“பெண்டி” என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெண்டர்லாக் மைதானம், 1989 பிப்ரவரி19௳ மாலைநேரம் சென்னையின் “மித் – MYTH” எனும் ராக் இசைக்குழுவின் பாடல்களால் நிறைந்திருந்தது. ஆர்வமிக்க உள்ளூர்வாசிகள் பலரும், சிறுவயதினரும் ,”வயதானவர்களும், வெளியூரிலிருந்து இந்த இருநாள் கச்சேரி கேட்பதெற்கென்றே வந்திருந்தவர்களும், இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராக், ஃபோக், ப்ளூஸ், ரெக்கே, உலகப்பாடல்கள், தவிர உள்ளூர் கோவில்களில் மத்தளம் அடிப்போர், முதலியோரின் இசையில் மூழ்கித் திளைத்து ஆனந்தித்திருந்தனர்.
மொத்தம் பன்னிரண்டு வாத்தியக் குழுக்கள் – பெங்களூரிலிருந்து “சர்ஜாபுர் ப்ளூஸ்பாண்ட் ‘, “கொலஸ்ஸஸ்”, சென்னையிலிருந்து “வீ 6,” மதுரையிலிருந்து ” தி க்ளாஸ் பாங்க்ள்ஸ், “,தவிர ஆரோவில், கொச்சி, போன்ற மற்ற ஊர்களிலிருந்தும் வந்திருந்த குழுக்கள் – கோடைக்கானலிலுள்ள ஆதரவற்ற முதியோருக்கென கார்சாக் நடத்தும் மெர்ஸி ஹோமிற்கு நிதி திரட்டுவற்காக இலவசமாக இந்த இருநாள் விழாவை நடத்தினர். கோடை சீஸ் நிறுவனம் பொறுப்பேற்று நடத்திய இந்தக் கோடைக்கானல் இசை விழா எல்லோராலும் வெகுவாக வரவேற்கப்பட்டது. அப்போது, வான் ஆலன் மருத்துவ மனையில் டாக்டர் எட் டாகென்ஃபெல்ட் உடன் வேலை செய்துகொண்டிருந்தேன் – அவருடைய ஆதரவாலும், அப்போது கோடைக்கானல் சர்வதேசப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த டாக்டர் பால் வீபே தந்த ஊக்கத்தாலும்தான் நானும் என் நண்பன் ஜார்ஜி ஃபிலிப்பும் இந்த இசை விழாவை வெற்றிகரமாக நடத்திட முடிந்தது. பாடகர் தீனாசந்திர தாஸும் காலஞ்சென்ற பெங்களூரின் ராஜசேகரும் இதில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.
கிதார் மீது நான் கொண்ட காதல் எனக்கு 12 வயதாகும்போது ஆரம்பித்தது. என் பாட்டனார் வீட்டிற்கு ஒருதடவை போனபோது, பழைய அலமாரியின் மேலே, கம்பளியில் சுற்றி பத்திரப்படுத்தப்பட்ட பழங்கால கிதார் ஒன்றைக் கண்டேன் – கண்டதும் காதல் என்பது அதுதான் ! கீழே இறக்கி, அதில் மீதமிருந்த ஓரிரு தந்திகளை மீட்டிப்பார்க்க எனக்கு அனுமதி கிடைத்தது. அது என் சித்தப்பாவுடையதாகையால், அதை வாசித்துப் பார்க்க என் தகப்பனாரிடம் நான் பல மாதங்கள் கெஞ்சி அனுமதி பெறவேண்டியதாகி விட்டது – கடைசியாக, அனுமதி கிடைத்தபின், நானும் அந்த கிதாரும் இணைபிரியாதவர்களாகி விட்டோம்.
அப்போது, கொச்சியிலிருந்து பல மைல் தள்ளி ஒரு சிறு கிராமத்தில் நாங்கள் வசித்து வந்தோம். என்னுடைய ஆர்வத்தைக்கண்டு, என் தந்தை, மிகுந்த சிரமப்பட்டு, கிதார் இசைக்க எனக்கொரு ஆசிரியரை கண்டு பிடித்தமையால், என்னால் சில காலமாவது அவரிடம் ஆரம்பப்பாடங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. என் பள்ளிப்பருவமுழுதும் என் கிதார் ஒரு இசைக்கருவியாக மட்டுமில்லை – எனக்கு மனமிசைந்த தோழனாக, உறுதுணையாக இருந்தது. என் வயதுக்கு நான் சிறியவனாக இருந்தேன்; படிப்பிலும் விளையாட்டிலும் சுமார்தான் – வருடாந்திர இசைப்போட்டிகள் வரும்போதுதான் நான் தலை நிமிர்ந்து நிற்க முடியும் ! தனக்குத்தானே நான் கிதாரை இசைக்கக் கற்றுக்கொண்டதோடு, இசை எனும் உலகத்தையும், தெரிந்து புரிந்து கொள்ளத் துவங்கினேன்.
காலேஜ் படிப்பும், வேலை வாய்ப்புகளும் என்று வரும் போது, நான் இசை கற்றுக்கொண்டு, இசைக்கலைஞனாக வர மிகுந்த ஆவலுடன் இருந்தேன் – திருவனந்தபுரத்தைச்சேர்ந்த ஜான் அந்தோனியிடம் சிலகாலம் விரலால் வாசிக்கும் கிடார் கற்றுக்கொண்டதால் அவரைப் போன்று இசையில் மேம்பட்டு வரவேண்டுமென்பது என் அவா. அமெரிக்காவிலுள்ள பெர்க்லீ இசைக்கல்லூரியில் பயிலவேண்டும் என்பது என் கனா. ஆனால் என் பெற்றோர் இருவருக்கும் இது ஏற்புடையதாக இல்லை – அவர்கள் இருவருமே மிகத் திறமைவாய்ந்த மருத்துவர்களாதலால், தங்களது மூத்த பையன், மருத்துவப்படிப்பை விட்டு விலகி இசை பயில்வதென்பது மனதிற்கு ஒப்பவில்லை ! வெகு விரைவில், மங்களூரிலுள்ள கஸ்தூரிபாய் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தேன் – அதன் பின், கிடார் வாசிப்பது என்பது பின்னால் தள்ளப்பட்டு, கடற்கரைக் களியாட்டங்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் ,அல்லது எப்போதாவது விடுதியில் நடக்கும் இசைக்கச்சேரிகளிலும் இடம் பெறும் ஒன்றாகிவிட்டது.
வேலூர் மருத்துவக்கல்லூரியில் நான் இன்டெர்ன் பயிற்சியிலிருந்தபோதுதான் ,”கோலி” என்று அழைக்கப்படும் டாக்டர் அருண் கோலாட்கரைச் சந்தித்தேன். கிடார் வாசிப்பில் எங்களுக்கிருந்த பரஸ்பர ஆர்வம் எங்களை இணைத்தது. விரலாலிசைக்கும் கிடாரை இசைக்க எனக்கு அவர் நிறையக் கற்றுக் கொடுத்தார். பல்வேறு ராக் பாரம்பரிய இசைத்தொகுப்புகளை நாங்கள் அப்போது சேகரித்து, புதிய தொகுப்புக்களும் அமைத்தோம். அங்கிருந்த ” MIQ ” எனப்படும் “ பயிற்சியுலுள்ள ஆண்கள் விடுதி” யின் மொட்டை மாடியில் நாங்கள் இசையில் மூழ்கி எழுந்த பல இரவுகள் எனக்கு இன்னும் வெகு நன்றாக நினைவு இருக்கிறது.
ஆயிரத்தொள்ளாயிரத்து எண்பத்திஆறில், என் இருபத்திநாலாவது பிறந்த நாளன்று, முதன் முதலாக நான் கோடைக்கானலுக்கு வந்தேன் – ஒரு புதிய அத்தியாயம் என் வாழ்வில் அப்போது துவங்கியது. நானும் அதன் பின்னர், பல இடங்களுக்குப் பயணம் செய்திருந்தாலும், கோடைக்கானலினால் என் இசையில் ஏற்பட்ட பாதிப்பு மகத்தானது. அங்குள்ள சலசலக்கும் ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், காட்டிற்குள்ளிருக்கும் சிறுகுளங்களருகில் அமர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல பாடல்களை எழுதியும் இசைத்தும் இருக்கிறேன். மங்களூரில் நான் சந்தித்த ஆன்றேஜ் என்ற ஜெர்மானியர் ஒருவர் எனக்குப்பரிசாக அளித்த பாரம்பரிய கிடார் ஒன்றே எனக்கு அப்போது துணை. கோடைக்கானலுக்கு வந்த பல பயணியர்களும் விருந்தினர்களும், எனக்கு இசையைப்பற்றி நிறையக்கற்றுக்கொடுத்தனர் – அவர்களில் முக்கியமானவர் காலஞ்சென்ற மாரியோ க்ளீடோ டாகோஸ்டா. க்ளீடோ தான் என்னை பாப் மார்லேவுக்கும், அவருடைய ரேக்கே இசைக்கும், அறிமுகப்படுத்தினார். அப்போது எனக்கிருந்த தீவிரமான மனப்போக்கிற்கு அது மிகவும் ஏற்றதாக இருந்தது.
கோடைக்கானலிலிருந்து நான் இமயமலைக்கு ஒரிரு தடவைகள் சென்று வந்தேன் – அந்த மலைச் சிகரங்களின் கம்பீரம் நான் அப்போது எழுதிய பாடல்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறது. கல்கத்தாவிலுள்ள ஸலீல் சௌத்ரியின் சௌண்ட் ஆன் சௌண்ட் – “ SOUND ON SOUND” என்ற ஸ்டூடியோவில் கின்ஸுக் தாஸ்குப்தாவுடன் இணைந்து “ மந்திரபூர்வமான மலை” – MAGIC MOUNTAIN” – என்ற பெயரில் ரிகார்ட் செய்யப்பட்டது. இது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாக, பல்வேறு வாத்தியக்கருவிகளிசைக்கும் குழுவினர் இசைத்த பாடல்களாகப் பின்னர், கேசட்டுகளில் வெளியிடப்பட்டது. அச்சமயத்தில் நான் கோடைக்கானல் சர்வதேசப் பள்ளியில் சில நாட்களுக்கு, கிடார் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு உயர் நிலைப்பள்ளியிலிருந்த டேவிட் எஸ்டெஸ், ஆலிவர் ராஜாமணி இருவரும் எனக்குப் பரிச்சயமானார்கள். – அவர்களுடைய பாண்ட் குழுவுடன் பள்ளி விழாக்களில் நான் நிறைய வாசிக்க முடிந்தது.
மருத்துவப்பணிகளும் ,குடும்பமும் முதலிடம் ஏற்றதால், மறுபடி, இசை பின்னுக்குத் தள்ளப்பட்டது.. இரண்டாயிரத்து ஒன்றில் நான் பெர்முடாவிற்குச் சென்று கிங் எட்வர்ட் நினைவு மருத்துவ மனையில் பணிக்குச் சேர்ந்த பின்னரே, என் வாழ்வில் இசை மறுபடி முன்னுக்கு வந்தது. பெர்முடா இசைப்பள்ளியில் இருந்த ஸ்டீவ் க்ராஃபொர்டிடம், இசைப்பயிற்சி ஆரம்பித்தேன். அப்போதுதான், முதன் முதலாக, பாரம்பரிய கிடார் என்பதன் அறிமுகம் கிடைத்தது. ஸ்டீவ், வருடா வருடம் நடத்தும் பெர்முடா கிடார் விழாக்களில் பங்கெடுக்க சந்தர்ப்பமளித்தார். அந்தமாதிரி சமயமொன்றில், உலகப்புகழ் பெற்ற க்ராமி விருது பெற்ற ஆண்ட்ரூ யார்க் போன்றோரை நான் சந்திக்க முடிந்தது. யார்க்கை மரியாதைப்படுத்தும் விதமாக நான் புனைந்த “ TRIBUTE TO ANDREW YORK – ஆண்ட்ரூ யார்க்கிற்கு என் காணிக்கை” என்ற பாடல் “ FINGERSTYLE GUITAR “ – விரலால் இசைக்கும்கிடார் “ என்ற பத்திரிகையில் வெளிவந்தது மட்டுமின்றி, இந்நாள் வரை என்னுடைய மிகப் பிரபலமான பாட்டாக உள்ளது என்றால் மிகையல்ல. ஆண்ட்ரூவின் “SUNBURST “ எனும் மெட்டைக் கற்றுக்கொண்டிருந்த போது, இப்பாடலைத் தற்செயலாகக் கையாண்டேன். உன்னிப்பாகக்கேட்டால், இதன் பின்னிசையில், ஒரிரு பெர்முடா மரத்தவளைகளின் ஒலி [ எப்படியோ புகுந்து விட்டது,] கேட்கும் ! ஆண்ட்ரூவுக்கு அது மிகவும் பிடித்துவிட்டதால், என்னுடைய வீட்டிலுள்ள ஸ்டுடியோவில் ரிகார்ட் செய்ததானாலும் அப்படியே விடப்பட்டது
இரண்டாயிரத்து நான்கில், என் பழைய KIS சினேகிதர்களான டேவிட் எஸ்டெஸ், ஆலிவர் ராஜாமணி, இருவரையும் அமெரிக்காவில் சந்தித்தேன். நியூயார்க்கிலும், ஆஸ்டின் டெக்ஸாசிலுமாக “FIREFLY – மின்மினிப்பூச்சி” என்ற பெயரில் ஓர் ஆல்பம் ரிகார்ட் செய்தோம். “ கலி யுகம்” என்ற இதில் கடைசியாக வரும் பாடல், சர்வதேச பாட்டெழுதும் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்று, இறுதிச்சுற்றுவரை வந்து, வெகுவாகப்பாரட்டப்பெற்றது.
ஜாய் டீ பார்னம் போன்ற பெயரும் புகழும் பெற்ற பெர்முடாவின் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பெர்முடாவின் புகழ் வாய்ந்த 2005.௵த்திய இசைவிழாவை ஆரம்பித்து வைக்கும் பேறு கிடைத்தது – இதில் பாட்டீ லாபெல் என்பவர் இசைத்த “ NEED TO REST – ஓய்வு வேண்டும் “ என்ற பாடலுடன் ஆரம்பித்தோம். ந்யூயார்க்கிலுள்ள “ ஸௌண்ட் வொர்க்ஸ் ரெகார்டிங் ஸ்டுடியோ- SOUND WORKS RECORDING STUDIO “வில் “ மின்மினிப்பூச்சி’ என்ற பாடலை ரிகார்ட் செய்த காமிலோ க்ராடெ, கணினி மூலம் ரிகார்ட் செய்யும் முறையை எனக்குக் கற்றுக்கொடுத்தார் – அதன் பின் சொந்தமாக எனது வீட்டிலேயே ஒரு ரிகார்டிங் ஸ்டுடியோ ஆரம்பித்து, நானே ஆல்பங்களைத் தயார் செய்ய முடிந்தது – “ எக்லெக்டியா – ECLECTIA “ என்ற பெயரில் 2006ல் வெளிவந்தது.
இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில், கோடைக்கானலுக்குத் திரும்பி வந்தேன் – அடுத்த எட்டு வருடங்கள் பரபரப்பாக ,ஓய்வில்லாத பணியிலும் குடும்ப வாழ்விலும் சென்றதால், இசை மறுபடி பின்னோக்கித் தள்ளப்பட்டது. .இரண்டாயிரத்து ஒன்பதில், KIS ன் சமூக அனுபவத்துறையில் நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, மற்றொரு முறை கோடை இசைவிழாவை எடுத்து நடத்த முடிந்தது. இம்முறையும், இருபது௵ங்களுக்குப் பின்னரானாலும், அதே மெர்ஸி இல்லத்திற்காக, கோடைக்கானலின் வணிகப் பெரு மக்களோடு இணைந்து நடத்தினோம்.
பாரம்பரிய கிடார் கலைஞர் லூயீஸ் சௌத்வுட், வயலின் கலைஞர் டேவிட் ஃப்ரான்ஸிஸ், உலகஇசையில் வல்லுனர் ஆலிவர் ராஜாமணி, ஸ்காட் பேய்ஜ், காலஞ்சென்ற ஜேம்ஸ் கென்னி, டெம் நூன், டேவிட் பேட்ஸ், போன்ற உலகப் புகழ் வாய்ந்த இன்னும் பலர், பங்களூரிலிருந்து அலெக்ரொ ஃபட்ஜ் என்ற குழு, கோடைக்கானல் சர்வதேசப்பள்ளியின் மாணாக்கர் ஸிட் வாஷி போன்றோரும் இந்த இசை விழாவில் பங்கேற்றனர். KIS மாணாக்கர்கள் கழிவுப்பொருட்களிலிருந்து தயாரித்த கலைப்பொருட்கள் கொண்ட கண்காட்சியும், இந்த இசைக்கலைஞர்களால் நடத்தப்பட்ட தொடர் இசைப்பட்டறைகளும் வகுப்புகளும் இவ்விழாவில் இடம்பெற்ற முக்கியமானவை. இதன் தொடர்ச்சியாக, தினந்தோறும், மாலைவேளைகளில் எல்லோரும் கூடும் நிகழ்ச்சிகளும், முடிவில், கால்ஃப் கிளப்பில் கணப்புத்தீ மூட்டி பாடகர்களும் மற்ற இசை வல்லுனர்களும் கூடிய இசைக்கச்சேரிகளும் .இவ்விழாவிற்கு முத்தாய்ப்பாகவிருந்தது. இதில் ஈட்டிய நிதி, மெர்ஸி ஹோமிற்கு முக்கியமாகத் தேவைப்பட்ட சூரிய ஒளியில் இயங்கும் நீர் கொதி கலன் நிறுவவும் மற்ற மேம்பாட்டிற்கும், உதவியது.
இரண்டாயிரத்து பதினான்கில் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தோம். ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே அருகிலிருந்த டூவூம்பா கபே ஒன்றில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நான் இசைக்கச்சேரிகளில் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டேன் .ஆன்லைன் மூலம் உலகின் மிகப்பிரபலமான கிடார் கலைஞர்களின் அறிமுகம்கிடைத்தது- அமெரிக்காவின் லான்ஸ் ஆலன் உள்பட.- இவர்கள் எல்லோருடைய பரிச்சயத்தால், எனக்கு ஒரு பின்பலம் கிடைத்தது; எல்லோருடனும் தொடர்பு ஏற்படுத்திகொண்டும் இணைந்துகொண்டும், நான் என் இசை உலகப்பயணத்தைத் தொடர்ந்தேன்- ஸ்பாடிஃபய் – SPOTIFY – முதலிய பெரிய தளங்களுடன் கைகோர்த்து செயல்படமுடிந்தது. இந்த அரிய சமூகத்தொடர்பாலும், கிடார் கலைஞர் அகஸ்டின் அமிகோவின் FLORECILLA RECORDS – ஃப்ளாரிஸெல்லா ரெகார்ட்ஸ் “ என்ற முத்திரையாலும், மாதந்தோறும் கிட்டத்தட்ட ஒரு லக்ஷம் பேர் என் பாடல்களைத் தொடரவும் எழுபது லக்ஷம் தடவை எனது பாடல்களை இணையத்தில் செலுத்தவும் முடிகிறது.
இவ்வளவு கால இடைவேளைக்குப்பின் புகழ் வாய்ந்த இசைக்கலைஞனாக வேண்டும் என்ற எனது சிறு வயதுக் கனா நிறைவு பெறுகிறது. ப்ரிஸ்பேனிலுள்ள கைரோஸ்ட்ரீம்- GYROSTREAM IN BRISBANE –என்ற கம்பெனி எனது நூற்றுக்கும் மேலான பாடல்களை விநியோகிப்பதால் கிடைக்கும் ஆதாய உரிமைகள் எனது வருமானத்தில் பெரும் பங்கு பெறுகிறது.
ப்ரிஸ்பேனுக்கருகிலுள்ள டூவூம்பாவிலிருக்கும் என் வீட்டு ஸ்டுடியோவில் சராசரியாக வாரத்திற்கு ஒரு பாடலாவது என்னால் ரிகார்ட் செய்ய முடிகிறது. பொதுவாக ,நான் புனையும் இசையும் பாடல்களும், உலக அமைதி வேண்டுவதாகவே இருக்கும் – அதுவும் பல வேறு இசைப்பாணிகளையும் ,மெட்டுக்களையும் கலந்து மானிடத்தின் பன்மையிலும் இருக்கும் ஒருமையை வெளிப்படுத்துவதாகவே இருக்கவேண்டும் என்பதுதான் என் முயற்சி
மாத்யு ஜோசஃப், என்ற என் பெயரில்தான், என் விரலால் வாசிக்கும் கிடார் இசை வெளியாகிறது என்றாலும், இன்னும் பல புனைப்பெயர்களிலும் நான் பாடல்கள் புனைந்துள்ளேன். – “LEKTRO MONK” – லெக்ட்ரொ மாங்க்.”,என்ற பெயரில் எலெக்ட்ரிக் நைலான் கிடார் வாசிப்பிற்கும், “ NIRAV ANUGRAHA – நிரவ் அனுக்ரஹா “ – என்பது நமது இந்திய ஆன்மீகப் பாடல்களுக்கும், “MATAMATIX” – மாடாமாடிக்ஸ் “ [ இது என் பழைய கோடைக்கானல் புனைப்பெயர்களில் ஒன்று ] – கிடார் வாசிப்பிற்கும், “MATATRONIX” – சினிமா சம்பந்தப்பட்ட பாடல்களுக்குமானது. .பல இசைத்தொகுப்புக்களுக்கு இந்திய ஃபோக் இசைமெட்டுக்கள் அதிகம் உண்டு. – உதாரணத்திற்கு” EP மூட் மசாலா “. ஒரு சில,- EP ஆட்ஸ் அண்ட் ஈவன்ஸ் – EP ODDS AND EVENS “க்கு வேறுவிதமான குறிப்பீடுகள். பல பாடல்கள் வாத்தியங்களில் உலக இசையின் கலப்புள்ளதாக – “EP – TALES FROM THE LIGHTHOUSE “- கலங்கரை விளக்கின் கதைகள் “, இருப்பவை.
எல்லாவற்றிற்கும் மேலாக, “ தி கோடியின் பாடல்” – இது கோடைக்கானலுக்கும், இனிய மனங் கவர்ந்த இம்மலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. நான் இந்த ஊருக்கு முதலில் வந்தபோது எழுதப்பட்டது – இம்மலைகளின் அற்புத அழகும், இங்கிருந்த பல்வகை வாழ்க்கை முறைகளும் ஏற்படுத்திய தீவிரமான தாக்கங்களின் பிரதிபலிப்பு இருக்கும் – கணப்புத்தீயில் குளிர் காய்ந்துகொண்டு இசைக்கும் கச்சேரிகளும், ருசி மிக்க ஆப்பிள்பையும், சீஸும், டீக்கடைகளும், எங்குமிருக்கும் பரஸ்பர உடன்பாடும், கோடைக்கானலுக்கே உரித்தான கொப்பளிக்கும் உற்சாகமும் இப்பாடலின் பின்புலம்.
அதனால் வந்த வரிகள் இவை :
“ இன்னும் கொஞ்சம் செட்டர் சீஸ், இன்னொரு துண்டு ஆப்பிள்பை, இன்னும் கொஞ்சம் அந்த மான்னா ப்ரவுன் ப்ரெட், அதன் பின்னர் அந்தக்கட்டங் காப்பியை ருசிக்கலாம் “
மாத்யு ஜோசஃப்பின் பாடல்கள் SPOTIFY, APPLE MUSIC, JIOSAAVN, BANDCAMP முதலியவற்றில் கேட்கலாம்.