இருபது இருபத்தைந்து ௵ங்களுக்கு முன் ஒரு சிறு நகரில் வளர்ந்ததால், நாள் முழுதும் இருக்கும் மின்தடையில், TV யும் இல்லாமல் எப்படி பொழுதுபோக்குவது என்று எனக்கு நானே நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டேன். கோடைக்கானல் சிறார்களுக்கு நிறைய நடப்பதென்பது வழக்கமாதலால், ஊரில் பல இடங்களுக்கு நாங்கள் செல்வது எங்களுக்கு ஓர் நல்ல பொழுதுபோக்காகிவிட்டது. இது போல் சுற்றும்போது, நானும் என் சினேகிதி பவி சாகரும், டாப்ஸ் ரோடு வளைவில் ஓர் அடர்ந்த வேலிக்குப்பின்னால் மறைந்து இருக்கும் அமெரிக்கன் மிஷனரி சிமெட்ரி யைக் [ AMC அல்லது ஊரார் சொல்லும் வழக்கில் – பழைய கல்லறைத்தோட்டம் ] – கண்டு பிடித்தோம்.
இது மற்றவர் கண்களில் படாமல் தப்பிக்க எங்களுக்கு சிறந்ததோர் மறைவிடம் ஆகியது. அப்போதெல்லாம் இந்தக் கல்லறைத்தோட்டம் புதர் மண்டிக் கிடக்கும். தங்கள் இறுதி இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்து கல்லறைகள் உருவாக்கிய பழங்கால மிஷனரிக்களின் மறந்து [ மறைந்து ] போன ஓர் நினைவிடமாகிவிட்டது. வேலியின் பல ஓட்டைகள் மூலம் – காட்டுமாடுகள் ஒருக்கால் உருவாக்கியிருக்கலாம் – நாங்கள் உள்ளே நுழைந்து போய் அங்குள்ள கல்லறைகளின் ஊடே புகுந்து அவற்றில் இருந்த அழிந்துபோன கல்வெட்டுக்களை ஆராய்வோம்.
1845 ல் கோடைக்கானலுக்கு முதலில் வந்த ஆறு மிஷனரி குடும்பங்களின் குடியிருப்பான ஷெல்டன் காட்டேஜுக்கு அருகில், PHCC தலைமயகத்தின் பின்புறம் இந்தக் கல்லறைத்தோட்டம் அமைந்திருக்கிறது. “ KODAIKANAL : VANISHING HERITAGE OF AN ISLAND IN THE SKY – 2014 – “ பாரம்பரியம் மறைந்து வரும் வானில் ஓர் தீவு போன்ற கோடைக்கானல் – 2014 “ என்ற புத்தகம் நமக்குத் தெரிவிப்பதில், இந்த சிமெட்ரியில், ஊரின் முதல் சர்ச் உருவாகியதும் தெரிகிறது. “ மலையின் கீழுள்ள சர்ச்” என்று பெயரிடப்பட்ட இந்த தேவாலயம், சிறிது சிறிதாக, பழைய பிஸ்கெட் டின்களின் தகரத்தையும், அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்த மணியையும், ஒரு ஸ்வீடிஷ் நாட்டு கப்பல் தச்சர் எழுப்பிய கோபுரத்தையும் சேர்த்து எழுப்பப்பட்டது. 1896 ல் இது இடிக்கப்பட்டு அங்கு ஒரு நினைவுத்தூண் நிறுவப்பட்டது. மேலைநாட்டவர் பெயர்கள் பொறிக்கப்பட்ட டஜன்கணக்கான கல்லறைகளிருக்கின்றன – அவற்றில் ஹென்றி ஃப்ரான்சிஸ் முட்டுகிஸ்னா எனும் பெயர் குறிப்பாகத் தெரிகிறது – ஆனால் அவரைப் பற்றி வேறு விவரமில்லை.
இன்று, ப்யுலா கோலாட்கர், ஸாரா ஆன் லாக்வுட், திரு சுந்தரலிங்கம் முதலியோர் தாமாகப் பொறுப்பேற்றுப் பராமரித்து வருகிறார்கள். மலையாய்க் குவிந்த களைகளை நீக்கி, தலைக்கற்களில் படிந்த பாசியை சுத்தம் செய்து, பொறித்திருக்கும் எழுத்துக்கள் தெரியும்படி செய்து மிக மெனக்கெட்டிருக்கிறார்கள். சமீபத்தில், புனித பீட்டர் ஆலயத்தார், சிதிலமடைந்த பல கல்லறைகளுக்கு சிமெண்ட் பூச்சுக்கொடுத்துப் புதுப்பித்திருக்கிறார்கள். பராமரிப்பவர்களில் ப்யுலாவைத் தான் எல்லோருக்கும் நன்றாகத்தெரியும். அடுத்து வாழும் இந் நினைவிடத்துடன் மனதாலும் மிக அருகாமையில் இருக்கும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான ப்யுலா, அனாதையாக விடப்பட்ட நாய்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்.
இடது : “ நிலவறையின் காவலர் “ எனத் தன்னை நகைச்சுவையாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் ப்யுலா, தன் வீட்டின் பக்கவாயிலில் உட்கார்ந்திருக்கிறார். வலது : பல நாட்களாக சுந்தரலிங்கம் சுத்தம் செய்த கல்லறை.
நான்கு ௵ங்கள் கழித்து, சமீபத்திய லாக்டௌனின் போது இந்தக் கல்லறைத் தோட்டத்திற்கு நான் சென்றேன். உயிருள்ளவர்களோடு பழகுவதைவிட, கல்லறைகள், பாதுகாப்பானவையாகத் தோன்றிற்று. இப்போது, ப்யுலாவின் வீட்டு வழியாகச் செல்கையில் அவரும் அவரது நாய்களும் பாதுகாவலர்களாகக் கூட வந்தனர்., ஸாரா ஆன் கடும் முயற்சி எடுத்து சுத்தப்படுத்தி இருந்ததால், கல்லறைகள் சொல்லும் கதைகள் எளிதாகப் புரிந்தன.. முதலில் ஜான் எட்வர்ட் டாப்பின் கல்லறை.- இவர் நினைவாகத்தான் இந்த கல்லறைத்தோட்டம் இருக்கும் தெருவிற்குப் பெயரிட்டார்கள்.
ஜான் எட்வர்ட் டாப்பின் கல்லறை
நங்கூரத்தால் குறியிடப்பட்டிருந்த மற்றோர் கல்லறைக்குச் சென்றோம். பவியும் நானும் இவ்வாறு நங்கூரக்குறி இருந்தால் அது கடலில் இறந்தவரைக்குறிக்கும் என்றே நம்பியிருந்தோம். ஆனால், அது எலீஸா என்பவருடையது. – கொட்டெழுத்துக்களில் “ தாமஸ் ஆடம்ஸன், எஸ்.பி.ஸீ யின் போதகருடைய விதவை” எனப் பொறிக்கப்பட்டிருந்தது. காலத்திற்கும் தனக்கெனத் தனி அடையாளமில்லாது தன் கணவனுடைய விதவை என்னும் பெயருடனேயே இருக்கவேண்டியதைக் கண்ணை உருட்டிப் பார்க்கும் எலிஸாவின் முகம் [ டேம் மாக்கி ஸ்மித்தைப்போல் ! ] என் மனதில் நிழலாடியது.
எலிஸா ஆடம்ஸன்னின் கல்லறை
பெரியவர்களுடையதைப் போலின்றி, “ பேபி” என்று மட்டும் குறியிடப்பட்டு, குழந்தைகளுடைய கல்லறைகளில் அனேகமாகப் பெற்றோரின் பெயரோ குழந்தைகளின் பெயரோ இருக்காது. அக்குழந்தை முறை தவறிப்பிறந்ததா, ஞானஸ்னானம் செய்விக்குமுன் இறந்துவிட்டதோ, இது யாருடைய குழந்தை, என்ற ப்யுலாவின் கேள்விகளுக்கெல்லாம் சர்ச்சின் பழைய ஆவணங்களிலும்கூட விவரங்களில்லை.
மற்றொரு புதிர் – அருட் தந்தை ஜேம்ஸ் எட்வர்ட் ட்ரேஸி, அவரது மனைவி, ஃப்ரான்ஸிஸ் ஸாபின் வுட்காக் ட்ரேஸி இருவருக்குமான இணைந்த கல்லறைத்தலைக்கல். இறப்பிலும் இணைந்த இவர்களின் கல்லறைக்கல்லில் சாலமனின் பாடல் 2: 17 – “ பொழுது புலரும் வரையும், நிழல்கள் மறையும் வரையும் “ என்பது பொறிக்கப்பட்டிருக்கிறது. இதில் வினோதம் – இவர்களைப் புதைத்தது 1920 களில், ஆனால் 1904 ல் இந்தக் கல்லறைத்தோட்டம் மூடப்பட்டுவிட்டது. அருட் தந்தை ட்ரேஸிக்கு, இந்த ஸிமெட்ரியை மூடிவிட்டு, “ மலையின் கீழுள்ள சர்ச்” ஐ இடித்துப் புதியதாக நிர்மாணிக்கக் கட்டளையிடப்பட்டிருந்ததால், அவர்களைக் காட் ரோடிலமைந்த புதிய கல்லறையில் புதைக்காமல் இங்கு ஏன் புதைத்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அருட்தந்தை ட்ரேஸி, அவரது மனைவியின் இணைந்த கல்லறை
இந்தத் தடவை வந்ததில் பல பழைய புதிர்களுக்கு விடை கிடைத்தது. பவியும் நானும் வளர்ந்துவரும் காலத்தில், காட்டுமாடால் இறந்த ஒருவர் இங்கு புதைக்கப்பட்டிருப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஜான் ஆடம்ஸன்னின் தலைக்கல்லை வெகு சிரமப்பட்டுப் படித்ததில் BISON என்கிற எழுத்துக்கள்.புரிந்தன.- இப்போது ப்யுலாவுடன் நடந்து செல்கையில், பார்த்தபோது, நன்கு சுத்தம் செய்யப்பட்டிருந்ததால் அது உண்மையில் B.I.S.N.Co [ British India Steam Navigation Company] – ப்ரிடிஷ் இந்திய ஸ்டீம்ஷிப் கம்பெனி என்பதின் ஆங்கில எழுத்துக்களென்பது புரிந்தது. வேறொரு மூலையில் டட்லி லிந்நெல் செட்ஜ்விக் கின் கல்லறையில் “ பழனி மலைகளில் வேட்டையாடச் சென்றபோது காட்டுமாடால் கொல்லப்பட்டார்” என்ற வாசகம் தெரிந்தது. பிராணிகளை நேசிக்கும் என் உள்மனது இதிலிருந்த கர்மவினையைப் பார்த்தாலும், இறந்த போது செட்ஜ்விக்கிற்க்கு 31 வயதுதான் ஆகியிருந்தது என்பது வருத்தமாகத்தானிருந்தது
மேலே : ஜான் ஆடம்ஸன்னின் கல்லறை. கீழே : டட்லி. லிந்நெல் செட்ஜ்விக்கின் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு எழுத்துக்கள் தெரியும் கல்லறை.
சில அடிகள் தள்ளி இருக்கிறது – [ இளைய ] ரெவெரெண்ட் ஜான் ஸ்கட்டரின் கல்லறை – .இந்த ஊரில் மிகப்பிரபலமானவர்.. இந்தியாவிற்கு வந்த முதல் மெடிகல் மிஷனரியான ரெவெரெண்ட் ஜான் ஸ்கட்டரின் மகன் – காலராவுக்குத் தடுப்பூசி தயாரித்தபோது, தானே முன்வந்து முதலில் ஊசி போட்டுக்கொண்டவர். தடுப்பூசி போட்டுக்கொள்வதில்
தயக்கம் காட்டியவர்களுக்கு முன்மாதிரியாக , அவர்கள் பயத்தைப் போக்க நினைத்தது – தற்காலத்திற்கும் பொருந்துகின்றது
[ இளைய ] ஜான் ஸ்கட்டரின் கல்லறை ; பின்னாலிருக்கும் பெரிய மரம் நவம்பர் 2018 ல் கஜாப்புயலின் போது இவரது கல்லறைக்கு வெகு அருகாமையில் விழுந்தது.
எப்போதுமே நன்றாகப் புலப்படும் எழுத்துக்களுடன் கூடிய ஒரு கல்லறையைப் பார்க்கத்திரும்பினேன் – டேவிட் காய்ட் ஸ்கட்டருடையது. டாக்டர் ஜான் ஸ்கட்டருக்கு இவர் எந்த விதமான சொந்தமுமில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவருடைய முன்னுதாரணத்தால் உந்தப்பட்டு இந்தியாவிற்கு மிஷனரியாக வந்தவர் என்று மட்டும் தெரிந்தது..
டேவிட் காய்ட் ஸ்கட்டருடைய கல்லறை. இறப்பின் காரணம் தலைக்கல்லின் பின்புறம் இருக்கிறது.
படம் : உபயம் : ப்யுலா கோலாட்கர்.
இந்தியாவில் அவர் இருந்த சில வருடங்களை நன்கு குறிப்பிடுகிறது. 1861ல் மெட்ராஸில் வந்திறங்கி , வைகை ஆற்றில் 1862ல் மூழ்கி இறந்திருக்கிறார்.; அதுவும் 27 வயது முடிந்து சில மாதங்களுக்குள்ளாகவே.. மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ததில், கோடைக்கானலுக்கு வந்த பின் , இங்குள்ள ஆங்கிலேய கலெக்டரைப் பார்த்து, அமெரிக்க தேசியக் கொடியை வீசித் தன் ஆர்வத்தைக் காட்டினாரென்று தெரிய வந்தது –[ என் மனத்தில் ஓடிய எண்ணங்களில், டைடானிக் படத்தில் டி கப்ரியொ போல் என்று தோன்றியது ]
மேற்புறம் : எலினர் சேம்பர்லின்னுடைய தலைக்கல்.
கீழே : திருடப்பட்ட கதவுகளை மாற்றி , இப்போது பூட்டப்பட்டிருக்கும் சிமெட்ரி கதவுகள்.
மேற்கொண்டு சென்றால், எலினர் சேம்பர்லினின் கல்லறை வருகிறது. 1904ல், 11 வயதில் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அக்காலத்திய பல இன்னல்களுக்குட்பட்ட வாழ்க்கையைக் காண்பிக்கிறது. – அவரது குடும்பத்தார், அவரது நினைவாக அமெரிக்காவிலிருந்து உலோகக்கதவுகள் வரவழைத்து கல்லறையில் பொருத்தி இருந்தனர் – ஆனால் அவை தற்சமயம் அங்கில்லை – 1994ல் உலோகத்தினாலான குரிசு போன்ற பல்வேறு கல்லறையில் பதித்திருந்த பொருட்களோடு சேர்ந்து திருடப்பட்டுவிட்டது.
உலோகத்தினாலான குரிசு உள்பட, இவ்விரண்டு கல்லறைகளிலிருந்தும் திருடர்கள் பல பொருட்களைத்திருடிச்சென்று விட்டனர்.
“ காணாமற்போன “ பல கல்லறைகள், களைகளை எடுத்துச்சுத்தம் செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிலொன்று மேரி ஆன் கேரி யுடையது. சுந்தரலிங்கம் களைகள் நீக்கியதில் அகப்பட்ட இந்தக் கல்லறை இங்குள்ளவற்றிலேயே மிக அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது – வெள்ளை நிறத்தில், “ PEACE “ – சாந்தி “ என்ற வார்த்தையும், அடக்கம் செய்யப்பட்டவரைப்பற்றிய விவரங்களும், அழகுறச்செதுக்கிய பூக்களும் இந்தக் கல்லறையிலுள்ள அமைதியான சூழ்நிலையைப் பிரதிபலிக்கின்றன.
மேரி ஆன் கேரியின் அழகுறச்செதுக்கிய கல்லறை.
ப்யுலா “ கல் மனிதன் “ என்று பெயரிட்டவரின் கல்லறை,- இம்மாதிரி காணாமற் போய்க்’ கண்டுபிடிக்கப்பட்டவற்றில் ஒன்று. மேலே இருந்த புதர்களை நீக்கிய பின் ஐந்தடி ஆழம் தோண்டியதில். ப்யுலாவும் சுந்தரலிங்கமும் கற்களால் மூடப்பட்ட ஒரு கல்லறையைக் கண்டனர்.” இது மிகப்பழையது எனத் தோன்றியது; மிருகங்கள் தின்றுவிடாமலிருக்க இவ்விதம் கற்களால் மூடியிருந்தார்களோ – இன்னும் ஐந்தடி தோண்டி இருந்தால் எலும்புகள் கிடைத்திருக்கலாம்” – என்பது ப்யுலாவின் கூற்று.
“ கல் மனிதன் “ – இடது: மனிதர்களின் மிகச்சிறந்த நண்பன் காவலிருக்கிறார்.
. வலது : தேவாலயத்தின் நினைவுக்கல் – அதைத் தற்செயலாகப் “ பார்வையிட “ வந்திருக்கும் ஒரு நாய்.
நினைவுத்தூணின்படிகளில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, நானும் ப்யுலாவும் தான் இந்தக் கல்லறைத்தோட்டத்திலிருக்கும் உயிருள்ள மனிதர்கள் என்று தோன்றியது ! ப்யுலாவின் நாய்கள் எங்களருகில் இருந்த கல்லறைகளின் மேலும் கீழுமாகப் படுத்திருந்தன. நாங்கள் உட்காருமுன்
ஜேம்ஸ் க்ரைம்ஸின் கல்லறையை ப்யுலா காட்டி இருந்தார். க்ரைம்ஸ் கோடைக்கானல் கிளப்பின் பில்லியர்ட் மேஜையின் மீதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். புல் மூடிய அந்தக் கல்லறை.மீது காட்டுமாடு தன் குளம்பால் ஏற்படுத்திய பெரிய குழி ஒன்றிருந்தது. சில அடி தூரம் சென்றபோது [ காட்டுமாட்டின் காய்ந்த சாணியுடனிருந்த ] ப்ரிடிஷ் ராணுவத்தில் மேஜர் ஜெனெரலாக இருந்த சார்லஸ் ஃப்ரெடெரிக் கீஸ்ஸின் கல்லறை தென்பட்டது.
இடது : காட்டு மாடு ஏற்படுத்திய குழியுடன் ஜேம்ஸ் க்ரைம்ஸ்ஸின் கல்லறை.
வலது : காட்டு மாடின் காய்ந்த சாணியுடன் சார்லஸ் கீஸின் கல்லறை
வழக்கத்திற்கு மாறான கூரிய கட்டை ஒன்று அங்கு கிடப்பதைக் காட்டிய ப்யுலா, ‘” இந்த இடம்தான் காட்டுமாடுகளுக்குத் தூங்குமிடம் ; இங்கு அவை வந்து, தூங்கி, சிரமபரிகாரம் செய்யுமிடமாதலால், நான் அப்படியே விட்டுவிட்டேன். இந்தக்கட்டையில்தான் அவை முதுகைச் சொறிந்துகொள்ளும்”. – கல்லறைத்தோட்டத்தைச் சுத்தம் செய்யும் போது, ப்யுலா வேலியிலிருந்த முக்கால்வாசி ஓட்டைகளை அடைத்துவிட்டார்; ஆனால் சிலவற்றை மட்டும் காட்டுமாடுகள் திடீரேன வந்தால், தான் தப்பிக்க ஏதுவாக விட்டு வைத்திருந்தார். இவை மிகவும் உபயோகமாக இருந்திருக்கின்றன – ஜான் ஸ்கட்டரின் கொள்ளுப்பேத்தி, லாரா கேய்ஸர் ஃபிஷெர், தனது மகள் அடிலேய்டுடனும், மற்றக் குடும்பத்தாருடனும் இங்கு தமது முன்னோர்களுக்குத் தங்களது வணக்கங்களைத் தெரிவிக்க வந்திருந்தபோது, திடீரென ஒரு காட்டுமாடு மந்தை எதிர்ப்பட்டதால் , தப்பிக்க சுலபமாக இருந்ததாம்.
இடது : காட்டுமாடு முதுகு தேய்த்துக்கொள்ளும் கட்டை.
வலது : சிமெட்ரியினூடே உலா வரும் காட்டுமாடு.
படம் உபயம் : ப்யுலா கோலாட்கர்.
கல்லறைத்தோட்டத்தின் கடைகோடியில் மற்றவற்றை விடப் பழமையான கல்லறைகளைப் பார்க்க ப்யுலா என்னை அழைத்துச்சென்றார்_ எவ்வளவுதான் அவற்றின் மேல் படர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றினாலும் ஓரளவுதான் முடியும். பாசி படர்ந்து செடிகள் மூடிக்கிடந்த கற்களை, கண்களைச்சுருக்கிக் கூர்ந்து பார்த்தேன் –, ஸாரா ஆனின் பெரு முயற்சிகளால் சுத்தமாகியிருந்த கற்கள் மறுபடி பாசியால் மூடப்பட ஆரம்பித்திருந்தன. – படரும் பாசியும், வளரும் செடி கொடிகளும், கல்லறைத்தோட்டத்தின் பராமரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய தலைவலி. கல்லறைத்தோட்டத்திற்கும் பி.எச்.ஸீ.ஸி காம்பௌண்டிற்கும் இடையே புதராய் மண்டும் வேலியைச் சுட்டிக் காண்பித்த ப்யுலா, அதில் வளரும் ராஸ்பெர்ரி செடிகளையும், மற்றவற்றையும் அகற்ற எடுக்கும் கடும் முயற்சிகளைப்பற்றித் தெரிவித்தார்.
ஓர் ஓரத்தில் யாருடையது என்று அறியப்படாத கல்லறை.
அப்போதும், சில செடி கொடிகள் வரவேற்கத்தக்கவை – ஓரிடத்தில் வளர ஆரம்பித்திருந்த ஓரிரு விஸ்டீரியாத் துளிர்களைச் சுட்டிக்காட்டிய ப்யுலா, இவை இங்கு இயற்கையாக வளர்பவை அல்ல.- பல்லாண்டுகளுக்கு முன் மிஷனரிக்களாலேயே வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். “ என்னுடைய 200 ௵த் திட்டம் இது – என்றோ ஒரு நாள், நீங்கள் உங்கள் பேரக் குழந்தைகளுடன் இங்கு வரும் போது,இந்தக் கல்லறைத் தோட்டம்,அழகிய மலர்ப்பூங்காவாக மாறியிருக்கவேண்டும் – விஸ்டீரியாவும், ஹனிஸக்கிளும், ஊதா ரோஜாக்களும், செர்ரிப் பூக்களும்
பூத்துக்குலுங்கி, ஒரு பூந்தோட்டக்கல்லறையாக இருக்க வேண்டும் என்பதே என் அவா. களைகளை முற்றும் எடுத்துவிட்டால், பிறகு நல்ல செடிகள் வளர ஆரம்பிக்கும் – அவற்றை பேணிப்பாதுகாக்க வேண்டியதில்லை – தாமாகவே வளர்பவை தான். நான் செய்வதெல்லாம் களைகளை எடுப்பதுதான் – எங்கிறார் ப்யுலா.
இந்த மிஷனரிக்கள் வெளிநாட்டவர்தான். ஆனால் அவர்கள்தான் இந்த ஊரை உருவாக்கியவர்கள். கோடைக்கானலில் இப்போது வாழும் எல்லோரையும் போல இந்நிலம் அவர்களையும் ஸ்வீகரித்தது.
விஸ்டீரியாத் தளிரைக் காணுங்கள்.
இந்த மிஷினரிக்கள் வெளிநாட்டவர்தான். ஆனால் அவர்கள்தான் இந்த ஊரை உருவாக்கியவர்கள். கோடைக்கானலில் இப்போது வாழும் எல்லோரையும் போல இந்நிலம் அவர்களையும் ஸ்வீகரித்தது.. மற்றக் கோடைக்கானல் வாசிகளுடன் பல வருடங்களாகப் பேசியதில் என்னுடைய தனி இடமாக நான் கருதிய இந்த ஸிமெட்ரி, என்னைப்போல் பலருக்கு ஓர் புகலிடமாக இருந்திருக்கிறது என்று தெரிய வந்தது. எழுத்தாளர்களுக்குத் தனிமையும் அமைதியும் தரும் புகலிடமாகவும், [ துரதிர்ஷ்டவசமாக ] குடிமகன்களுக்கு தோதாகவும், காதலர்கள் சந்திக்கவும், நண்பர்கள் பேய்க்கதைகளை பரிமாறிக்கொள்ள ஏற்றதாகவும் இருந்திருக்கிறது. கோடைக்கானலின் சரித்திரத்தோடு நம்மை இணைக்க ஓர் தனிப்பட்ட பாலமாக இந்த மிஷனரிக்கல்லறை இருக்கிறது. – முதலில் இங்கு வந்தவர்களுடைய நேரடி வாரிசுகளாக நாம் இல்லாவிட்டாலும், இந்த மிஷனரிகளும் அவர்கள் விட்டுச் சென்ற இக்கல்லறைத்தோட்டமும் தற்காலச் சூழலில் பலதரப்பட்ட மக்கள் வாழும் ஊரின் பகிர்ந்த பாரம்பரியத்தின் ஓர் முக்கிய அங்கமாகும்.
இந்த அமெரிக்கன் மிஷனரிக்கல்லறைத்தோட்டத்தைப் பற்றி மேலும் அறிவதற்கு
இங்கு க்ளிக் செய்யவும்.
கோடைக்கானல் சர்வ தேசப்பள்ளியின் முன்னாள் மாணவர், ஜூலியன் டோனஹ்யுவால் மிகுந்த கவனத்துடன் இக்கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டவர்களின் விவரங்கள் ப்யுலா கோலாட்கரின் உதவியுடன் கணினி மயமாக்கப்பட்டது.
- 2002ல் ப்யுலா ஏ.எம்.ஸி யை களை எடுத்துச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார், பின்னர், சுந்தரலிங்கம், ஸாரா ஆன் லாக்வுட், மெர்ரிக் லாக்வுட் முதலியோரும் இன்னும் பல தன்னார்வலர்களும் 2018 இணைந்து பணியாற்றினர்.
- 1863 ல் சர்.வியர் ஹென்ரி லெவிஞ்சுடன் இணைந்து கோடைக்கானல் ஏரியை உருவாக்குவதில் பெரும் பங்கேற்றார். அவரது மகன் ஜான் டாப், பிரபலமான டீக்கடை ஒன்று ஆரம்பித்தார்.
- 1904ல் இந்த ஸிமெட்ரியில் நடந்த கடைசி இறுதிச்சடங்கு.[ VEIL OF MIST : BADRI VIJAYARAGHAVAN : 2016 ]- பத்ரி விஜயராகவன் 2016ல் எழுதிய “ மூடு பனியின் முக்காடு “.
- கல்லறைக்கு முன்பு வந்த போது சரியாகத்தெரியாத கல்வெட்டுக்கள்.
- இது அவரின் பேரனின் பேரன், டெர்ரி ஷெர்மன் வாயிலாகத்தெரிந்தது.
- 1852ல் தற்போதைய பாம்பே ஷோலா இருக்குமிடத்தில்தான் அப்போதைய பாம்பே படையினர் முகாமிட்டிருந்தனர் – அதனால் வந்த காரணப்பெயர்.
- தமது ஊரைப்பற்றி ஞாபகமூட்டும் வகையில் தோட்டத்தில் ஆர்வம் கொண்ட மிஷனரிகள் இங்கோர் சிறு மூலையில், விஸ்டீரியா போன்ற செடிகளை வளர்த்தனர் – பத்ரி விஜயராகவன் எழுதிய புத்தகத்தில் குறிப்பு.