கோடைக்கானலில் வசிப்போரின் வீடுகளுக்கு நீங்கள் செல்லும் போது, அவர்கள் உணவருந்தும் மேஜையின் மேலோ, அல்லது அலமாரிகளிலோ, மிக அழகிய பீங்கான் கலங்களைப் பார்க்கமுடியும்., அடைகாக்கும் கோழி உட்கார்ந்திருப்பதைப் போல், பெரிய தேனீர் கெண்டிகளும், அழகிய விதவிதமான வண்ணங்களில் தேநீர் கோப்பைகளும் மற்ற பீங்கான் வட்டில்கள், கிண்ணங்கள் போன்றவற்றைப் பார்த்திருக்கலாம் – அவற்றில் காபி, தேநீர், அல்லது சூடான சாக்லேட் பானம் அருந்தியிருக்கக்கூடும். இவை அனைத்தும் இங்கு கோடைக்கானலில் உள்ள “குயவனின்குடிசை“ என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டவை.
கோடைக்கானலில் ஆவின் நிறுவனத்தின் எதிர்ப்புறமிருந்த பாட்டெர்ஸ்ஷெட், என்றுமே இந்த ஊருக்கு வரும் விருந்தினருக்கு மிகப் பிடித்தமான கடை – அதனுடன் சேர்ந்தே ஒரு தேநீர் உணவகமும் இருந்ததால், இங்கு வருவோரிடம் பிராபல்யம் அடைந்து விட்டது. PT ரோடில் வருவோர் போவோருக்கு இந்தக் கடை பளிச்சென்று கண்ணில் பட்டாலும், இது ஆரம்பித்த விதமும், கோடைக்கானலுடன் இருக்கும் பிணைப்பும் எல்லோருக்கும் தெரியவாய்ப்பில்லை
கோடைக்கானல் சர்வதேசப்பள்ளியில் ஆசிரியர்களாக இருந்த ராபெர்ட் க்ரான்னெர், ஜயஸ்ரீ குமார், இருவருக்குமே பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்கிற அவா எப்போதுமே இருந்து வந்தது. ஏற்கனவே ஒரு அனாதை ஆசிரமத்திற்குத் தாளாளர்களாக இருந்த போதிலும், இன்னும் ஏதேனும் நிரந்தரமாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வமுண்டு.. கிராமத்தில் இளம் வயதுள்ள கே. சுப்ரமணியம் என்ற பெயருடய குயவர் ஒருவரைப் பார்த்தபோது, பாப் க்ரான்னெருக்கு நாமே ஒரு குயக்களம் ஆரம்பித்து, குழந்தைகளுக்கு ஓர் வாழ்வாதாரம் செய்து கொடுத்தாலென்ன என்ற எண்ணம் உருவாகியது.

குயவர்களுக்குப் பயிற்சி அளிக்கவோ, குயக்களம் அமைப்பதிலோ இருவருக்குமே எந்த விதமான முன் அனுபவமும் சிறிது கூடக் கிடையாது . இதனால், பாண்டிச்சேரியிலுள்ள “கோல்டன் ப்ரிட்ஜ் பாட்டெரி” – GOLDEN BRIDGE POTTERY” என்ற குயக்களத்தை நடத்தி வந்த ரே மீக்கர் என்பவரைத் தொடர்பு கொண்டு, சுப்ரமணியத்திற்கு நல்லதரமான குயக்கலங்கள் தயாரிக்கப் பயிற்சி தருவாரா எனக்கேட்பதென்று முடிவுசெய்தனர். இதன் முன்னர், உள்ளூர் குயவர்களோடு வேலை செய்திராத ரே மீக்கர் இது ஒரு முட்டாள்தனமான யோசனை என்றதை நகைத்துகொண்டே கூறினார் ஜயஸ்ரீ. இருந்தாலும், பாப் க்ரான்னெரின் உற்சாகம் மீக்கரையும் தொற்றிக்கொள்ளவே இந்தச் சவாலான பயிற்றுவிக்கும் பணியை அவர் ஏற்றுக்கொண்டார். அடுத்த நான்கு வருடங்களுக்கு இந்தப் பயிற்சி தொடர்ந்தது. மாதந்தோறும் சுப்ரமணியத்தின் கைச்செலவுக்குப் பாப்க்ரென்னர் பணம் அனுப்பி வந்தாலும், ரே மீக்கர் எந்த விதமான பயிற்சிக்கட்டணமும் வாங்கிக் கொள்ளவில்லை.
எனக்கோ பாப் க்ரான்னருக்கோ வணிகஅறிவு என்பது சிறிது கூடக் கிடையாது – இந்தக் குயக்களம் ஆரம்பிப்பதும் அமைப்பதும் அதுவாகவே நடந்தது – எல்லாம் அதனதன் இடத்தில் தானாகவே அமைந்து கொண்டன
— ஜயஸ்ரீகுமார்.
ஜய ஸ்ரீ குமார் கூறுகிறார் – “ எனக்கோ பாப் க்ரான்னெருக்கோ வணிகஅறிவு என்பது சிறிதுகூடக் கிடையாது – இந்தக்குயக்களம் ஆரம்பிப்பதும் அமைப்பதும் அதுவாகவே நடந்தது – எல்லாம் அதனதன் இடத்தில் தானாகவே அமைந்துகொண்டது” .. மற்றப்படி நடந்ததெல்லாம் இந்தக்குயக்களம் ஆச்சரியகரமாக சீரான ஒத்திசைவாக வளர்ந்த விதம் என்றே கூறவேண்டும்.
சுப்ரமணியம் அவரது பயிற்சி முடித்த சமயம், அருகில் ஒரு மலைப்பகுதியில் சிறுபரப்பளவுள்ள நிலம் ஒன்று விலைக்கு வந்தது – அதில் அரை ஏக்கரை “பாட்டர்’ஸ்ஷெட்” வாங்கியது. மீதமிருந்த நிலத்தை ஜயஸ்ரீயும் பாப் க்ரான்னெரும் நடத்தி வந்த அறக்கட்டளையைச் சேர்ந்தோரும் வேறு சில நண்பர்களும் இணைந்து வாங்கியதில், ஒருகுயக்களனும், அதில் பணி புரிவோருக்கும் அவர்களது குடும்பங்கள் வசிப்பதற்கும் வீடுகள் கட்டுவதற்கு இடம் கிடைத்தது. அந்த மலைச்சரிவில் மீதமிருந்த நிலம் [ ஜய ஸ்ரீயும் பாப் க்ரான்னெரும் அவர்களது பணிக்காக ஆரம்பித்திருந்த ] அறக்கட்டளையின் மற்ற உறுப்பினர்களும் வேறு சில சினேகிதர்களும் இணைந்து வாங்கினர்.
பரம் வீர்பேடி எனும் கட்டிட வடிவமைப்பாளர் ஒருவர் இந்தக் குயக்களனை வடிவமைத்துக் கொடுத்தார். அருட்தந்தை ஜேம்ஸ் கிம்ப்டொமின் உதவியால் கட்டிடவேலைக்கு ஆட்களும், மற்ற சிலரின் உதவியால், கட்டிடப்பொருட்களும் கிடைத்தன. கோடைக்கானல் சர்வதேசப்பள்ளியில் படிக்கும் மாணாக்கர் ஒருவரின் தந்தை, அசோக் திரோட்கர் எனும் பொறியியல் வல்லுனர், இங்கிருக்கும் போது கிடைத்த தனது ஓய்வுநேரத்தில் கட்டிடம் கட்டும் பணியை மேற்பார்த்துக் கொண்டார். பாண்டிச்சேரியிலிருந்து வந்த ரே மீக்கர், குயக்களனை இயக்கத் தேவையான திரிகை, சுடுமனை, மற்ற இயந்திரங்களை நன்கொடையாக அளித்து, களனை நிறுவி, சுப்ரமணியத்திற்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார்.


“ குயவனின்குடிசை”யின் குயக்களன் – படம் உபயம் : பாட்டெர்’ஸ் ஷெட்.
சுப்ரமணியத்தின் உறவினர், செல்வராஜும் இதில் சேரவே, மும்முரமாக வேலை ஆரம்பிக்க எல்லாமிருந்தது. ஆனால், வினைந்த பாண்டங்களை வைத்து வியாபாரம் செய்யக் கடை எதுவும் தோதாகக் கிடைக்கவில்லை. தொழிலதிபரும் பரோபகாரியுமான ஜே.டி.ஜெயச்சந்திரன், தனக்குக் கடைவீதியில் பாரத ஸ்டேட் வங்கியினருகில் இருந்த இடத்தை, வாடகையின்றிக் கொடுக்க முன் வந்தார். இதனால். “பாட்டெர்’ஸ்ஷெட்” – ‘ குயவனின்குடிசை “ என்ற இக்குயக்களம் பிறந்தது – இதில் வரும் வருமானத்தை மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் மேம்பாட்டுக்குக் கொடுக்க முடிந்தது.
திரு ஜயச்சந்திரன் அவர்களின் பரோபகாரத்தால் கிடைத்த இந்த இடத்திலிருந்து ஐந்து வருடங்களுக்கு பின், பி டி சாலையிலேயே வேறு இடத்திற்கு- தற்போது இருப்பதனருகில்- மாற நிச்சயம் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிக் குழந்தைளுக்கு உதவிக்கொண்டிருந்த அமைப்புக்கு, மற்றோரிடமிருந்து பொருள் வசதி கிடைத்து விட்டதால், “ குயவனின்குடிசை” யிலிருந்து நிதி உதவி தேவைப்படவில்லை. அச்சமயத்தில்தான் அக்குழந்தைகளின் படிப்பை ஜயஸ்ரீயின் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டதுடன், இன்று வரை தொடர்ந்து செய்தும் வருகிறது.
நீடித்துழைக்கும் குயக்கலன்கள் – படம்உபயம் : “ பாட்டெர்’ஸ்ஷெட்”
“ தி பாட்டர்’ஸ் ஷெட்பொதுத்தொண்டு அறக்கட்டளை” – THE POTTER’S SHED PUBLIC CHARITABLE TRUST – தற்சமயம் நூறு ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. “ ஒரு குழந்தையைச் சேர்த்துக்கொண்டால், பள்ளி முடிக்கும் வரை எல்லாச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் ; பள்ளிப்படிப்பு முடியும் வரை அந்தக் குழந்தையை பள்ளிக்கூடத்தை விட்டு எடுக்கமாட்டோம் என்று பெற்றோரிடம் உறுதியும் வாங்கிக் கொள்கிறோம் “ என்கிறார் ஜய ஸ்ரீ. வருடாந்திர படிப்புச்செலவின் தொண்ணூறு சதவிகிதம், தவிர புத்தகப்பைகள், சீருடை, வருடம் ஒரு முறை வைத்தியப் பரிசோதனையும் குழந்தைகளின் ஆரோக்யத்தை மேம்படுத்தத் தேவையான மருந்து மாத்திரைகளும் இந்த அறக் கட்டளை ஏற்றுக்கொள்கிறது. பாட்டெர்’ஸ் ஷெட்டிலிருந்து கிடைக்கும் வருமானமும், கல்விக்குக் கிடைக்கும் நன்கொடைகளும் இதற்கு உதவுகின்றன.
தன்னை ஒரு பொருத்தமற்ற தொழிலதிபராகச் சித்தரித்துக் கொள்ளும் ஜய ஸ்ரீ, தான் எந்த ஒரு வியாபார மாதிரியையும் தேர்ந்தெடுத்துச் செயல் படவில்லை, எல்லாம் அவ்வப்போது தானாகவே நன்றாக நடந்தது என்கிறார்.
இந்த முயற்சி சரி வருமா என்று நண்பர்கள் சந்தேகப்பட்டபோதும் , இந்தக் “குயவனின் குடிசை”, பிறந்து, நன்றாகவே வளர்ந்து, பல பிரச்சினைகளைச் சமாளித்து வெற்றிகரமாகவே நடந்தும் வருகிறது.

தற்போது முப்பத்தியிரண்டு வருடங்களாக இந்தக் குயக்களனோடு இணைந்த சுப்ரமணியம், இவ்வளவு வருடங்களாக வேலை செய்ததில்,, தனக்கு ஒரு ஸ்திரமான நிலை கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்.. “எனக்கும் என் குடும்பத்திற்கும் வீடுவாசல், என் குழந்தைகளுக்குக் கல்வி, இந்த லாக்டௌன் காலத்திலும் நிலையான ஊதியம், எல்லாமே இந்தக் “குயவனின்குடிசை” யால்தான் சாத்தியமாயிற்று.” – என்கிறார் சுப்ரமணியம்.
கோடை வாசிகள் பலருக்கு, பாட்டெர்’ஸ்ஷெட் கோடைக்கானலில் ஓர் முக்கியமான அங்கம் வகிக்கிறது. கை வினைக் கலைஞரும் முன்னாள் கோடைவாசியுமான ஆன்பெக், தன் கோடைக்கானல் வீட்டில் இங்கு வினைந்த கலங்கள்நிறைய வைத்திருப்பதோடன்றி அவர் அமெரிக்கா செல்லும்போதும் தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். தவிர, இந்தக்களனைஉருவாக்கும்போதும் அதன் உள் கட்டமைப்பிலும் பங்குபெற்றிருக்கிறார் ” ,இதன் முதன்மைக் குயவரான சுப்ரமணியத்துடன் எனக்கு நல்ல நட்புண்டு – அவரும், அவரது தகப்பனாரும், KISல் என்னுடைய கலை வகுப்பு மாணாக்கர்களுக்கு மண்பாண்டங்கள் புனைவதற்கும், மண் திரிகையைப் பயன்படுத்தவும், சுடு மனையில் புனைந்த பாண்டங்களைச் சரியான பதத்தில் வேகவைத்துத் தயாரிப்பை நன்கு முடிக்கும் வரை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பள்ளங்கியிலுள்ள இந்தக் குயக்களனுக்கு எங்கள்மாணாக்கர்களை நிறைய தடவை அழைத்துச் சென்றிருக்கிறோம். இதில் ஈடுபட்டதின் மூலம் மாணாக்கர்களின் கலைஞானம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. “ – என்கிறார் ஆன்பெக்.
எனக்கும் என் குடும்பத்திற்கும் வீடு வாசல், என் குழந்தைகளுக்குக் கல்வி, இந்த லாக்டௌன் காலத்திலும் நிலையான ஊதியம், எல்லாமே இந்த “குயவனின்குடிசை” யால்தான் சாத்தியமாயிற்று
-= சுப்ரமணியம்.
முன்னாள் பத்திரிக்கையாளரும், சமீபத்தில் இங்கு புலம் பெயர்ந்தவரும், கோடைக்கானல் சர்வதேசப்பள்ளியில் தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றுபவருமான அகிலாசிங் – “ பாட்டெர்’ஸ்ஷெட்” ல் தயாரிக்கப் படும் பொருட்கள், பார்ப்பதற்கு எளிமையாகவிருந்தாலும் மிகுந்த கலைத்தன்மை வாய்ந்தவை; இவற்றிற்குக் கோடைக்கானல் வாசிகள் எல்லாவிதத்திலும் துணையாக நின்று நன்கு பிரபலப்படுத்தவேண்டும்,” – என்று கூறுகிறார்.
சென்ற வருடம் நோய்த் தொற்றால் ஏற்பட்ட நீடித்த லாக்டௌனால் பாட்டெர்’ஸ்ஷெட்ற்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இரண்டு முழு நேர குயவர்களும், ஒரு பகுதி நேர உதவியாளரும், ஒரு விற்பனையாளரும் உள்ள கடையில் விற்பனை குறைந்ததால், கடை வாடகையும், சம்பளமும் கொடுக்க இயலாது போகும் நிலை ஏற்பட்டது. ஆனால், ஜய ஸ்ரீ, தனது இளம் நண்பர் பிரசாந்த் காகரபர்த்தியின் உதவியுடன் நிதி திரட்டி, இந்த நெருக்கடியைச் சமாளித்து விட்டார்.

ஐந்து ௵ங்களாக இங்கு பணி புரிந்து வரும் ரீனா ராகவமூர்த்தி கூறுகிறார் : “சென்ற வருடம் ஐந்து ௴ங்களும், இந்த வருடம் ஒரு மாதத்திற்கு மேலாகவும் கடை மூடப்பட்டதால், அதுவும், ஸீஸன் சமயத்தில் வியாபாரம் அதிகமாக இருக்கும் நேரம், எங்கள் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், கடைகள் திறந்த பின், நன்றாகப் போகிறது. நல்ல காலமாக, இம்மாதிரி மண்பாண்டங்கள், சுலபமாக அழுகிப்போகும் பொருட்களைப் போல் குறிப்பிட்ட காலத்திற்குள் விற்கவேண்டியவை இல்லை “.
கோடைக்கானலின் மற்ற வியாபாரங்களைப்போல், இதற்கும் இந்த கொரொனாத் தொற்றால் பல பிரச்சினைகள் வந்திருக்கிறது. இந்த வருடம், லாக்டௌனிருந்தாலும் வணிகம் நடைபெற உதவும் என்பதால், ஆன்லைன் கடை திறந்து அதன் மூலம், பொருட்கள் விற்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் மூலம் விற்பனை செய்தாலும், டவுனில் உள்ள கடையை மூடுவதாக உத்தேசமில்லை என்றார் ஜய ஸ்ரீ. உள்ளூர் வாசிகளும், விருந்தினர்களும் குயவனின் குடிசையில் உள்ள பளபளப்பூட்டப் பெற்ற அழகிய மண்கலங்களைப் பார்வையிட்டு வாங்கமுடியும்.
தமிழாக்கம் : காமாக்ஷிநாராயணன்.