இன்ஸ்டாக்ராம் பயனாளியும், கோடைக்கானலின் ஆதிவாசிப் பழையருமான தேனெடுக்கும் மாரியின் குறிப்புகளின் உதவியுடன் தொகுக்கப்பட்டது.
கைபேசியின் காமிரா சோலைக்காட்டினூடே ஓரிடத்தைக் குறிப்பிட்டுப் பெரிதாக்கிக் காண்பிக்கிறது – ரீங்கரிக்கும் பெரியதோர் தேனீக் கும்பலுக்கிடையே ஐம்பதடி உயரத்தில் ஒற்றை மூங்கிலின் மேல் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு ஒரு கையில் அரிவாளும், மற்றொரு கையில் புகையும் குச்சிகள் கட்டிய கம்போடும் நிற்கும் ஓர் பழையர் தென்படுகிறார் – கையிலிருக்கும் கம்பிலிருந்து வரும் புகையைத் தேன்கூட்டை நோக்கி வீசுகிறார் – புகை பட்டதும் கலையும் தேனீக்கள் மறுபடி கூடும் முன், லாவகமாக, மற்றொரு கையிலிருக்கும் அரிவாளால், தேன் கூட்டினுள் அடர்ந்த மஞ்சள் நிறத் தேன் நிரம்பி வழியும் தேனடையை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறார்.
பழனிமலைச்சாரலில் பாறைத்தேனீக்களின் கூடுகளிலிருந்து தேனெடுத்தல்.
இந்த வீடியோவில் இருப்பதுதான் மாரி – கோடைக்கானலின் ஆதிவாசிகளான பழையர் குலத்தைச் சேர்ந்தவர் – பழனி மலைச்சாரலின் காடுகளில் தேன் சேகரிக்கும் அவரது முனைப்புகளை இத்தகைய பல காணொளிகளில் பதிந்திருக்கிறார். பழையரினத்தின் இளைஞர்களைப்போல், மாரியும், தேனைத்தேடி எடுப்பதிலுள்ள நுணுக்கங்களை நன்கு கற்றுப் புரிந்து செயல்படுகிறார்.
நாற்பது வயதாகும் மாரி, சிறு வயதிலிருந்தே தேன் எடுப்பதில் ஈடுபட்டவர் – காட்டில் கிடைக்கும் நீளமான மூங்கில்களைக் காட்டுக் கொடிகளைக் கொண்டு ஏணி போல் கட்டி உபயோகப்படுத்துவதில் வல்லவர்; காட்டில் அவ்வப்போதுள்ள வானிலையையும், எங்கெங்கு எவ்வகைப்பூக்கள் அச்சமயத்தில் பூத்திருக்கின்றன என்பதையும், அவற்றிலிருந்து எவ்வகைத் தேனீக்கள் தேன் சேகரிக்கும் என்ற பலவித நுணுக்கங்களையும் நன்கு கற்றுத்தெரிந்துகொண்டவர். இது தவிர, பலவிதத் தேன்களின் மருத்துவ குணங்களையும் பற்றி நன்கறிந்தவர் – தான் கற்றுக்கொண்ட இவற்றை எல்லாம், தனது இன்ஸ்டக்ராம் அக்கவுண்டில், காட்டில் நடந்து போகும்போது, காணொளிகள் எடுத்து விவரித்துப் பதிந்திருக்கிறார்.
தேவர்களின் அமுதமாகிய தேன்
காடுகளிலிருந்து எடுக்கப்படும் தேன் மிகவும் ருசியானது- காட்டைப் போன்றே பல்வேறு சுவைகளின் கலவை – இனிப்பும், சில சமயங்களில் லேசான புளிப்பும், அவ்வப்போது ஒரு வித துவர்ப்புச் சுவையும் கொண்டது – காடுகளின் மாறுபடும் பல்வேறு சீதோஷ்ண நிலைகளும் அவற்றால் வரும் மாற்றங்களால் மலர்களில் வரும் தேனில் பிரதிபலிக்குமென்பதும் மாரிக்கு நன்றாகத்தெரியும்.
உதாரணமாகப், பழனிமலைச்சாரலில், இரு மழைக்காலங்கள் உள்ளதால், இரண்டு தனித் தனி தேன் சேகரிக்கும் பருவங்கள் உண்டு. ஏப்ரல் மாதக்கடைசியில், காடு முழுதும் நாவல் மரங்கள் பூத்துக் குலுங்கியிருப்பதால், அப்போது தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேன், சற்றுத் துவர்ப்புச் சுவையுடன் இருக்கும். நாவற் பூக்கள் உதிர்ந்து, மற்ற வகைப்பூக்கள் மலரும் போது, அவற்றின் கலப்புச்சுவையாக மாறும். யுகலிப்டஸ் மரங்கள் இந்த மலைகளில் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இங்குள்ள தேனீக்கள் இதன் மூலம் மாறுபட்ட இந்தசூழலுக்குத் தங்களை மாற்றிக்கொண்டு விட்டன – அக்டோபர் கடைசியில் கிடைக்கும் தேன் மதுரமாகவும் குங்கிலியத்தின் மணத்துடனும் இருக்கும்.


புகையின் மூலம் கூட்டிலிருந்து தேனீக்களைக் கலைத்து விடுகிறார் மாரி. படம் உபயம் : குறள்.
தேனின் மணமும் சுவையும் அடர்த்தியும், அதை உற்பத்தி செய்யும் ஈக்களைப் பொறுத்து வேறுபடும். பழனி மலைச்சாரலில், நான்கு வேறுபட்ட தேனீ வகைகள் இருக்கின்றன. – APIS DORSATA எனப்படும் பாறைத்தேனீ, APIS CERANA எனும் ஆசியத் தேனீ, APIS FLOREA என்ற சிறுதேனீ, TRIGONA SPP என்ற கொடுக்கில்லாத தேனீ – ஒவ்வொன்றும், வெவ்வேறு விதமான பூக்களிலிருந்து தேன் சேகரிக்கும்; வெவ்வேறு வகைப்பட்ட தேனீக்கள், காடுகளின் பலதரப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கூடு கட்டி, தேனடையில் தேன் சேகரிக்கும். இதனாலேயே, வெவ்வேறு இடங்களில் சேகரிக்கும் தேனுக்கும், அந்தந்தப் பருவத்தில் விளையும் தேனுக்கும் சுவையிலும், நிறத்திலும் வித்தியாசமிருக்கும் – கருஞ்சிவப்பு நிறத்திலிருந்து உருக்கிய தங்கம் போன்ற நிறம் வரை, ஒவ்வொரு காலத்திலும் தேன் மாறுபடும். அதேபோல், மெல்லிய பூ மணத்திலிருந்து சில மலர்களின் அடர்ந்த செழுமிய வாசனையுடனும் காணப்படும்.
மாடுகளும் குதிரைகளும் விரும்பி உண்ணும் ஒரு வகையான குறிஞ்சிமலர். எல்லோருக்கும் தெரிந்த நீலக்குறிஞ்சியைப்போல், இதுவும் பன்னிரண்டு வருடங்களுக்கொரு முறை மலர்வது; இதிலிருந்து சேகரிக்கப்படும் தேனுக்கு விசேஷமான மருத்துவ குணங்களுண்டு.
பழையர்களும் தேனும்
பல நூற்றாண்டு காலமாகப் பழனி மலைச்சாரலில் தேன் சேகரித்து வருவதால், தேனைப்பற்றிய வெவ்வேறு பல்வகை நுணுக்கங்களை அறிந்தவர்கள் பழையர்கள்; தலைமுறை தலைமுறையாக இத்தகைய சிறு சிறு குறிப்புக்களைக் கேட்டறிந்து, நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். முன்னோர்களிடமிருந்து கற்றவற்றைப் பயன்படுத்தி, தமது வாழ்விடங்களின் வேறுபாட்டைப் புரிந்து கொண்டது மட்டும் அல்லாது தாமும் நேரடியாக மலைக்காடுகளைக் கவனித்து வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.,
ஒவ்வொரு தடவையும் தேன் சேகரிப்பதற்காகக் காட்டிற்குள் செல்லும்போது, மாரி, தன் மூதாதையர் தனக்குக் கற்றுக் கொடுத்ததை நினைவு கூர்ந்து கொள்கிறார். “ தேனெடுக்குங் காலங்களில், தேனீக்களும், தேன் கூடுகளும்தான் என் மனதிலும் கனவுகளிலும் நிறைந்திருக்கும்; அவற்றைப் பற்றிய கனவுகள் தான். என்னை வழிகாட்டும்; நெடிதுயர்ந்த மரங்களிலும் செங்குத்தான மலை உச்சிகளிலும் எந்த வழிகளில் ஏறுவது போன்ற விவரங்களை என் கனவுகள் எனக்குத் தெரியப்படுத்தும்; அதே போல், எனக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும் அறிவிக்கும். என் கனவுகளை நான் உன்னிப்பாக ஞாபகத்தில் வைத்துத் தான் செயல்படுவேன் – என் முன்னோர்கள்தான் எனக்கு வரும் கனவுகளின் மூலம் என்னைக் காப்பாற்றி வருகிறார்களென்றே நான் நம்புகிறேன்” என்கிறார் மாரி.


பெருமுயற்சியின் பின் கிடைக்கும் பொன்னிறத்தேன் – படங்கள் : குறள்.
பழையர்கள், ஒவ்வொரு பருவத்திலும், ஒரு கூட்டிலிருந்து ஒரு தடவைக்குமேல் தேனெடுக்காதது மட்டுமின்றி, கூட்டிலிருக்கும் ஈக்குஞ்சுகளையும் கலைக்காமல் தேன் சேகரிப்பதால், அதே கூட்டில் தேனீக்கள் மறுபடியும் வாழ்ந்து வளர முடிகிறது- ஆனால், எப்போதாவது கூட்டிலுள்ள குஞ்சுகளை எடுக்க நேர்ந்தால், அவற்றை வெகுவாக ரசித்துச் சமைத்து உண்கின்றனர். அதிகமாகக் கிடைக்கும் பாறைத்தேனீயின் தேனும் ஆசியத்தேனீயின் தேனும் தான் பரவலாக விற்பனைக்கு வரும் ; அரிதான தேன் வகைகளை அவற்றின் மருத்துவ குணங்களுக்காகப் பழையர் தம் இல்லங்களில் பாதுகாத்து வைப்பர்.
இக்கதையின் மறுபக்கம்
காடுகளிலுள்ள தேனீக்களுக்கும் பழையர்களுக்குமான இந்தப் பாரம்பரிய மிக்க உறவு நீடிக்கப் பலதரப்பட்ட தடைகள் உள்ளன. காட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் கட்டுப்பாடின்றிச் சென்று வர முடியாததுதான். வெகு முக்கியமானது. இரண்டாயித்து ஆறாம் வருடம், பன்னெடுங்காலமாகக் காட்டில் வசிக்கும் மக்கள் எப்போது வேண்டுமானாலும் காட்டினுள் தாராளமாகச் சென்று, அங்கு விளையும் பொருட்களைத் தமது வாழ்வாதாரத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் FOREST RIGHTS ACT எனும் சட்டத்தை இயற்றி இருந்தாலும் அதை எல்லா மாநிலங்களும் சரி வர அமல் படுத்துவதில்லை. இதில், தமிழ் நாடு தான் மிகப் பின்தங்கி இருப்பதாக நாளேடுகள் கூறுகின்றன. இச்சட்டம் வந்து பதினைந்து வருடங்களாகியும், வெகு சில பழங்குடியினருக்கே, எவ்விதத் தடையுமின்றிச் சென்று வர அனுமதி கிடைத்துள்ளது – இவ்விதம் “ பெர்மிட்” கிடைத்தவர்களும் காட்டினுள் அதன் பரப்பளவில் பத்து சதவிகிதமே செல்ல அனுமதிக்கப்படுவர்.

மூலையாற்றினருகே மாரி – வலதுகோடி – தனது நண்பர்களுடன்
மாரியின் இன்ஸ்டக்ராம் காணொளிகள், பழனி மலைச்சாரலில் இவர்களது வாழ்க்கையை
ஆவணப்படுத்துகிறது.
படம்: குறள்
தேனெடுக்கும் மாரி போன்றவர்கள் தற்காலத்திய சூழலில் தமது பாரம்பரியத் தொழில்களைத் தொடர்ந்து செய்ய இன்னும் பல ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. ஓர் உதாரணமாக – சமீபத்தில் நடந்த பழங்குடியினரின் பொதுக்கூட்டமொன்றில், நெடிதுயர்ந்த மரங்களிலும், செங்குத்தான பாறைகளிலும் பாதுகாப்பாக ஏறுவதற்கு நவீன மலையேறும் உபகரணங்கள் – MOUNTAIN CLIMBING GEAR – பயன்படுத்துவது பற்றி ஆலோசனைகள் நடத்தி இருக்கின்றனர்.
நவீன விஞ்ஞான உத்திகளால் தமது கிராமங்களுக்கு அப்பாலுள்ள புதிய உலகம் பழையர் இளைஞர்களுக்கு எளிதாகக்கிடைக்கிறது !
இக்காணொளியில் , மாரி, தான் போகும் காடுகளிலுள்ள எல்லா மரங்களையும், அவற்றின் பெயர், உபயோகம், நன்மை, அறுவடை செய்யச் சிறந்த காலம், முதலியவற்றைக் குறிப்பிடுகிறார்.
எல்லோருக்கும்விழிப்புணர்வுஏற்படுத்தவேண்டும்.
“ எனது இன்ஸ்டக்ராம் பக்கம் எனக்கு மட்டுமில்லை, எனது சமுதாயத்தார்க்கே உரியது “ என்கிறார், மாரி.
“ என்னுடைய வாழ்க்கையை எங்காவது ஆவணப்படுத்தவேண்டும் – நான் வயதான காலத்தில் நலிவடைந்து இருக்கும்போது, என் கடந்த காலத்தை நான் நினைவு கூற முடியுமல்லவா “ எனக் கூறும் மாரியும் அவரது நண்பர்களும், காடுகளினடுவேயுள்ள தங்களது வாழ்க்கை முறையைப் பல விதங்களில் புதுப்பிக்க முயற்சிக்கின்றனர். ஆனால், காட்டிற்குள் சுதந்திரமாகப் போய்வர முடியாத போனால் பழையர்கள் அவர்களது பாரம்பரிய வாழ்க்கை முறையையும், கலாச்சாரத்தையும், இருப்பிடங்களையுமே இழந்துவிடுவது திண்ணம்.
இங்குதான் நாமெல்லோரும் வருகிறோம்.
நம் நாட்டில் அனேகருடைய தினசரி உணவில் தேன் இடம் பெற்றிருந்தாலும், அதைச் சேகரித்துக் கொடுக்கும் பழங்குடியினரின் போராட்டங்களைப் பற்றிய எவ்வித விவரமோ சர்ச்சையோ நமது பேச்சுக்களில் இடம் பெறுவதில்லை – மாரியைப் போன்ற தேனெடுப்போரால், அவர்களது பாரம்பரியக் காடுகளில் சுதந்திரமாக நடமாடி அவரவர் தொழிலைச் செய்ய முடியாமற் போகும் பட்சம், சுத்தமான மலைத்தேன் என்பது நமக்குக் கிடைப்பது மிக அரிதாகி விடும்.

பழனிமலைச்சாரலில் நான்கு விதமான தேனீக்கள் இருக்கின்றன. – ஒவ்வொரு விதத் தேனீயும் குறிப்பிட்ட பூக்களிலிருந்து மட்டுமே தேன் சேகரிப்பதோடன்றி, வெவ்வேறு வகையான தேன்கூடுகளை, அவற்றிற்குத் தோதான இடங்களில் மட்டுமே கட்டும். தேனும், இடம் காலம் தேனீ வகையைப் பொறுத்து வித்தியாசப்படும்.
படம் – ஹூபூ ஆன் அ ஹில் – மலையின் மேலுள்ள மரங்கொத்தி.
இங்குதான் நாமெல்லோரும் வருகிறோம்.
தற்சமயம் நம் நாட்டில் அனேகருடைய தினசரி உணவில் தேன் இடம் பெற்றிருந்தாலும், அதைச் சேகரித்துக் கொடுக்கும் பழங்குடியினரின் சிரமங்களையும் போராட்டங்களையும் பற்றிய எவ்வித விவரமோ சர்ச்சையோ நமது பேச்சுக்களில் இடம் பெறுவதில்லை – மாரியைப் போன்ற தேனெடுப்போரால், அவர்களது பாரம்பரியக் காடுகளில் சுதந்திரமாக நடமாடி அவரவர் தொழிலைச் செய்ய முடியாமற் போகும் பட்சம், சுத்தமான மலைத்தேன் என்பது நமக்குக் கிடைப்பது மிக அரிதாகி விடும்.

நெடிதுயர்ந்து வளர்ந்த மரங்களில் சில வகைத் தேனீக்கள் கூடுகள் கட்டும் – சில, பத்திரமாக இருக்கப் பாறைகளினூடே இருக்கும் பொந்துகளில் அடையும்.
படம் உபயம் : ஹூபூ ஆன் அ ஹில் – மலை மேலுள்ள மரங்கொத்தி.
மலைத்தேனை விரும்பி அனுபவித்து உபயோகிக்கும் நாம், இப்பழங்குடியினரின் உரிமைகள், அவர்களுக்குக் கிடைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் கடமைப்பட்டுள்ளோம். பழங்குடியினருடன் கைகோர்த்து அவர்களுக்கு நியாயமான விதத்தில் வேலைவாய்ப்புக் கொடுத்துப் பணிபுரிவோரிடமிருந்து தேன் வாங்குதல் ஒரு விதம்; காடுகளும் மலைகளும் தமது இயற்கைச் சூழலை இழக்காமலிருக்க முனையும் அமைப்புகளையும், பழங்குடியினர் பன்னெடுங்காலமாகக் காடுகளைப் பாதுகாத்து வருவதை அறிந்து, புரிந்து, அவர்களுக்கு ஆதரவாகக் களப்பணி ஆற்றுவது மற்றொரு விதம்.
வேங்கை மரம் வெட்டுப்பட்டால், ரத்தச் சிவப்பில் பால் வடியும். மாரியின் பழங்குடியினர், இந்தப் பாலை, வெட்டுக்காயங்களுக்கு மேல் பூச்சாக மருந்திடுவர்.
இத்தகைய செயல்பாடுகள் மட்டுமே பழையருக்குள்ள கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கொடுத்துவிடாது. அவர்களிடமிருந்து மட்டுமே தேன் வாங்குவது என்பது மட்டும், ஓதுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தினருக்கு உரிமை கிடைக்க வேண்டிச்செய்யும் போராட்டத்தை விடப் பெரிதாகி விடாது – ஆனால், நமக்கு எல்லோருடனும் ஒன்று கூடிப்பணி புரியும் மனப்போக்கும், விழிப்புணர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது; அத்துடன், நம்மைச்சுற்றியுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், இயற்கையோடு இணைந்து வாழ்வதாலுண்டாகும் மேம்பாடுடைய வாழ்க்கையை அனுபவிக்கவும் முடியும்.
தேன் மட்டுமல்ல – வாழ்வே இனிக்கும்
தமிழாக்கம் : காமாக்ஷி நாராயணன்.