவு தூரம் செயல் படுத்த முடியும் என்று சந்தேகிக்கிறார். மாஸ்க் அணிவதும், ஈ பாஸ் விதிகளை க்கட்டாயமாக்கியும, NEGATIVE RT-PCR டெஸ்டுகள் / தடுப்பூசிக்கான. சான்றிதழ்களைக் கட்டாயமாக்கியும், ஏனைய பல விதிகளைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டி இருப்பதால் , செயல்முறையில் சாத்தியப்படுமா , குறைபாடின்றி நடைமுறைப்படுத்துவது என்பது கடினம் என்கிறார். ஹோட்டல் உரிமையாளர்கள் விதிகளை ஏற்கிறார்கள், ஆனால் நடைமுறையில் அமல் படுத்துவது சாத்தியமில்லை என்பதே வாதம்.
கோடைக்கானலின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் எல்லோரும் , இவ்வளவு சிக்கல்களும் ஒரு நாள் தீரும், ஒரு நல்ல விடியல் வரும் என்றே எதிர் பார்க்கின்றனர்.
- Translated by Kamakshi Narayanan, Tamil translator at The Kodai Chronicle

ரத்னா ஸ்ரீ நாத்
இக்கட்டுரை ஆசிரியர் திருமதி ரத்னா ஸ்ரீ நாத் , ஹோட்டல் ஸ்டோனிக்ராப்டின் பார்ட்னர் - கோடைக்கானல் கான்வென்ட் ரோடில் வசிக்கிறார்.