இக் கட்டுரையின் ஆங்கில மொழி பெயர்ப்பும் கிடைக்கும்
இந்த உலகில் கோடிக்கணக்கில் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் வெறும் நாற்பது கோடி மக்கள் தான் பழங்குடி மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பழங்குடி மக்கள் முப்பத்தாறு பிரிவுகளாகவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு என்று தனி மொழியையும் கலாச்சாரத்தையும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மொழியாலும் கலாச்சாரத்தாலும் வேறுபட்டு வாழ்ந்தாலும் இந்த மக்களின் எண்ணம் ஒன்று தான். ஆதி காலம் முதல் தலைமுறை தலைமுறையாக இவர்கள் காட்டோடு இணைந்து வாழவேண்டும் என்பதே ஆகும்; இது வெறும் வார்த்தையில் சொல்வது அல்ல. இந்த பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர் தான் பளயர் இன மக்கள் .இவர்கள் கொடைக்கானல் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஓங்கி உயர்ந்த மரங்கள் ,அருவிகள், உயர்ந்த மலைத்தொடர்களை தங்களின் முன்னோர்களாகவும் வன தேவதையாகவும் வழிபட்டு வருகின்றனர்.

தற்காலச்சூழலில், அறிவியலையே ஆராயும் இந்த உலகில், வெறும் இரண்டு சதவிகித அறிவைத்தான் இம்மக்கள் வெளி உலகைப்பற்றித் தெரிந்துகொள்ளப் பயன்படுத்துகின்றனர். கல்வி நாகரிகத்தில், இந்தத் தலைமுறை மக்களின் குழந்தைகள்தான், முதன்முறையாக வெளி உலகக் கல்வி பெறுகின்றனர். தமது குழந்தைகளை இங்ஙனம் படிக்க வைப்பதில், பல பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தாலும், பெற்றோர் தயங்குவதில்லை – குறைந்த பட்சம் 10 அல்லது 12 வது வகுப்பு வரையாவது படிக்க வைக்கும் நிலை மாறி, இன்று, B.COM, C.A. போன்ற உயர் கல்வியும் பயில ஆரம்பித்து விட்டனர். இருந்தபோதும் வெளிஉலக மக்களுடன் பழக இவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சிறுவர்கள் வெளி உலகத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வத்தோடு இருந்தாலும் மற்றவர் பழக்கவழக்கங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. இவர்கள் குடும்பங்களில் சிறு வயது ஆண்கள் அதிகம் வனத்துறையில் வேலை பார்ப்பதையே விரும்புகின்றனர் – இதுவரை மூன்று நபர்கள் வனத்துறையில் வேலையிலிருக்கிறார்கள். இவர்கள் தமது குடும்பத்துப் பெண்களை வேறு சாதியிலும் மணம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்த பளயர் இன மக்கள், பாசான் எடுத்தல், தேன் எடுத்தல், வள்ளிக்கிழங்கு தோண்டுதல் போன்றவற்றையே தொழிலாகச் செய்துவருகின்றனர். இவர்கள் தொழில் ரீதியாகவும் வனப்பகுதியையே சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். பாசான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இது தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு வாசனைப் பொருளாகும். கடைகளில் “ கல்பாசி “ என்று கூறப்படும் இந்த பாசான், சிக்கன் பொடி, மட்டன் பொடி, கரம் மசாலா, பிரியாணி மசாலாக்களில் பெரிதும் பயன்படுத்தும் ஒரு வாசனை பொருள். பட்டை ,கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை பொருட்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாசி அடர் வனப்பகுதிகளில் மரங்களிலும் கற்களிலும் வளர்கிறது.
இந்த பளயர் இன மக்கள் தேனை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். அவை சிறுதேன்,பெருந்தேன், குச்சிதேன் ஆகும். பெரும்பாலும் தேன் எடுக்க சிறந்த காலமாக ஆடி, தை, மாசி ஆகிய மாதங்களையே தேர்வு செய்கின்றனர். இவர்கள் தேன் வகைளையும் பூந்தேன், குஞ்சுத்தேன் நல்லதேன் என மாதத்திற்கு ஏற்றவாறு பிரித்து வைத்து கொள்கின்றனர். தேன் எடுக்கச் செல்வதற்கு முன் அவர்களின் வனதேவதையை வழிபடுகின்றனர் இவர்கள் வழிபடும்போது மஞ்சள், பச்சைபூ (ஒரு வகையான செடி) ஒரு சிறிய கல் ஆகிய மூன்றையும் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபட்டு மூன்று நாட்களுக்கு பிறகுதான் தேன் எடுக்கவும் இம்மக்கள் காட்டிற்குள் செல்கின்றனர். இவர்கள் தேன்அடைகளை எடுக்கும் போது கல், கத்தி, அருவாள், நெருப்பு போன்றவற்றைப் பயன் படுத்துவது இல்லை.
இந்த பாசான்களை எடுப்பதையே இம் மக்கள் தொழிலாக செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பாசான்களை எடுப்பதற்கு உளி என்னும் கருவியை இவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த பாசான்களை மழைக் காலங்களில் இவர்களால் மரம் ஏறி எடுக்க முடியாது. ஏன் என்றால் மரம் ஏறும் போது மரம் வழுக்கி விடும் அபாயமும் உள்ளது. இவ்வகையான பாசான்களை எடுப்பதற்கு காலை ஒன்பது மணிக்கு காட்டிற்குள் சென்று விடுகின்றனர்.இவர்கள் காட்டிற்குள் செல்லும் போது இவர்களுக்கு முன் செல்பவர் இலை குச்சிகளை உடைத்து போட்டுக்கொண்டே செல்கிறார். அது ஏன் என்றால் தங்களுக்கு பின் வருபவர்கள் வழி மாறிப் போகாமல் இருப்பதற்காக வழியில் போட்டுக்கொண்டே செல்கின்றார். அவரின் பின் வருபவர்கள் அதனை கண்டு முன்செல்பவரை பின் தொடர்ந்து செல்கிறனர். .காட்டிற்குள் சென்றதும் அனைவரும் ஒரு இடத்தில் கூடி நின்று அவர்களின் வனதெய்வத்தை வழிபடுகின்றனர். அவர்களின் வழிபாட்டு முறையும் இவர்களால் தெரியாமல் கூட வனத்தில் உள்ள மரங்களுக்கும் வன உயிரினங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பாதிப்பும் எற்படுத்த கூடாது என்பதேயாகும். பின்பு அனைவரும் தனி தனியாக பிரிந்து சென்று பாசான் எடுக்க தொடங்குகின்றனர். தங்களிடம் இருந்து தொலைவில் இருக்கும் நபரை கண்டு கொள்ள “ஊய்” என்னும் சத்தத்தை எழுப்பித் தொலைவில் உள்ளவரை கண்டு கொள்கின்றனர்.
ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக நான்கு அல்லது ஐந்து மரங்களில் ஏறி பாசான் எடுக்கின்றனர். இவர்கள் ஆண் பெண் என வேறுபாடு ஏதும் இல்லாமல் பாசான் எடுக்கின்றனர். ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு கிலோ பாசான்களை எடுக்கிறார்கள். ஒரு பெண்ணும் மூன்று அல்லது நான்கு கிலோ பாசன்களை எடுக்கிறார். இவர்களால் மழைக் காலங்களில் மரம் ஏறி பாசான் எடுக்க முடியாத நிலையும் உண்டு. ஏன் என்றால் மரம் வழுக்கி விடும் அபாயமும் உண்டு. அது மட்டும் இன்றி விஷஜந்துகளான பாம்பு, பல்லி, தேள் முதலியவையும் காட்டுமாடு, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகளும் தாக்க நேரிடும் நிலையும் உள்ளது. அந்த அபாயத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஒரு வகையான மூலிகை செடிகளை இம்மக்கள் பயன்படுத்துகின்றனர். பின்னர் காட்டில் இருந்து கொண்டு வந்த பாசான்களை ஐந்து அல்லது ஆறு நாட்கள் வெயிலில் போட்டுக் காயவைத்துப் பாசானில் உள்ள மரத்தூள் தனியாகவும் பாசான்களை தனியாகவும் பிரித்து எடுக்கின்றனர். .இவ்வாறு தரம் பிரிக்கப்படும் ஐந்து கிலோ பாசான்கள் மூன்று கிலோவாகக்கூட குறைகிறது. இம்மக்களால் ஒரு வருடத்தில் ஒன்பது மாதங்கள் மட்டுமே பாசான்களை எடுக்க முடியும்; மீதம் மூன்று மாதமும் மழைக்காலம் என்பதால் இவர்கள் கூலி வேலைக்கு செல்கின்றனர். மற்றும் அங்கங்கே கிடைக்கும் சிறு சிறு வேலைகளை நம்பியே இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தேன்எடுத்தல் இம்மக்களின் மற்றோர் தொழில்.

இந்த பளயர் இன மக்கள் தேனை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். அவை சிறுதேன், பெருந்தேன், குச்சிதேன் ஆகும். பெரும்பாலும் தேன் எடுக்க சிறந்த காலமாக ஆடி, தை, மாசி ஆகிய மாதங்களையே தேர்வு செய்கின்றனர். இவர்கள் தேன் வகைளையும் பூந்தேன், குஞ்சுத்தேன் நல்லதேன் என மாதத்திற்கு ஏற்றவாறு பிரித்து வைத்து கொள்கின்றனர். தேன் எடுக்கச் செல்வதற்கு முன் அவர்களின் வனதேவதையை வழிபடுகின்றனர் இவர்கள் வழிபடும்போது மஞ்சள், பச்சைபூ (ஒரு வகையான செடி) ஒரு சிறிய கல் ஆகிய மூன்றையும் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபட்டு மூன்று நாட்களுக்கு பிறகுதான் தேன் எடுக்கவும் இம்மக்கள் காட்டிற்குள் செல்கின்றனர். இவர்கள் தேன்அடைகளை எடுக்கும் போது கல், கத்தி, அருவாள், நெருப்பு போன்றவற்றைப் பயன் படுத்துவது இல்லை.
தேனீக்களை விரட்டுவதற்கு ஊன்னிகுச்சிகளை கொண்டு தேன்கூடு இருக்கும் இடத்தில் இருந்து பத்து அடி தூரத்தில் வைத்து புகை மூட்டி தேனீக்களை விரட்டுகின்றனர்.அதன் பின் தேன் அடைகளை இவர்கள் சேகரிக்கின்றனர் . எடுத்த தேன்கூடுகளில் இருந்து கொஞ்சம் எடுத்து ஒருகல்லின் மேல் வைத்துவிட்டு வருகின்றனர். அது எதற்காக என்றால் இந்த தேனை தங்களுக்கு கொடுத்த தேனீகளுக்கும்,இந்த தேனீக்களுக்கு வாழ இடம் கொடுத்த மரத்திற்கும், நன்றி செலுத்தும் விதமாகக் கல்லில் வைப்பதாக இம் மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு சேகரித்த தேன் அடைகளை வெள்ளைத் துணியை கொண்டு பிழிந்து சிறு சிறு டப்பாக்களில் அதனை ஊற்றி சேகரித்தும் வைக்கின்றனர். அதனை நானூறு அல்லது ஐநூறு ரூபாய்க்கு விற்கவும் செய்கின்றனர்.

மேலும் இந்த பளயர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய நடனம், மேளம் அடித்தல், குழலூதுதல், மூலிகை செடிகளைக் கையாளும் விதம், ஆகியவை தங்களோடு அழிந்துவிடக்கூடாது என்ற மேன்மையான கருத்தால் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கும் அவற்றைக் கற்பிக்கிறார்கள்..

இந்த பளயர் இன மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு எந்த மரத்தில் மேளம் செய்ய வேண்டும், எதில் குழல் செய்ய வேண்டும் என்பதையும், வனங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், வனத்தோடு எவ்வாறு இணைந்து வாழவேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் எண்ணம் ஒன்றுதான் – வனங்களுக்கு நம்மால் இயன்றளவு பாதுகாப்புத்தர வேண்டும், வனம் அழியாமல், அசுத்தமாகாமல் இருக்க வேண்டும் என்பதே – தங்கள் மூதாதையர் தங்களுக்குக் கற்றுக்கொடுத்த இதையே அவர்கள் தங்கள் அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார்கள். எண்ணமும் செயலும் ஒன்றாக, வனத்தோடு ஒன்றி வாழ்வதே தமது வாழ்க்கை என்றும் கூறுகிறார்கள்.

இவர்களுக்கு வனமே வாழ்வு வாழ்வே இவர்களின் வனம்; பழங்குடி மக்களைப் பாதுகாப்போம் – அவர்கள் வனங்களைப் பாதுகாப்பார்கள். நலமாக வாழ்வோம் -- நன்றி.

ஆசிரியர் : முருகேஸ்வரி
பளயரினப்பெண்ணான இவர்,12ம் வகுப்பு படித்திருக்கிறார்; தாண்டிக்குடி அருகே கணவர் யேசுதாசுடனும் சிறு மகனுடனும் வசிக்கும் முருகேஸ்வரி, தினக்கூலி வேலைக்குச் சென்றாலும், பளயர்களின் வாழ்க்கையைப்பற்றியும் அவர்களது கலாச்சாரத்தைப்பற்றியும் எழுதுவதில் மிக்க ஆர்வம் கொண்டவர்.