மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியமானதொரு பல்லுயிர் வளாகத்தில் சிறு வயதில் வளர்ந்தபோது, அதன் சிறப்பை அறியாமல் இருந்து விட்டேன், நான் அப்போது பார்த்த பறவைகளும் வனவிலங்குகளும் பல மறைந்து அழிந்துவிட்டன. காலையில் கண்விழிக்கும் போதே கேட்கும் பறவைகளின் கூச்சல் ஒலிகளும், வீட்டின் பின்புறம் வாழ்ந்த பெரிய அணிலும், மழைக்குப் பின் மண்ணில் ஊர்ந்து செல்லும் மண் புழுக்களும், பின் தாழ்வாரத்திற்கு எப்போதாவது வரும் பெரிய விட்டிற்பூச்சிகளும், அப்போதெல்லாம் எனக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றின. பல வருடங்களுக்குப் பின்னர், ஷெண்பகனூருக்கு அருகேயுள்ள சிறு கிராமமான பிரகாசபுரத்திற்கு நான் வந்தபோது, அங்கிருந்த வனவிலங்குகளையும், பறவை இனங்களையும் பார்க்கையில், ஒரு காமிராவிற்குப் பின்னிருந்து என் பழைய இளம் வயதை மறுபடி கண்டு பிடிப்பது போல் உணர்ந்தேன்.
பிரகாசபுரத்தில் என் குடும்பத்தினரைச் சந்திக்கவேண்டி, 2015 லும், 2016 லும் அடிக்கடி சென்றதால், கிடைத்த நேரமெல்லாம் வீட்டிற்குப் பின்னால் உள்ள அடுக்கம் சோலையில் படங்களெடுக்கச் சென்று விடுவேன். அந்த இரு வருடங்களில், நான் என் சிறு வயதில் கண்ட பறவைகள் மட்டுமின்றி, சமீபகாலத்தில் ஆவணப்படுத்தப்படாத பல பறவைகளையும் கண்டேன்.
பல பறவையினங்கள் தாங்கள் புலம்பெயரும் போது செல்லும் பாதையில்தான் பிரகாசபுரம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். என் தாயாரின் தோட்டத்திற்கு வழக்கமாக வரும் கொண்டலாத்திப்பறவை வெயிற் காலத்தில் முட்டையிட்டுக் குஞ்சுகள்பொரித்து, குளிர்காலம் வரை இருக்கும். குளிர்காலங்களில், வீட்டினருகே இருந்த பேரித் தோப்பிற்குள்ளிருந்து வெளியேறி என்னைப் பார்க்கவரும் பழுப்புக்கீச்சான், வெண் வயிற்றுக் கரிச்சான், ஆரஞ்சு மின்சிட்டு, கருந்தொண்டை சில்லை, காட்டுப் பஞ்சுருட்டான், ஈப்பிடிப்பான், மலபார் தீக் காக்கை போன்ற பறவைகளும் நிறையக்காணும். இந்த ஆறு வகைகளும், இந்த சோலைக்கு அரியவை; தவிர, அவை சாதாரணமாக வாழும் மலை உயரங்களுக்கு மேலேயே காணப்பட்டன.
Eurasian Blackbird White Bellied Drongo
ஒர் மஞ்சு சூழ்ந்த குளிரும் மாலைப் பொழுதில், அருமையான அனுபவம் ஒன்று கிடைத்தது – காட்டின் ஓரத்தில், எட்டு ஜோடி ஆரஞ்சு மின்சிட்டுக்கள் குதித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்ததையும், சிறிது நேரத்திற்குப் பிறகு, இருள் சூழும் போது அந்த ஆரஞ்சு மஞ்சள் பறவைகள் மஞ்சினூடே வனத்திற்குள் பறந்து சென்று மறைந்ததையும் காணக் கண் கோடி வேண்டும்.
என் சிறு வயதில் நான் நிறையப் பார்த்த நீலகிரி காட்டுப்புறா, 2015ல் அரிதாகி விட்டது. அப்போதெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பறந்து வந்து, வீட்டின் பின் இருந்த சோலையில் இரவு நேரத்தில் அடையவரும்.
காலையில், ஒரு மஞ்சள் பட்டாணிக் குருவி, தனது பிரதி பிம்பத்தை ஜன்னல் கண்ணாடியில் கண்டு, அதைக் கொத்திக் கொத்தி என்னை எழுப்பி விடும். வெண் கன்னக் குக்குருவனின் வழக்கப்பட்ட “ குட்ற்றூக்- குட்ற்ரூக்- குட்றூக்” என்ற கூவலும், சீகாரப் பூங்குருவியின் வேடிக்கையான சீட்டி ஒலியும் கேட்ட உடனேயே, அவசர அவசரமாக நான் என் காமிராவை எடுத்து சில படங்களாவது எடுக்க ஓடுவேன். சாலை யிலிருந்து வீட்டிற்குள் வரும் பாதையில் காணும் கால்குளம்புத் தடங்கள், இரவு வந்தது காட்டுமாடா அல்லது காட்டுப்பன்றியா என்பதைத் தெரியப்படுத்தும். பெரிய மலபார் அணிலின் அழைப்புக்கள் நான் சோலைக்குள் செல்லும் போது கேட்கும்.

மஞ்சள் பட்டாணிக் குருவி
பம்பாய் இயற்கை வரலாறு சொசைடியின் கூற்றுப்படி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருபத்தி ஒன்பது பறவை இனங்கள் எப்போதுமே வசித்துவருவதாகத்தெரிகிறது; அதில், பத்து இன வகைகளை நான் பிரகாசபுரத்தில் பார்த்திருக்கிறேன் : நீலகிரி நெட்டைக்காலி– IUCN ; VULNERABLE, நீலகிரி காட்டுப்புறா- IUCN: VULNERABLE; கருப்பு ஆரஞ்சு ஈப்பிடிப்பான் – IUCN ; NEAR THREATENED ; நீலகிரி ஈப்பிடிப்பான் – IUCN ; NEAR THREATENED; கருஞ் சிவப்பு சிலம்பன் – IUCN : LEAST CONCERN ; நீலகிரி தேன்சிட்டு – IUCN: LEAST CONCERN ; வெண் கன்னக் குக்குருவன்– IUCN : பழநி பூங் குருவி, சிவப்புத் தேன் சிட்டு – IUCN: LEAST CONCERN; மஞ்சள் புருவ சின்னான்: IUCN : LEAST CONCERN.
வெண் கன்ன குக்குருவன் நீலகிரி தேன்சிட்டு மஞ்சள்புருவ சின்னான்
பிரகாசபுரத்திலுள்ள ஆச்சரியப்படத்தக்க பறவைகளின் பல்வகைமையை நான் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருந்தபோது, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பதில், ரெவெரெண்ட். டாக்டர். S.B. ஃபேர்பாங்க்ஸ் என்பவர் தொகுத்த பறவைகளின் பட்டியல் ஒன்று கிடைத்தது. – இவரை, 1909ல் வெளிவந்த கோடைக்கானலைப்பற்றிய வழிகாட்டிப்புத்தகம், “ உற்சாக மிகுந்த இயற்கைக் களப்பணியாளர்” என்று வருணித்திருந்தது. அமெரிக்கன் போர்ட் ஆஃப் மிஷன்ஸ் உடன் பணியாற்றிய ஃபேர்பாங்க்ஸ், அப்போது இருந்த பறவைகளைப் பற்றிய தகவல்களை நிறையத் தந்திருந்தார் – அதில் பலவகைகள், இன்னும், நம் காலத்திலும் இருக்கின்றன.
அருட்தந்தை டாக்டர் ஃபேர்பாங்க்ஸ் எழுதிய பறவைகள்பட்டியல் – 1909 : வெள்ளைக் கண்ணி, சின்னான், கருஞ்சிவப்பு வால் கீச்சான், கொண்டலாத்தி, வெண் முதுகுப் பிணம் தின்னி, கரும் பருந்து, அண்டங்காக்கை, செந்தலைப் பூங்குருவி, மலபார் பூங்குருவி, குட்டை இறக்கையன், வெண் கன்ன குக்குருவன், நீலகிரி மலைச் சிட்டான், காட்டுக்கோழி, செங்காட்டுக் கோழி, வர்ணப் புதர்காடை, சின்ன உழவாரன், மலபார் தீக் காக்கை, மலை மூக்கன், விசிறி வால் கோரை உள்ளான், நீலச்சிட்டு. |
2015 -16ல் இந்த இடத்திலிருந்த பறவைகள் பற்றி நான்ஆவணப் படுத்திய பின், என் பட்டியல் : காட்டுக்கோழி, சிவப்புச் சுண்டாங்கோழி, வெள்ளைக்கண்ணி, மலைச்சிட்டான், கருந்தலை குயில் கீச்சான், சாம்பல் தலை ஈப்பிடிப்பான், வளைந்த அலகு சிலம்பன், காட்டுச் சிலம்பன், சீகாரப் பூங்குருவி, கரு வால் சின்னான், சின்னான், சிவப்பு மீசைச் சின்னான், டிக்கெல் மலர்கொத்தி, கருப்பு வெள்ளை புதர்சிட்டு, கருப்பு வெள்ளை சோலைபாடி, மலை நாகணவாய், வெல்வெட் நெற்றி மரம் இரங்கி, குட்டைக்கிளி, ஜெர்டன் புதர் வானம்பாடி, நீலகிரி நெட்டைக்காலி, சின்ன உழவாரன், நீளவால் கீச்சான், அரச வால் ஈப்பிடிப்பான், மஞ்சள் பட்டாணிக் குருவி, மலை நாகணவாய், கருந்தொண்டை சில்லை, மஞ்சள் வாலாட்டி, செங் கூம்புஅலகு சில்லை, மஞ்சள் பிடரி பெரு மரங்கொத்தி, மஞ்சள் மார்பு பெரு மரங்கொத்தி, செதிள் வயிற்று மரங்கொத்தி, செந்தலைப்பஞ்சு உருட்டான், காட்டுப்பஞ்சு உருட்டான், குயில், செம்பகம், அக்கா குயில், பஞ்சவர்ணப் புறா, புள்ளிப் புறா, கொண்டைக் கழுகு, கரும் பருந்து, பாம்புக் கழுகு, மஞ்சள் வாலாட்டி, இலைக்கதிர் குருவி, டிக்கெல் இலைக்கதிர் குருவி, தவிர மற்ற பல்வித இலைக்கதிர்குருவிகள், பலவித கீச்சான்கள், மர சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, லொடென் தேன் சிட்டு,ஊதா தேன் சிட்டு, பசிபிக் தகைவிலான், அண்டங்காக்கை, காக்கை, புதர்காடை. |
நான்ஆவணப்படுத்தியதைவிடவோ, அல்லது S.B. .ஃபேர்பாங்க்ஸ் எழுதியதைவிடவோ, இன்னும் அதிகமான பறவை இனங்கள் பிரகாசபுரத்தில் இருக்கலாம். இத்தகைய சிறுவனத்திலேயே கூட இவ்வளவு அதிகமான வெவ்வேறு வகைப்பட்ட பறவைகள் இருக்கின்றன என்பதை நான் அதிருஷ்டவசமாகக் கண்டு பிடித்த போதும், இவற்றை எல்லாம் கவனத்துடன் பாதுகாக்கவில்லை என்றால், பின் வரும் தலைமுறைகளுக்குத் தெரியாமலேயே , இவை மறைந்து அழிந்து போய்விடும் வாய்ப்பு இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மஞ்சள் புருவ சின்னான் : இதில் மூன்று வகைகளிருக்கின்றன – மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், நீலகிரிமலைகளில், ஸ்ரீலங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவை, மஹாராஷ்ட்ராவிலும் ஸ்ரீலங்காவின் தெற்கு மேற்கு மாகாணங்களில் உள்ளவற்றை விட இன்னும் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன.

மஞ்சள் புருவ சின்னான் :
கொண்டலாத்தி : “ பூ—பூ- பூ” என்ற அதனுடைய கூவலில் இருந்துதான் , இதற்கு அதன் பெயர் வந்தது. வெயிலில் இளைப்பாறிக்கொண்டோ மண்ணில் குளித்துக்கொண்டோ இவற்றை அதிகம் காணலாம். பெண்பறவைகள் ,ஒரு வித துர்நாற்ற மிக்க கழிவைத் தமது முட்டைகள் மீது பூசி, அவற்றிற்கு ஆபத்து வராமல் காப்பாற்றுகின்றன.

கருப்புவெள்ளை சோலைபாடி ; இவ்வகைப்பறவைகள் மிகவும் இனிமையாகப் பாடக்கூடியவை ; மற்றப் பறவைகளின் கூவல்களை அப்படியே போலிக்குரல்களில் பின்பற்றக்கூடியவை. எப்போதுமே கூட்டம் கூட்டமாகவே குதித்துக்குதித்துச் சென்றுகொண்டிருக்கும் இப்பறவைகள், ஆர்வமிகுதியால் மனிதர்களருகில் கூட பயமின்றிவரும்.
வெண்கன்ன குக்குருவன்: இதைக் காண்பதைவிட, இதன் கூவல்தான் கேட்கும் – “ குட்ரூக் – குற்றூக் – குட்ரூக்” – குறிப்பாக, மஞ்சு மூடியிருக்கும் நாட்களில் சப்தம் அதிகரித்துக் கொண்டேபோகும்.

மஞ்சள் பட்டாணிக்குருவி
இப் பறவையினம் ஜோடிகளாகவோ அல்லது மற்றப்பறவைகளுடன் கூடிக்கூட்டமாகவோ காணப்படும். கலந்த மாதிரிக் கூட்டத்திலிருந்தால், அவற்றுடன் சாம்பல்ஈப்பிடிப்பான், வெள்ளைக்கண்ணி , முதலியவையும் இருப்பது சாதாரணம். அவற்றின் இனப் பெருக்கக் காலங்களில், தங்கள் சிறகுளைப் படபடவென அடித்து, வால் இறகுகளை மேம்படுத்திக் காண்பிப்பதையும், தலைக்கொண்டையை வீசுவதையும், நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் பார்க்கலாம்.

மஞ்சள் பட்டாணிக் குருவி
செதிள் வயிற்று மரங்கொத்தி : தலைக்கொண்டை ஆண் பறவைகளுக்கு, சிவப்பாகவும், பெண் பறவைகளுக்குக் கறுப்பாகவும் இருக்கும். வனங்களின் ஓரங்களிலுள்ள இடங்களில் இவற்றைக் காணலாம் – இப்பறவைகளுக்கு வாழைப்பூ மிகவும் பிடித்த ஒன்று.

நீலகிரி மலர்கொத்தி : மலர்கொத்தி குடும்பத்தில் உள்ள சிறிய பறவை – அதிகமாகப் பூக்களில் இருக்கும் தேனையும், சிறு பழங்களையும், சின்னச் சின்ன பூச்சிகளையும் உண்டு வாழும். தேனை உறிஞ்ச அவற்றின் நாக்குகள் ஏற்றவை.

வெண்வயிற்றுக் கரிச்சான் : இவை இந்தியா முழுவதிலும் காணப்படுபவை – எது கிடைத்தாலும் உண்ணக்கூடியவை – சிறு பறவைகள், பூச்சிகள், தேன் என்று, எல்லாமே இவற்றிற்கு உணவே. இவை வாழும் உயரத்தின் உச்சியில், பிரகாசபுரம் இருக்கிறது.

மலைச் சிட்டான் : பூங்குருவி குடும்பத்தைச் சேர்ந்த இவை, இந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும் மட்டும்தான் இருக்கின்றன. கருப்பு வெள்ளை சோலைபாடியைப் போன்ற குரலுடைய இவை, மிக இனிமையாகப்பாடுபவை. பழத்தோட்டங்களில் செடிகளுக்கு இடையே மண்ணைக் கிளறிக் கொண்டிருப்பதை அடிக்கடி காணலாம்.

பெரிய பொன்முதுகு மரங்கொத்தி : மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் காணப்படும் இப்பறவையினம், மிகஅழகிய, பெரிய அளவிலுள்ள மரங்கொத்திகளைச்சார்ந்தது. திறந்த வனச் சரகங்களில் சப்தமிட்டுக் கூவுவதைக் கேட்கவும், மரங்களைக் கொத்திக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். ஆண் பறவைகளுக்கு சிவப்புக் கொண்டையும், பெண் பறவைகளுக்குக் கறுப்புக் கொண்டையும் இருக்கும். இவை, பூக்களிலிருந்து தேன் அருந்துவதோடு, சிறு புழு பூச்சிக்களையும் உண்ணும்.
