இதைப்படிக்கும்நீங்கள், அளவுக்கதிகமாக கழிவுகள் சேரும் நமது மலைவாசஸ்தலங்களையும் சுற்றுச்சூழலைப்பற்றியும் அக்கரைப்படுபவராக இருப்பீர்கள். ப்ளாஸ்டிக் கழிவுகளையும், பொருட்கள் பொதிந்து வரும் கழிவுகளையும், இதைத் தடை செய்யாத அரசாங்கத்தையும் குறை கூறிய பின், கவனித்தால், அதிக அளவு இதன் பொறுப்பு நமது சமூகத்தையும் சார்ந்திருக்கின்றதெனப் புரியும்.
“ பார்வையாளர் “ போல் தள்ளி நின்று, யாரோ பார்த்துக்கொள்வார்கள் என இருப்பது ஒரு வகை; நம்மால் சுலபமாகச்செய்யக்கூடியது எதுவோ அதைச்செய்தால் போதும், செலவு குறைவாக உள்ள எதைச் செய்ய அல்லது வாங்க முடியுமோ அது – என்று குறைந்த ஈடுபாட்டுடன் இருப்பவரே அதிகம். இதில் செலவு அதிகமில்லாதது என்னும் போது, தரக்குறைவான, சுலபமாக மறுசுழற்சி செய்யமுடியாத பொதி பொருட்களை உபயோகித்துத் தயாரிக்கப்படுபவையும் அடங்கும்.
இந்தக் கட்டுரையில், நாங்கள், இந்தியாவின் வேவ்வேறு இடங்களிலுள்ள ஐந்து மலைவாசஸ்தலங்களில் கழிவு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள பொது மக்கள், தொழிலதிபர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்ற பலருடன் பேசித் தெரிந்துகொண்ட விவரங்களைப்பகிர்ந்து கொள்கிறோம். எங்குமே, முழுமையான தீர்வாக எதுவும் தெரியவில்லை. எச்சமில்லாக்கழிவாக, நிலப்பரப்பில் கொண்டு செலுத்தும்படியான முடிவு எதிலும் கிடைக்கவில்லை – ஆனால், இது முயற்சிக்கக்கூடிய ஒரு இலக்காகத்தான் தோன்றுகிறது.
மற்ற மலையிடங்களில் வசிப்போரிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்படிப் பார்க்கும் போது – மக்கள் மட்டுமோ, அரசாங்கமோ, இன்ன பிற தொழில்களோ – யாருமே ஒருவராகத் தீர்க்கமுடியாத பிரச்னை இது என்று தெளிவாகப்புரிகிறது. இங்கு தான் எல்லோரும் சேர்ந்து கூடிச் செயலாற்றினால் மட்டுமே, இலக்கை எட்ட முடியும். “ சரியாகக் கையாளாத கழிவு மேலாண்மை” என்பதைத் “தவறாகக் கையாளப்பட்ட வளங்கள்” என்றே கொள்ளவேண்டும்.
இவ்விரண்டிற்கும் வித்தியாசம் என்பது இதுதான் : முதலாவது – முழுமையாகக் கையாளாமல், மறுசுழற்சியில் தடைப்பட்டு, சில பொருட்கள் “ வீணாகி “ விடும்; இரண்டாவது வகை – எல்லாக்கழிவுகளும் உபயோகப்படுத்தப்பட்டு, கடைசியில் ஏதாவது உபயோகிக்கும்வகையிலோ அல்லது எரிபொருளாகவோ பயன்படும், ஆனால் இதற்குத் தேவையான அமைப்புகள் சரிவர இருந்தால்தான் முடியும்.
இந்தத் தொடரில் இந்த ஐந்து மலையிடங்களிலும் மக்கள் எதிர்கொண்ட சவால்களையும், அவர்களுக்குக்கிடைத்த வெற்றிகளையும் பார்க்கலாம். அதன் முன், இவ்விடங்களிலிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான ஒன்பது பாடங்களையும் பற்றி அலசலாம்.
1 : மக்கள் பொறுப்பேற்று நடத்துவது மிக அவசியம்
மலை நகர்களில் ஒன்றைத்தவிர, மற்றவற்றிலெல்லாம், கழிவு மேலாண்மை என்பது முதலில் தனி ஒருவராலோ அல்லது ஒரு சிறு குழுவாலோ ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ஓர் பெரிய குழுமம் அல்லது நகராட்சி எடுத்துச் செயலாக்கிருப்பது தெரிய வருகிறது.- தனது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள ஆரம்பித்து, அதில் சேரும் கழிவுகளை மறுசுழற்சி செய்கையில் பெரிய நிறுவனம் அல்லது நகராட்சியினுதவியால் அம்முயற்சி விரிவடைந்திருக்கிறது. – பன்ச்கனி யில் மோனா பத்ரோ, முஸ்ஸூரியில் டானா க்ரைடர், குன்னூரில் “ சுத்தமான குன்னூர்” திட்டம், ஊட்டியில் “ ஊட்டியைஅழகாக்கும்” திட்டம். இதிலிருந்து, நகர மக்களும், அரசாங்கமும் மற்ற அமைப்புகளும் ஒருங்கிணைந்து சிக்கல்களைத் தீர்க்க விரிவான திட்டங்கள் ஏற்படுத்தி செயல்பட்டிருக்கின்றனர்.
2 : ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காலமுண்டு – அதை அறிந்து, உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கழிவு மேலாண்மை சரிவரச் செயல்படும் ஊர்களிலும், ஏதோ ஒரு நிகழ்வு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
ஊட்டியில் : எச்சமில்லாக்கழிவு மேலாண்மைபற்றி உணவகங்களோடு சேர்ந்து மக்கள் நடத்திய ஒரு கண்காட்சி.
முஸ்ஸூரியில் : “கீன்” [ KEEN ] எனும் அரசுசாரா அமைப்பு, அங்குள்ள வுட்ஸ்டாக் பள்ளிக்கு மட்டுமின்றி ஊருக்கே உதவிசெய்ய முன்வந்தது.
குன்னூரில் : ஊரின் நடுவே ஓடும் ஒரு ஓடையை சுத்தம் செய்ய ஆரம்பித்தபோது, கழிவுமேலாண்மையில் ஆர்வமுள்ள ஊர் மக்கள் ஒன்றுகூடியது..
பன்ச்கனியில் : நகரின் பாதிக்குமேற்பட்ட மக்கள்தொகையான அங்குள்ள உறைவிடப்பள்ளிகளின் மாணாக்கர்களை ஒருங்கிணைத்து பணி புரிய வைத்தது. – என, ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நிகழ்வு.
3: சவாலின் மூன்று கோணங்களையும் ஆராய்ந்து மேற்கொள்ளல் :
இந்தச்சவாலின் மூன்று கோணங்களையும் எந்த ஊருமே சரியாகப்புரிந்து செயல்படவில்லை – மூன்று எனச்சொல்பவை – ஜூடித் எங்க் [ JUDITH ENCK – BEYOND PLASTICS ] “ பிளாஸ்டிக்கிற்கு அப்பால் “ எனும் அவரது புத்தகத்தில் கூறுகிறார் – வீட்டிலுள்ள தண்ணீர் வாளி நிரம்பி வழிந்தால், முதலில் குழாயை மூடுவீர்களா அல்லது துடைக்கத்துணியைதேடுவீர்களா ?
பல்வேறு பிரச்சாரங்களும் முயற்சிகளும், குழாயை மூடுவதைவிட, துடைத்துச்சுத்தம் செய்வதிலேயே தங்கள் ஆற்றலைச் செலவிடுகின்றன. குழாயை முதலில் மூடவேண்டியது போல், கண்டபடி குப்பை சேர்வதைத்தவிர்ப்பது கடினம் – ஆனால், வியாபார நோக்கில் பார்க்கும் போது, ஓரிடத்திலிருந்து குப்பையை அகற்றி வேறெங்காவது கொண்டு சேர்த்துவிடுவது எளிது. குப்பையை சரிவர தரம் பிரித்து அகற்றி,மறு சுழற்சி செய்து, [அல்லது எரிபொருளாக்கி], எதுவும் வீணாகிவிடாமல் செய்வதே மேல்.
4 : சுற்றுலாச் சார்ந்த ஊர்களுக்கு, கழிவுமேலாண்மை என்பது சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிக்
கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.
சாதாரணமாக, மலை இடங்களில், கழிவுமேலாண்மை என்பது அங்குள்ள நகர வாசிகளுக்குத் தேவையான அளவில் மட்டுமே இருக்கும்; திடீரென அதிகரிக்கும் சுற்றுலாப்பயணியரால் வரும் அதிகப்பட்ட குப்பைகளைச் சமாளிக்கத் திணறுவார்கள். வாரக்கடைசிகளிலும் விடுமுறைகளிலும் மற்ற நாட்களைவிட ஐந்தல்லது அதற்கும் மேற்பட்ட அளவு மக்கள் கூட்டம் வரும்போது சமாளிக்க முடிவதில்லை.
நகராட்சிகள், தமது நகர மக்கள் தினந்தோறும் போடும் குப்பைகளைச் சேகரிப்பதில் கஷ்டப்படுவதில்லை; கூட்டம் வரும் போது குப்பை சேகரிக்கப்போதுமான குப்பைத்தொட்டிகளும், அவற்றை அள்ளிப்போகத் தேவையான பணியாளர்களும், வண்டிகளும், கொட்டித் தரம்பிரிக்க வசதியான இடங்களும் இருப்பதில்லை.
5 : குப்பைக்கு எதிரான பிரச்சாரங்களை மட்டும் மேற்கொள்ளாதீர்கள் :
குப்பையைக்கண்டபடி வீசாமலிருக்கச் சொல்லும் பிரச்சாரங்கள் எப்போதுமே அதிக அளவில் நடப்பவை. – மேன்மக்கள் வசிக்கும் பகுதிகளையும் பெரிய வணிக வளாகங்களுள்ள இடங்களையும் அழகுபடுத்திவிட்டால் மட்டும் போதாது – அங்குள்ள மக்காத கழிவுகளை அகற்றி, வசதியற்றோர் வாழுமிடங்களில் சேர்ப்பதுதான் நடக்கிறது என்பது யதார்த்தம். இது பார்ப்பதற்கு ஓர் நகரம் அழகாகிவிட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் எந்த விதத் தீர்வுமளிப்பதில்லை. இதை நடைமுறைப்படுத்துவதிலேயே, பல அமைப்புகளின் நிதி தீர்ந்து விடுவதால், முறையான சுழற்சி நடப்பதில்லை.
6: சமவெளிகளில் கடைப்பிடிக்கும் முறை மலைகளில் சரிவராது :
சமவெளிகளில் உரக்கிடங்கு அமைப்பது போல் மலைப்பிரதேசத்தில் செய்யமுடியாது. நுண்ணுயிரிகளின் செயலால் உரக்கிடங்கில் சூடு அதிகரிக்கும் என்பது உரத் தயாரிப்பில் ஈடுபட்டோர் யாவருக்கும் தெரிந்த விஷயம் – அதனால்தான் கழிவுகள் மக்குவதும் எளிதாகிறது. கார்னெல் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கை : “……… உரத் தயாரிப்பின்போது வெப்பம் அதிகரிக்கும்போதுதான், கழிவுகள் மக்குவது என்பது நடக்கும்; இது அக்கிடங்கின் அளவையும் அதிலுள்ள பொருட்களின் தன்மையையும் பொறுத்திருக்கிறது “ என்று தெரிவிக்கிறது. அதிக அளவில் உரக்கிடங்கில் தண்ணீர் சேர்ந்தால் அது கிடங்கைக் குளிர்வித்துவிடும்; மலைப்பிரதேசத்தில் சாதாரணமாகவே இருபத்தியைந்து டிகிரிக்குக்கீழே இருக்கும் வெப்ப நிலை, உரத்தயாரிப்பிற்கு ஏற்றதாக இருக்காது.
கடல் மட்டத்திலிருந்து 1293 மீட்டர் உயரத்திலிருக்கும் பன்ச்கனி தான் மற்ற ஐந்தை
விடத் தாழ்வான உயரத்திலிருப்பது – மற்றவை கடல் மட்ட்த்திலிருந்து 1500 லிருந்து 2400 மீ வரை உயரமானவை.
வீட்டிலேயே உரம் தயாரிப்பதும் இக்காரணத்தினாலேயே தடைப்பட்டுப்போகிறது – இதனால், தரம் பிரிப்பதும் கடினமானதாகி, மேலாண்மைக்கு இடையூறு விளைவிக்கிறது.
7 : மறு சுழற்சியால் பொருளீட்ட முடியும்.
வேறெங்கோ தொழிற்சாலையில் பார்சல் செய்யப்பட்ட எந்தச்சிறு பொருளும் மலைகளிலுள்ள கடைகளுக்குச் சென்றடைந்தாலும், அந்தப்பார்சல் செய்யப்பட்ட பேப்பரோ பிளாஸ்டிக்கோ மறுபடி மலையிலிருந்து கீழிறங்கி மறு உபயோகத்திற்குச் சென்று அதன் சுழற்சியை முடித்துவைக்க எந்தவொரு அமைப்பும் நடைமுறைப்
படுத்தப்படவில்லை. இதனைச் செய்ய வாய்ப்புக்கள் இருந்தாலும் சரியான வழிமுறைகள் அமைத்து மறுபடி மலைகளிருந்து கீழே கொண்டு சென்று மறுசுழற்சி மையங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் அத்தியாவசியமாகத் தேவை.
அட்ரியன் மெர்ரிங்டன் எழுதிய “ பிளாஸ்டிக் பொறியியல் பயன்பாட்டுக்கையேட்”டில்
[ APPLIED PLASTICS ENGINEERING HANDBOOK – 2017 BY ADRIAN MERRINGTON ] – நான்கு விதமான பிளாஸ்டிக் மறு சுழற்சி பற்றிக்குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவித பொருளாதாரச் சங்கிலித்தொடர் இருக்கிறது.
குறிப்பாக – பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்குத் தேவையான அளவு மலையிடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதில்லை – அவற்றைக்கீழேதான் எடுத்துச் செல்ல வேண்டும்.
8: கழிவுகள் சேகரிப்பதற்கு சமூக அமைப்பில் மாற்றம் வேண்டும் :
ஆயிரக்கணக்கான வருடங்களாக குறிப்பிட்ட ஓர் சமுதாயத்தினரே கழிவு சேகரிப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், மற்றவர்களிடையே குப்பை மேலாண்மை பற்றிய பொறுப்பில்லாமல் போய்விட்டது. அரசுசாரா அமைப்பிலுள்ள ஒரு கழிவுமேலாண்மை இயக்கத்தை நிறுவகிக்கும் ஒருவர் கூறியபடி, அவர்களிடம் வேலை பார்க்கும் நூற்றிமுப்பத்து நான்கு பேரில் நூற்றிமுப்பது பேர் குறிப்பிட்ட ஓர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார்கள். பெயர் குறிப்பிடவிரும்பாத அவர் கூறியது : மற்றச் சமுதாயத்தினரும் குப்பை மேலாண்மையினால் தமது தரம் தாழ்ந்து விடும் என்று நினக்காமல் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு செயல் பட்டால் நல்லது “ என்பதே.
9: விழிப்புணர்வு இல்லாமலில்லை; செயல் பாடுதான் இல்லை என்பதே பிரச்சினை.
இவ்வைந்து ஊர்களிலும் ஆராய்ந்ததில், அரசாங்கமும், ஆர்வலர்களும், மக்களும்,ஊடகங்களும் இதுவரை செய்துள்ள பிரச்சாரங்கள் பயனற்றவையாகிவிடவில்லை என்று தெளிவாகிறது – எல்லாவித மக்களுக்கும் பிளாஸ்டிக்கைக் கண்டபடி வீசியெறியக்கூடாது, முறையாகத் தரம் பிரிக்கவேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு என்பது நன்றாகவே இருக்கிறது – தமது தோட்டதிலோ, வெளியிலோ எறிந்த பிளாஸ்டிக் மக்கி மண்ணாகாது என்பதும் மிகத்தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் – இந்த 2021 ஆண்டில், இருக்கும் பிரச்சினை குப்பையைப்பற்றிய தெளிவல்ல, – செயல்பாடுதான்.
ஒவ்வொரு நகரின் தனிப்பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் களை அழுத்திப் படிக்கவும் :