ஆசிரியர் – டாக்டர் மாலினி தேவானந்தன்.
நல்ல காற்றோட்டம் : பிறருடன் பழகுவது நல்ல காற்றோட்டமுள்ள பெரிய அறைகளிலோ அல்லது வீட்டிற்கு வெளியேயோ இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் – எவ்வளவுக்கெவ்வளவு அறை பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. இந்த ஊரில், நம்முடைய பல தினசரி வேலைகள், வீட்டிற்கு வெளியே இருப்பதால் – இப்பழக்கத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வது நல்லது.
சமூக இடைவெளி : ஒவ்வொவருவருக்கும், இடையில் குறைந்த பட்சம் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் – குறிப்பாக மாஸ்க் அணியாமலோ / சரியாக அணியாமலிருந்தாலோ இது மிக அவசியம். தற்போது பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கோவிட் தொற்றானது, ஒரு பெரிய அறையில் (கிட்டத்தட்ட 10 மீட்டர் சதுர அடிப் பரப்பென வைத்துக்கொள்ளலாம்), அங்குள்ள காற்றில் கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய தூசிபடலம் {AEROSOL PARTICLES} மூலம் பரவக்கூடியது என்றும், இது தவிர இருமீட்டர் தூரத்திற்குள் சற்றுப் பெரிய துளிகள் மூலமாகவும் பரவும் என தெரிய வந்துள்ளது. “இந்த தூசிபடல துகள்களுக்கும், காற்றில் பரவும் மற்ற துகள்களுக்கும் என்ன வித்தியாசம்”, என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திரக்கு, ஓர் அறையில் நாம் உபயோகப்படுத்தும் காற்றின் துர்வாடை நீக்க உபயோகிக்கும் ஸ்பிரெக்கும்(AIR FRESHENER), சாதரண எரி புகைக்கும் உள்ள வேறுபாடு என வைத்துக்கொள்ளலாம். புகை காற்றில் கலந்து மேலேசென்று, காற்றின் திசையாலும் வேகத்தாலும் பரவுகிறது– நெடுந்தூரம் கூடச் சென்று விடுகிறது; நம் ஊரில் காட்டுத்தீயை நாம் கண்டு அனுபவித்திருக்கிறோம் – எங்கோ மலையில் தூரத்தில் இருந்தாலும் புகையின் மணத்தை சுவாசித்திருக்கிறோம் – ஆனால் காற்றின் துர்வாடை நீக்க உபயோகிக்கும் ஸ்பிரெயின் நுண்ணிய துகள்கள், ஒரு அறையிலுள்ள காற்றில் கலந்து அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் தன்மை உள்ளது. அறைக் கதவு திறந்திருந்தால் சீக்கிரமே வெளிக்காற்றில் கலந்து விடும், அறை மூடியிருந்தால் அதன் வாசனை சற்று அதிக நேரம் காற்றிலிருக்கும் –.இதை போலத்தான் இந்த வைரஸ் பரவுவதும்.
மாஸ்க் (முகக்கவசம்) அணிதல்:
நாம் மாஸ்க் அணிவது நம்மைச்சுற்றியுள்ளோரின் பாதுகாப்புக்கும் தேவை என்பதை நாம் மறந்து விடுகிறோம் (அப்படி செய்வது, நமக்கு மற்றவர்களின் நலத்தின் மேல் உள்ள அக்கரைக்கான சான்றிதழ்). சரியான முறையில் அணிந்த மாஸ்கானது, மூக்கு, வாய், மற்றும் முகவாய்க்கட்டையைச் சரியாக மூடவேண்டும். சுவாசிக்கும்போது நமது மூக்கிலிருந்து வரும் சுவாசகாற்றில் கலந்த தூசிபடலம், பேசும்போது வாயிலிருந்து வெளிவரும் நீர்துளிகள்; இவற்றிலுள்ள மிக நுண்ணிய துகள்களை சுற்றியுள்ள காற்றில் பரவாமல் தடுப்பதன் மூலம் தொற்று மற்றவர்க்குப் பரவாமல் தடுக்கிறது. (மாஸ்க் சரியான முறையில் எப்படி அணிய வேண்டும் என்பதற்கு கீழ்க்கண்ட படம் ஒரு உதாரணம்). மாஸ்க் அணிவதால் சுவாசிப்பதில் சிரமமோ, அல்லது ஆக்சிஜன் குறைபாடோ ஏற்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பதட்டப்படாமல் இருக்கவேண்டும் :
பதட்டப்படுவதால், நமது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன – அவை கோவிட் நோய் தாக்குதலின் அறிகுறிகளைப் போல் தோன்ற வாய்ப்புண்டு. உங்கள் பதற்றத்தால் ஏற்படும் உடல் மாற்றங்கள், உங்கள் மருத்துவரையும் கவலை பட வைக்கிறது– அவரும் மனிதர்தானே! – கோவிட் நோய் தாக்குதலின் அறிகுறி பலருக்கு மிக லேசான அளவில் தான் வருகின்றது; பார்க்கப்போனால், இந்த நோயைவிட, சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோர்தான் அதிகம். ஒவ்வொரு தடவை சாலையைக் கடக்கும் போதும் அடிபட்டுவிடுமோ என்று பதட்டப்படுவதில்லையே!
மருத்துவ விஞ்ஞானத்தை நம்புங்கள் : பல தரப்பட்ட புரளிகளையும் ஏமாற்றுப் பேச்சுகளையும் நம்பாதீர்கள். இவற்றிலிருந்து உண்மையைப் பிரித்து அறியத்தெரிந்து கொள்ளுங்கள்; மிக விஞ்ஞான பூர்வமாகத் தோன்றினாலும் பல செய்திகள் ஆதாரமற்றவை. ஏமாற்றும் வகையில் சொல்லப்பட்ட மருத்துவக் குறிப்புகள், எதிர்ப்புச்சக்தி உண்டாக்கும் உணவுகள், என்று பலவகையில் சொல்லப்படும் குறிப்புக்களைப் பயன் படுத்துவதால் உங்கள் பணம் காலியாவது மட்டுமின்றி பலவகைப்பட்ட எதிர்மறையான உடல் நலக்குறைவும் ஏற்படக்கூடும், என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே ஏற்க வேண்டுமா? – தேவையில்லை. சாதாரணமாக நீங்கள் உட்கொள்ளும் உணவே போதும் – வாய்க்கு ருசியான சாப்பாடு என்றிராமல், சத்துள்ள பொருட்கள், சரியான விகிதத்திலுள்ள, ஆரோக்யமான உணவாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். உங்கள் நுரையீரலுக்கு பாதுகாப்பும் பலமும் கொடுக்கும் பட்சத்தில், சிகரெட் பிடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நலம்.
ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்போடு செயற்பட வேண்டும். இத்தகைய உலகளாவியத் தொற்றை முறியடிக்க வேண்டுமானால், நமது சில சொந்த விருப்பு வெறுப்புக்களையும், பல சௌகரியங்களையும் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டியிருக்கும். ஒவ்வொருவரும் வெளி இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வதிலும், கோவிட் தொற்று அதிகமுள்ள இடங்களிலிருந்து வந்த விருந்தினரை உபசரிப்பதிலும், தமக்கு கோவிட் நோய் தாக்கத்துக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டால், அதற்கான பரிசோதனை செய்து கொள்வதிலும், பொறுப்புடன் செயல்படவேண்டும். அதிலும், சமூகத்தில் தலைமை பதவி வகிப்பவர்களும் பொறுப்பான பதவியில் இருப்பவரும், எல்லாம் அறிந்த வல்லுனர்களும் கட்டாயமாக முன்னின்று செயல் படவேண்டியது, அவர்களுடய கடமையாகும்.
எந்த விதமான மாஸ்கை தேர்ந்து எடுத்து எப்படி அணிய வேண்டும் ?
- உங்களைச்சுற்றி இருப்போருக்கும் உங்களுக்கும் பாதுகாப்பு அளி[ப்பதே நீங்கள் அணியும் மாஸ்க். மூன்று அல்லது நான்கு அடுக்கு துணிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சர்ஜிகல்/மெடிகல் மாஸ்க், அல்லது வால்வ் இல்லாத N 95 மாஸ்க் சிறந்தது – உங்களிடமிருந்து பரவக்கூடிய மிக நுண்ணிய துகள்களை வெளியே பரவாமல் தடை செய்யக்கூடியது.
- N 95 மாஸ்கானது, நீங்கள் உள்ளிழுக்கும் சுவாசத்தின் மூலம் மற்ற நுண்ணிய துகள்கள் உள்ளேராமல் பாதுகாக்கும். (கூடுதல் தகவல்களூக்கு உலக சுகாதார மையத்தின்(WHO) கோவிட் தகவல் இணையதளத்தை(website) பார்க்கவும்).
- மாஸ்க் அணியும் போது, மூக்கு, வாய், முகவாய்க்கட்டை மூன்றும் மூடியிருக்குமாறு அணியவும்.
- உங்கள் மாஸ்கின் முன்புறத்தை கையால் தொடவேண்டாம்.
- மாஸ்கை அணிவதற்கோ கழட்டுவதற்கோ, அதில் உள்ள கயிறுகளைப்பயன்படுத்தவும்; அணிந்த பின் அதைச் சரி செய்ய யத்தனிக்க வேண்டாம்; சரியாகப்பொருந்தும் மாஸ்கைத் தேர்ந்தெடுத்து அணியவும்.
- தினசரி, நாள் முழுதும் உபயோகிப்பதிற்கும், மாஸ்குகள் பாதுகாப்பனவையே – அவற்றால் உங்களுக்கு சுவாசத் தடையேதும் ஏற்படாது..
- மூக்குக்கண்ணாடி உபயோகிப்போர், மாஸ்கை அணிந்த பின் உங்கள் கண்ணாடியை அணிந்து கொண்டால், மாஸ்கின் மேல் ஓரம் கண்ணாடியின் அடியில் சென்று விடும்; கண்ணாடியில் நீர்படலம் படியாமலிருக்கும்.
- மாஸ்க் சாதரணமாக ஒரு நாள் முழுதும் உபயோகப்படுத்தலாம் ஆனால் எக்காரணம் கொண்டும் நனைந்து விட்டால் உடனே மாற்ற வேண்டும்.
- துணியால் தயாரிக்கப்பட்ட மாஸ்கை மறு உபயோகத்திற்கு முன்பு நன்கு துவைத்து காய்ந்த பின்பு தான் உபயோகப்படுத்த வேண்டும்.
- மறு உபயோகம்செய்யக்கூடாத (டிஸ்போசப்ல்) மாஸ்குகளை, 5 நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம். இலக்கமிட்ட சுத்தமான காகிதப்பைகளில் வைத்திருந்து சுழற்சி(rotation) முறையில் உபயோகிக்கலாம். காகிதப்பை என்பதால் காற்றோட்டம் இருக்கும்.
- அழுக்கான மாஸ்குகளை தூர எறிந்துவிட வேண்டும்.
- உங்களைச் சுற்றியுள்ளோர் எல்லோரையும், மாஸ்க் அணிந்து கொள்ளுமாறு பணிவுடன் கூறுவது நல்லதே.
எல்லா இடங்களையும் தொடுவதால் தொற்று பரவுமா ?
- மக்கள் மூலம்தான் தொற்று பரவுமே தவிர பொருட்களைத்தொடுவதால் அல்ல.
- வெளி இடங்களில் மற்றப் பொருட்களை அதிகம் தொட்டிருந்தால் கிருமிநாசினி(சானிடைசெர்) கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.
- கைகளை கிருமிநாசினி மூலம் சுத்திகரிக்காமல் முகம், மூக்கு, கண்,வாய், மூக்குக்கண்ணாடி ஆகியவற்றை தொடாமலிருக்க வேண்டும்.
- ஆனால் எத்தகைய சிறு பொருளைத்தொடும் முன்னரும் அவற்றை சுத்திகரிக்க முயலவேண்டாம். அவற்றை தொட்டவுடன் கைகளை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
கைகளை சுத்திகரிப்பது எப்படி ?
- குறைந்தது 70% ஆல்கஹால் உள்ள சானிடைசரால் சுத்தம் செய்வது நல்லது.
- உள்ளங்கை, விரல்களின் நடுவே, கைகளின் பின்புறம், கட்டை விரல்,மணிக்கட்டு முதலிய இடங்களில் ந்ன்கு பரவுமாறு தேய்த்துக்கொள்வது நலம்.
- கைகள் அழுக்காக இருந்தால் நன்றாக, 40 நொடிகள், சோப் தேய்த்துக் கழுவுவது தேவை. மிகவும் அழுக்காக இல்லாவிட்டாலும் கைகளைக் கழுவது நல்லதே.
வேறெந்த விதங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் ?
- மாஸ்க், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் தான் சிறந்த பாதுகாப்பு.
- தொற்றைத் தவிர்க்க வேறெந்த விதமான மாத்திரைகளோ, சிகிச்சைகளோ கிடையாது.
- மற்ற நிரூபிக்கப்படாத சிகிச்சைகளால் உங்களை வேறுவிதமான வியாதிகளுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.
நோய் எதிர்ப்புச்சக்தியை எப்படி அதிகரித்துக்கொள்ளலாம் ?
- எதிர்ப்புச்சக்தி என்பது சாதாரணமாக உள்ளது ; குறிப்பிட்ட தன்மையும் கொண்டது. கோவிட்டிற்கு எதிர்ப்புச்சக்தி என்பது ஒருவருக்கு அந்த நோய் வந்து குணமான பின்னரோ அல்லது அதற்கான தடுப்பூசி போட்டுக் கொண்டாலோதான் கிடைக்கும்.
- பொதுவான எதிர்ப்புச்சக்தியானது அதிக புரதச்சத்தும் வைடமின்களும் உள்ள உணவால் கூடும்; தேவையான உடற்பயிற்சி, சரியான நேரத்தில் தூக்கம், முதலியனவும் நல்லதே. ஒரு சில சத்துக்களைப்
புறக்கனித்துவிடும் சீரற்ற உணவுப்பழக்கங்கள் நல்லதல்ல.
- வைடமின் டி குறைபாடு மக்களுக்கு பொதுவாக உலகமுழுதும் உள்ளது; இச்சத்து உடல் ஆரோக்யத்திற்கும், எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்தவும் இன்றியமையாதது. அதனால், வைடமின் டி அதிகமுள்ள (குறிப்பாக மீன், பால் பொருட்கள், கடலை) போன்ற உணவுவகைகளை கட்டாயமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர – காலை 9 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை வெய்யில் உடலில் படுமாறு இருத்தல் நலம். அதுவும் நம் ஊரில் அடிக்கடி மதிய வேளைகளில் மழை வந்து விடுவதால், காலை நேரமே சிறந்தது. ஒரு நாளைக்கு
- 30-50ng /ml அளவிற்கு மேல் வைடமின் டி நம் உடலுக்குத் தேவைப்படுவதால், கூடுதலாக இந்த வைடமின் எடுத்துக்கொள்வது நல்லது.
தடுப்பூசிகள் (வாக்சீன்):
- தற்சமயம் இந்தியாவில், கோவிஷீல்ட் { COVISHIELD – ASTRA ZENECA } , கோவாக்சீன் { COVAXIN – BHARAT BIOTECH } என்ற இரு வகை தடுப்பூசிகள் கிடைக்கின்றன. ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் V, {SPUTNIK V }, இங்கு { DR. REDDY’S LABORATORIES மூலம் தயாரிக்கப்படுவது } – அபோல்லோ ஆஸ்பத்திரி மூலமாக, மே 18ந் தேதியிலிருந்து கிடைக்கிறது – இதன் விலை 1250/- ரூபாய் மட்டுமே.{ தற்போது ஹைதராபாதிலும் விசாகப்பட்டினத்திலும் மட்டுமே கிடைக்கும் இந்தத் தடுப்பூசி, கூடிய விரைவில் எல்லா பெரிய நகரங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கோடைக்கானல் ஜி எச், ஆரம்பசுகாதார நிலையம், வான் ஆலன், மற்றும் கே எச் எம் எஸ் (KHMS) ஆஸ்பத்திரி, முதலிய இடங்களில் கோவிஷீல்ட், கோவாக்சீன் இரண்டுமே கிடைத்து வந்திருக்கிறது. கோடைக்கானல் ரோடரி கிளப் வாரந்தோறும் ஜி எச் அருகிலுள்ள ரோடரி ஆபீசில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி வந்திருக்கின்றனர்.
- சற்றே மாற்றப்பட்ட நிலையில் உள்ள வைரஸ், நம் உடலுக்குள் செலுத்தப்படுவதால், நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு தன்மை ஊக்குவிக்கப்பட்டு, அந்தக் குறிப்பிட்ட தொற்றைக் கண்டுபிடித்து அழிக்கும் சக்தி கொண்ட காரணிகளை தோற்றுவிக்கின்றன.
- சரியான எதிர்ப்புச்சக்தி உருவாவதற்கு இரு தடவை வாக்ஸீன் எடுத்துக்கொள்ள வேண்டும் . கோவாக்சீனுக்கு 4 – 6 வாரங்கள் இடைவெளியும், கோவிஷீல்டிற்கு 6 – 12 வாரங்கள் இடைவெளியும் விட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
வாக்சீன்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணையதளங்களில் பார்க்கவும்.