கொடைக்கானலைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் அபரிமிதமான வளங்களை – சதும்பலில் பூக்கும் அரிய வகை மலர்கள், உணவுக்காளான்கள், பழங்கள், பெர்ரிகள், ஆகியவற்றை வாங்கி,உபயோகித்து அனுபவிக்காதோர் வெகு சிலரே இருப்பர். காட்டிலிருந்து இவற்றை சேகரித்துக் கொணர்வோரில் ஒருவர்தான் சகாயமேரி. இவருக்கு கொடைக்கானலைப் பற்றிய பழங்காலக்கதைகளும் நிறையத் தெரியும்.
30 வருடங்களுக்குமுன் பனி சூழ்ந்த ஆகஸ்டு மாதக் காலை ஒன்றில் கூடை நிறையப் பழங்களுடன் என் வீட்டு வாயிலில் சகாயமேரியை சந்தித்தது நினைவிருக்கிறது. கொண்டு வந்திருந்த சிறு டின் ஒன்றைப் பழங்களால் நிரப்பி, “ ஒரு டின் பழம் ஏழு ரூபாய் “ என்று கூறியவரை வினோதமாகப் பார்த்தேன் – இதற்கு முன் அவரிடமிருந்த ப்ளுபெர்ரிக்களைப் பார்த்ததும் இல்லை, உண்டதுமில்லை!!
எங்கிருந்து கிடைத்தவை இவை என்ற என் கேள்விக்கு, “காட்டிலிருந்துதான்” என்று பதில் வந்தது. – “ வெகு தூரம் காட்டினுள்ளே போய்க் கொண்டுவர வேண்டும்”, என இவற்றை சேகரிக்கும் முறைகளை விவரித்தார் மேரி; “ இந்த மாதத்தில் தான் இவை பழுக்கும், அதுவும் இரண்டு மாதங்கள்தான் கிடைக்கும்’, எனப் பல்வேறு காலங்களில் கிடைக்கும் மற்றக் கனிகளையும் வேறு வனப்பொருட்களைப் பற்றியும் விவரித்தார்.
சில காலம் முன்புதான் என் கணவருடனும் மூன்று சிறு குழந்தைகளுடனும் கொடைக்கானலுக்குப் புலம் பெயர்ந்திருந்த எனக்கு, இந்த ஊரின் சூழல் மிகவும் புதிது – கை நிறையக்கிடைத்த இந்த பெர்ரிப் பழங்களே காட்டு வளங்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியவை. மேற்கொண்டு பல வகையான காட்டுப்பழங்களை அந்தந்தக் காலகட்டத்தில் மேரி கொண்டு வந்து தர ஆரம்பித்தார்.
சிறு பெண்ணாக தாயாருடனும் பாட்டியுடனும் காட்டுக்குள் சென்று, காட்டு மிருகங்களிடம் அகப்படாமல், தைரியத்துடன் பல்வேறு கனிகளும்,காளான்களும் கிடைக்கும் இடம் தேடிக்கண்டுபிடித்து சேகரித்து வருவதில் தேர்ச்சியுற்றார். எந்தெந்த மாதங்களில் எவை எங்கெங்கு கிடைக்கும் என்பதும், விளையுமிடம் எங்கிருந்தாலும் தேடிப் போய்க் கொண்டு வருவதற்கும், வனவிலங்குகளிடமிருந்து தன்னை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதெல்லாம் மேரிக்கு அத்துபடி.
ஆண்டு முழுதும் கிடைக்கும் சிவப்பும் மஞ்சளுமான ராஸ்பெர்ரிக்கள், ஜூன் துவங்கி ஆகஸ்டுவரை கிடைக்கும் ப்ளூபெர்ரிக்கள், மழை பெய்வதைப்பொறுத்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை கிடைக்கும் காளான்கள், மலை ஆலிவ் [MOUNTAIN OLIVE], காட்டு மிளகு, கொய்யாப்பழம், சோலைகளின் நடுவே தரையில் வளரும் சின்னஞ்சிறு ஸ்டிராபெர்ரிக்கள், கணப்புத்தீயிலிடும் பைன் பிசின், கிருஸ்துமஸ் அலங்காரத்திற்கு உதவும் பைன் கோன்கள், ஆகியவற்றை முனைப்புடன் சேகரித்துக் கொண்டு வருவதில் நிபுணர்.
காட்டில் வருடமுழுவதும் ஏதாவது கிடைக்கும் – இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தால் அதன்பின் காளான் சேகரிக்கப் பலர் வருவர்; பைன் மரத்தடியில் வளரும் சாதாரணக் காளான்கள், சிறு சிறு குப்பல்களாக முளைக்கும் சிப்பிக்காளான், பெரிய சைஸில் வரும் ஈஸ்டர்காளான், பொன்வண்ணத்திலும், சிறியதாக சென்னிறத்திலுமிருக்கும் காளான் ஆகியவை பெருமளவில் கிடைக்குமென்றும் கூறிய மேரி, அவரது பரம்பரையில், தனக்குப்பின் யாரும் காட்டிற்குள் சென்று விளை பொருள் சேகரிக்க இருக்க மாட்டார்கள் என வருத்தப்படுகிறார். அவரது குழந்தைகள் நகரத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர் – “என் கணவர் கூட காட்டினுள் வரப் பயப்படுவார்! – டவுனில் வளர்ந்தவரில்லையா ? “ எனக்கேட்கிறார் மேரி ! “ “சுதந்திரமாக நினத்தபோதெல்லாம் காட்டுக்குள் போய் வருவதுதான் எனக்குப்பிடிக்கும், வீட்டு வேலை செய்து பார்த்தேன் ஆனால் பிடிக்கவில்லை” என்னும்மேரியின் கணவர், ராஜன், கொடைக்கானல் கிளப்பில் பணி புரிந்து ரிட்டையர் ஆனவர். மேல் வருமானத்திற்கு லெமன் ஊறுகாய், தக்காளித்தொக்கு,வேர்கடலைச் சட்னி முதலியவை தயாரித்து விற்பனை செய்கிறார்.
காட்டு வாசிப் பழங்குடியினருக்கு, நம் அரசாங்கம், வனத்துறைச்சட்டங்களின் படி, வனத்தில் விளையும் பொருட்களைச் சேகரித்து விற்பதற்கு, அனுமதி அளிக்கிறது. தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, ,மறுபடி தழைத்து வருவதற்கு வேண்டியதை வனத்திலேயே விட்டு வருவதன் மூலம், காட்டு வளங்கள் அழியாமல் பாதுகாத்து வருவதோடு, இப்பழங்குடியினர் காலங்காலமாக வனத்தோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்.
எல்லோரையும்போல் மேரிக்கும் இந்த வருடம் மிகக் கடினமானதாகி விட்டது. வயதான காரணத்தினால் மேரி தன் வாடிக்கையாளர்கள் வீட்டிற்குப் போவதில்லை – அவர்கள் மேரியைத் தேடி வருகிறார்கள்.
ஏழு ரோடு ஜங்ஷனில் தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்து வரும் மேரி – காடு அழிந்து வருகிறதால் வெகுதூரம் காட்டிற்குள் சென்று வருவது சிரமமாகஇருக்கிறது, பல நாட்கள் ஒன்றும் கிடைக்கவிட்டால் கடையில் காய் கனி வாங்கி விற்கிறேன் என்று சொல்கிறார்.
குறுகிய உடலுடனும் மலர்ந்த புன்னகையுடனும், ஒரு மூதாட்டி ஏழு ரோடு மூலையில் தள்ளு வண்டியில் காய் கனிகள் வியாபாரம் செய்வதைப் பார்த்தீர்களானால், அது நம் சகாயமேரி தான் – பழங்களுடன் கோடைக்கானலைப் பற்றிய பழங்காலக் கதைகளும் மேரியிடம் கிடைக்கும்.
- Translated by Kamakshi Narayanan, Tamil translator at The Kodai Chronicle