உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள மலைவாசஸ்தலங்களில் சென்ற இரு மாதங்களுக்கு முன், ஏதோ காணாததைக் கண்டது போல் அளவுக்கதிகமான சுற்றுலாப்பயணியர் குவிந்தனர். எதைத்தேடி இப்படி அவரவர் நகரங்களிலிருந்து ஓடி வந்தனர் ? – தனிமைப்படுத்திய லாக்டவுனா அல்லது நோய்த்தொற்றின் பீதியிலிருந்து தப்பிக்கவா? – மரணத்தின் பிடியிலிருந்து விலகமுடியாத இயலாமையை, மக்களுக்குக் கொரோனா உணர்த்தி விட்டதால், இயற்கையிடமே சரணடைய வந்தது போலிருந்தது
“ மனிதன் மலைகளை அடைந்தால் சாதனைகள் படைக்கலாம் – தெருக்களில் குழுமினால் ஒன்றும் நடவாது” – என்று கூறினார் ஆங்கில மூதறிஞர் வில்லியம் ப்ளேக்.
குமாவ் மலைகளும் பள்ளத்தாக்குகளும் அங்கு அடிக்கடி வந்து போகும் ஜனங்களுக்கு ஒரு புத்துணர்வு தரும்; ஆனால் அவர்கள் அங்கு வசிப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை எனது குழந்தைப்பருவம் நைனிதாலில் என் பாட்டியுடனும், அவருடனிருந்த மணமாகாத அத்தைகளுடனும் தான் கழிந்தது. வேனல் காலத்தில் விருந்தினர் பலபேர் வருவர். அழகிய ஏரியுடைய அந்த ஊரில் கணக்கிலடங்கா சுற்றுலாப்பயணியர் குவிவர் – அவர்கள் போனபின், ஊரும் பழைய அமைதியான நிசப்தமான நிலைக்குத் திரும்பி விடும்.
மழைக்காலங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்த காலம். எங்கள் வீட்டிற்கு வெளியே இருந்த தேவதாரு மரத்தின் இலைகள் என் ஜன்னலின் மேல் மழைத்துளிகளைத் தெளிக்கும்போது ஏதோ என்னிடம் பேசுவதுபோலிருக்கும் – மரக்கூரையின் மீது லேசாகத்தாளமிட்டு சில சமயங்களில் மனத்தாங்கலுடனும், சிலபோது தோழமையுடனும் அன்புடனும் இருப்பதாகத்தோன்றும்,.
நைனிதால், ராணிகேத், அல்மோரா – என்னால் முடிந்தபோதெல்லாம் இந்த மலைநகர்களுக்கு நான் வந்து விடுவேன் – கிசுகிசு எனக் கதை சொல்லும் மெல்லிசைக்காற்றும், குழலோசையும், மணிப்புறாவின் பாட்டும், நமது நாட்டுப்புறக் கதைகள் பாடல்களின் மிக முக்கியமான அம்சமாகும்,
நான் எழுதிய மூன்று நாவல்களின் தொகுப்பில், குமாவ் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. .இவை தவிர, இரண்டு கதைத் தொகுப்புகளும் – “ ஹிமாலயா “ [ ரஸ்கின் பாண்ட் உடன் இணைந்து எழுதியது ] ; “ ஹிமாலய வளைவு – தென் கிழக்கிற்குக் கிழக்கே “ ; “ மலையின் எதிரொலி “ – இவை எல்லாம் அங்குள்ள மலைவாசிகளின் வாழ்க்கையைப் பல சுயசரிதங்களை உள்ளடக்கிப் பிரதிபலிக்கும்.
குமாவ் மலைகளும் ஏரிகளும், அவை அமைந்துள்ள பாங்கும், குமியும் சுற்றுலாப்பயணியரும், சுற்றுலாக்காலம் முடிந்தபின் வரும் தனிமையும் அமைதியும், இங்குள்ள ஒவ்வொரு சிறுகல்லும் பாறையும் சொல்லும் உயிருள்ள கதைகளும் என் மனதில் அழியாத ஓர் வரைபடமாக நிலைத்து விட்டது. ஒவ்வொரு கிராமமும், நகரமும் வித்தியாசமானவை ; ஆனால் அவை எல்லாவற்றிற்கும் ஒருமித்ததொரு வடிவமுண்டு. காத்மண்டுவிலும், பூடானிலும், டூன் பள்ளத்தாக்கிலும், நைனிதாலிலும் நடந்த பலப்பல இலக்கிய நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றதுண்டு – இவை எல்லாமே இமயமலைக் கலாச்சாரத்தின் நுணுக்கங்களை எனக்கு அறிமுகப்படுத்தி என் புரிதலை மேம்படுத்தியுள்ளன. உள்ளூர் பேச்சு வழக்குகளைக் கேட்டறிந்து, புரிந்து, வாய்வழிக்கதைகளை வெளிக்கொணர வழி வகுத்தன. பத்து வருடங்களுக்கு முன் டூன் பள்ளத்தாக்கில் நடந்த கலாச்சார நிகழ்வு ஒன்றின் மூலம் “ குமாவ் மக்களின் கவிஞர் “ – “கிரி அண்ணா” என்று உரிமையோடு அழைக்கப்படும் காலஞ்சென்ற கிரீஷ் திவாரி அவர்களை சந்திக்கவும் பழகவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.
நான் மலைகளைப்பற்றி எழுதிய புத்தகங்களில் அந்த இடங்களைப்பற்றிய தாக்கம் அதிகமென்றே எனக்குப் படுகிறது. குமாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர்களான ஷிவானி [ கௌரா பந்த் ], மனோஹர் ஷ்யாம் ஜோஷி, குமாவைப்பற்றிய தீர்க்கமான வரலாறு எழுதிய என்னுடைய முப்பாட்டனார் பத்ரி தத் பாண்டே முதலானவர்கள் எல்லோருமே எனக்கு முன்னோடிகள் – அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய.
சில தருணங்களில் இந்தத் தொடர்புகள் என்னையே ஆச்சரியப்படுத்துகின்றன. ”நிழல்களின்புத்தகம்” [ The Book of Shadows ] என்ற என் புத்தகத்திலுள்ள பல்வேறு கதாபாத்திரங்களில், அங்குள்ள தேவதாரு மரத்தில் வசிக்கும் “வனபன்சிகா” என்றழைக்கப்படும் வனதேவதையும் அடங்குவார் – CEDRUS DEODARA என ஆங்கிலத்தில் கூறப்படும் தேவதாரு மரங்கள், அறுபது மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை; அதன் கிளைகள் மரத்தை சுற்றிப் பத்தல்லது பதினைந்து மீட்டர் விட்டம் வரை பரவக்கூடும் – நமது மலைவாசிகளுக்கு மிகவும் பிடித்தமான, புனிதமானதொன்று இம்மரம் – எனது நினைவுகளில் வெகு ஆழமாகப் பதிந்து விட்டதோடல்லாமல் என் எழுத்துக்களிலும் நாவல்களிலும் ஒரு உள்ளார்ந்த மையக்கருத்தாக அமையும்.
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்குமுன் நான் எழுதிய முதல் நாவல் – “PARO – DREAMS OF PASSION” – “ பாரோ – வேட்கைக் கனவுகள்.”. மும்பாயிலும் டெல்லியிலும் களம் அமைந்த இக்கதையின் அழகிய கதாநாயகி பாரோ, தனது ஜின் அருந்தும் வழக்கங்களால் நடுத்தர மக்களை அதிர வைத்தாலும், நகைச்சுவையும் பரபரப்பும் மிகுந்த இப்படைப்பு பரவலான வரவேற்பைப்பெற்றது. கிளர்ச்சியூட்டும் கதைக்களமும் பல வேடிக்கையான சம்பவங்களும் நிறைந்த இந்நாவலை எழுதிய பின் என் மனம், என் பழைய நினைவுகளுக்கும், நான் வாழ்ந்து பழகிய வீட்டிற்குமே திரும்பியது. THE HIMALAYAN LOVE STORY – “ ஹிமாலயத்தின் காதல் கதை” என்ற புதிய நாவலை 1984-ல் எழுதத் துவங்கினேன்.
இந்தக் கதையில் பல நகைச்சுவையான சம்பவங்கள் நடுநடுவில் இருந்தாலும், மலையின் புல்லாங்குழலுடைய அழுத்தமான சோகம் ஊடுருவியிருக்கும். – உலகஅளவில் “பாரோ” வின் வெளியீடும் அதற்குக் கிடைத்த வரவேற்பும் என்னை வெற்றி கூவி அழைப்பது போலிருந்தது. ஆனால் இந்த நாவல், தோல்வியையும், சிதைந்த கனவுகளையும் பற்றியது. இதை நான் ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்தியெட்டு – அதற்குள்ளாகவே, என்னை இருள் சூழ்ந்துவிட்டது போல் உணர்ந்தேன். அடுத்த பத்து வருடங்கள் என் வாழ்க்கையில் மிகக் கடினமானவை – சில விதங்களில் இப்புதினம் அதை முன்பாகவே எடுத்துக் கூறியது போலிருந்தது.
இமாலயத்தின் மலைச்சிகரங்கள் நெடிதுயர்ந்தவை – கம்பீரமானவை – நம்மைப் பணிய வைப்பவை – அந்த அழகிய ஆனால் சவால்கள் நிறைந்த சூழலில் வாழும் மக்கள், சிரமங்களையும், எத்தகைய கடினமானதொரு வாழ்க்கையையும் எதிர்கொள்ளும் மனத்திடமும் கொண்டவர். இத்தகைய சூழலைத்தான் நான் விவரமாக எழுத முற்பட்டேன். ஆனால் அதே சமயம், “ இமாலயத்தின் காதல் கதை” – என்றும் எனது உணர்ச்சிகளின் மையமான, பல்வேறு குணங்களைக்கொண்ட சுற்றுலாத்தலமான நைனிதாலுக்கு எழுதப்பட்ட ஒரு காதல் கவிதையாகவே இருக்கிறது.
என் கணவர் ராஜீவ் இறந்த போது எனக்கு வயது முப்பத்தொன்பது – அவருக்கு நாற்பத்திரண்டு. அதன் முன்பே, “நிழல்களின் புத்தகம்” எனப் பின்னால் பெயரிடப்படும் நாவலை எழுத ஆரம்பித்திருந்தேன். அதிலிருந்து சிற்சில பகுதிகளை அவருக்குப்படித்துக் காண்பித்திருக்கிறேன் – நாவல் உருவாகி வரும் போக்கைக்கேட்டு அவர் மிக்க மகிழ்ச்சியுற்றார். ராணிகேத்தில் ஒரு பழைய பங்களாவை நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்தோம்; கதையிலுள்ளது போலவே, அந்த வீட்டிலிருந்தும் கதைக்கருவிற்குக் காரணமான நந்தாதேவியின் ஜொலிக்கும் சிகரங்கள் தெரியும்; 7816 மீ உயரமுள்ள நந்தாதேவியின் சிகரம் தான் குமாவின் காவல் தெய்வம். இந்த நாவல், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்த, கொடூரமான ஏமாற்றங்கள் நிறைந்த நிகழ்வுகளை, அங்கு வசித்த பேய் ஒன்று சொல்வதுபோல் அமைந்திருந்தது.
ஆசிட் வீச்சால் முகம் சிதைந்த ஒரு இளம் கல்லூரி விரிவுரையாளர், ராணிகேத்திலுள்ள தனது இளமைக்கால வீட்டில் தஞ்சமடைகிறாள். தனியாக வசிக்கும் அவளுக்குத் துணை, லோஹானிஜு எனும் பெயருள்ள ஒருவர் – கிட்டத்தட்ட ஒரு மந்திரவாதி போலிருப்பவர்.. பயனற்ற வாழ்வு வாழ்ந்த மிஷனரி ஒருவரால் கட்டப்பட்ட அந்தப் பழைய வீட்டில், பல பேய்களைச் சந்திக்கிறாள் – மார்கஸ், மன்ரோ எனும் இரு ஓரினச் சேர்க்கையாளர்கள், அலாஸ்டேர் க்ரௌலீயின் தோழரான தற்பெருமை மிகுந்த காப்டன் வூல்காட் ஆகியோரையும் பேய் உருவில் சந்திக்கிறாள்.
என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் சந்தித்த பல ஏற்றத்தாழ்வுகளும், ஏமாற்றங்களும், நான் வாழ்ந்த பழைய வீடும், என்னைச் சுற்றி இருந்த மலைநாடுமே நான் எழுதிய இந்த நாவலின் அடிப்படை. இதுவரை என்னில் நான் அனுபவித்த ஆழ்ந்த உணர்வுகளை இதன்பின் வேறு எப்போதுமே நான் அணுகியதில்லை. என்னுடைய பழைய ஞாபகங்கள், உணர்வுகள் முதலியவற்றை அகழ்ந்து வெளிக்கொணர்ந்த இப்புத்தகத்தைப்போல் வேறு எதுவும் இல்லை. இது இந்த பனிமலைச்சாரலில், இந்த தேவதாரு மரக்கிளைகளின் நிழலில்தான் சாத்தியப்பட்டிருக்கும்.
“விட்டுச் செல்லவேண்டியவை” [ THINGS TO LEAVE BEHIND ] என்ற புத்தகம், அல்மோராவைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது – இமயமலையைப்பற்றிய முத்தொகுப்பின் மூன்றாவது; பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் வெளியிட்ட இப்புத்தகத்திலிருந்து அவர்கள் புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக எடுத்த சில பகுதிகள் —
இமயமலையைப்பற்றிய முத்தொகுப்பில் மூன்றாவதாக வரும் “விட்டுச் செல்ல வேண்டியவை” என்ற புத்தகம், 2002ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. 2016ல் வெளியிடப்படும் வரை, பதினான்கு நீண்ட வருடங்கள்; அந்தக்காலகட்டத்தில் வேறு பல புத்தகங்களும் நாவல்களும் எழுதினேன் என்றாலும் இதையும் ஒரு பின்னல் பிரிந்த நிட்டிங்கைச் சரி செய்வது போல் எங்கு சென்றாலும் கூடவே எடுத்துச் சென்றேன்.
“விட்டுச் செல்ல வேண்டியவை”, இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் பாதிப்புகளையும், அதன் பின் வந்த பலவீனமான நவீனங்களையும் வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது. கறுப்பும் சிவப்பும் கலந்த அழகிய பிச்சௌரா அணிந்த ஆறு மலைவாசிப் பெண்கள் நைனி ஏரியைச் சுற்றி வருவதை உருவகப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது. ஆங்கில ஆட்சிக் காலத்தில் முக்கியமாக, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே இருந்த தீண்டாமையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது – மேல் மால் ரோடு [ UPPER MALL ROAD], என்பது ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது குதிரைகளுக்கு மட்டுமே ; கீழ் மால் ரோடு[ LOWER MALL ROAD] என்பது நாய்களுக்கும், ஆங்கிலேயர்களுடைய வேலைக்காரர்களுக்கும், மற்ற இந்தியர்களுடைய உபயோகத்திற்கும் என ஏற்படுத்தியிருந்தனர்.
தைரியமும் உற்சாகமும் கொண்ட திலோத்தமா, அவருடைய கணவர் ஜயேஷ், எப்போதும் மனக் குழப்பத்தில் இருந்த மகள் தேவகி, ஆங்கிலேயர்களை எதிர்த்த கலகத்தில் தூக்கிலிடப்பட்ட திலோத்தமாவின் மாமன், முதலியோரைச் சந்திக்கிறோம். ஆப்ராம் என்ற இயக்கத்தை உருவாக்கிய இளம் மிஷினரி ரோஸ்மேரி பைடன்; கிருத்துவ மதத்திற்கு மாறி, அந்த இயக்கத்தில் இணையும் ஜயேஷ், என்று பலதரப்பட்ட சிக்கலான கலாச்சாரங்களை, நிகழ்வுகளை, இந்த இமய மலைப் பின்னணியில் கோர்த்துத் தருகிறது இப்புத்தகம்.
மலைகள், ஏரிகள், பரந்தபுல்வெளிகள், சாரலும் அதன்பின் தொடரும் அதி மழை, அதனாலேற்படும் மலைச்சரிவுகள்; கார்களும், பேருந்துகளும், அவற்றினின்று வரும் டீசல்புகையும்; உள்ளூர திடச்சித்தமுள்ள ஆனால் வாழ்க்கையின் மேடு பள்ளங்களால் மனமுடைந்த மனிதர்கள் – இவர்களின் கதைகள் – எதிர்காலத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் துன்பங்களை எதிர்த்துப் போராடும் குணமும், எதிர்பார்ப்புகளும் துரோகங்களும், மனக்கசப்புகளும் – என்று பல உணர்வுகளையும் கருத்துக்களையும் கொண்டது இந்த நாவல். உலகிலுள்ள மலைகளிலேயே சிறு வயது எனக்கருதப்படும் இந்த இமயமலைகள் வளர்வது போல், அவர்களும் தங்களை உயர்த்தி வளர்த்துக்கொள்கிறார்கள்.
தமிழாக்கம் : காமாக்ஷி நாராயணன்.