பழையர் மக்கள் அவர்களின் மலை மற்றும் மழை தெய்வங்களை வழிபடும் முறை..-தமது வழிபாட்டு முறைகளைப் பற்றி வெளியாருக்கு. அதிகம் தெரிவிக்காத பழையரின மக்கள், அவர்களில் ஒருவரான முருகேஸ்வரி மூலம் சில வழிபாட்டு முறைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்
இந்த பழையர் இன மக்கள் கோடைக்கானல் அருகில் உள்ள பாரதி அண்ணா நகர் என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் முக்கிய வனதெய்வமான பூதநாச்சியம்மனுக்கு வெய்யில் காலமான சித்திரை மாதத்தில் ஓர் இரவு மட்டும் விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். சித்திரை மாதம்தான் அதிகமான வெயிலினால் ஓடைகளில் நீர் வற்றித் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுவது தவிர, காட்டுத் தீயும் அதிகம் இருக்கும்; வனப்பகுதியே களை இழந்து சோர்ந்து காணப்படும். இந்த நேரங்களில் தான் நாங்கள் நம்பியுள்ள எங்களின் மலை மற்றும் வனதெய்வங்களுக்கும் எங்கள் பழையர் இனத்தவர்க்கும் எந்தவிதமான பாதிப்பும் வராமலிருக்க எங்கள் முக்கியக் காவல் தெய்வமான பூதநாச்சியம்மனை வழிபடுவதாகப் பழையரினத்தவர் கூறுகின்றனர்.
மற்றப் பழங்குடி மக்களைப்போல், பழையர்கள் திருவிழா எடுப்பதென்பது மூன்றல்லது நான்கு நாட்கள் கொண்டாட்டமல்ல – மிக முக்கியமாக, பூத நாச்சியம்மனுக்கென்று, சித்திரை மாதத்தில், ஒரே ஓர் இரவு மட்டும் விழா எடுக்கின்றனர். காட்டுத்தீயிலிருந்தும் மற்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் பாதுகாக்கவும், தேவையான காலத்தில் நல் மழை பொழியவும், தங்கள் வாழ்வாதாரம் குலையாதிருக்கவும் பிரார்த்தித்து, மலைக் காட்டின் உள்ளிருக்கும் மற்ற சிறு தெய்வங்களுக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாதிருக்கவும் வேண்டி, விழா எடுக்கின்றனர். – பழையர்களைப் பொறுத்தவரை, நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், நீர்நிலைகள், நெடிதுயர்ந்த பல்வகை மரங்கள், காட்டில் இயற்கையாகவுள்ள மற்ற எல்லாமே தெய்வங்களாகவோ தெய்வாம்சம் பொருந்தியவையாகவோ அல்லது தெய்வங்களால் காக்கப்படுபவையாகவோ கருதப்படுகின்றன.
எனது குழந்தைப்பருவத்திலிருந்தே, எங்கள் மக்களின் எல்லா விழாக்களிலும் நான் பங்கேற்றிருக்கிறேன். பூதநாச்சியம்மனுக்கு எடுக்கும் விழா மட்டுமின்றி, வருடமுழுதும் பல்வேறு தெய்வங்களுக்கென்று பல திருவிழாக்களுண்டு – சிலவற்றில், பெண்கள் மட்டுமே பங்கெடுப்பர்; சிலவற்றை ஆண்கள் மட்டுமே கொண்டாடுவர். மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் எந்தத் திருவிழாவிலும் பங்கெடுக்கமாட்டார்கள். பொதுவாக, எங்களினத்தவர், கடவுளரைக் கொண்டாடும் விழாக்களைப்பற்றிய நுண்ணிய விவரங்களை வெளியோருக்குத் தெரியப்படுத்துவதில்லை. ஆனால், ஒரு சிலர், இம் முக்கியமான விழாவைப்பற்றிச் சில விவரங்கள் உலகிற்குத் தெரிய வேண்டுமென எண்ணிப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதைப் பற்றி மேலும் அறிய, மூத்தோரான பூம்பாயி (எ) வசந்தியிடம் பூதநாச்சி என்றால் என்ன, அதன் அர்த்தம் சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் : ” பஞ்சபூதங்களான ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும் உள்ளடக்கியவள் தான் எங்கள் பூதநாச்சியம்மன்” என்றார். மேலும் “ நாச்சியம்மன் “ என்பதன் அர்த்தம் மலைகளையும் காடுகளையும் காக்கும் தாய் – எனவும் கூறினார். தனது குழந்தைகளின் சிறு தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயின் கருணை இருந்தாலும், ஒரு ஆணைப்போன்று கண்டிப்பானவளாக, பெரிய தவறுகள் செய்யும்போது கடுமையாகத் தண்டிப்பவள் என்றும் கருதப்படுகிறாள்.
பூதனாச்சியம்மனின் இவ்விரு வேறுபட்ட குணங்களைக் குறிக்கும் வகையில், திருவிழாவில் முக்கியப்பங்கேற்கும் தேவராடி, தனது தலைமுடியை வெட்டாமல் வளர்த்தும், அந்நீள்முடி சாதாரணமாகப் பெண்கள் கண்களில் படாமலிருக்க, தலைப்பாகையால் கட்டி மறைத்துமிருப்பார். அவர் சாமியாடும்போதுதான், தலைப்பாகையை எடுப்பதுண்டு. தேவராடியாக இருப்பவர் சுத்தமானவராக, மதுப்பழக்கமோ புகைபிடிக்கும் பழக்கமோ இல்லாதவராக இருப்பது அவசியம். இப்போது தேவராடியாக இருப்பவர், வேலுசாமி என்ற 23 வயதுள்ள இளைஞர்.
பூதனாச்சியம்மனின் திருவிழாவை நடத்தப் பழையரினத்தில் இரு குடும்பங்களுக்கே உரிமையுண்டு. ஒன்றிலிருந்து அம்மனின் அருள் வந்து ஆடும் தேவராடி தேர்ந்தெடுக்கப்படுவார்; மற்றொரு குடும்பத்தார், அவர் அணியவேண்டிய உடையையும் விழாவுக்குத் தேவையான மற்றப் பொருட்களையும் எடுத்துத்தருவர். திருவிழாவிற்கு ஒருமாதம் முன்னரே, இவ்விரு குடும்பத்தாரும் அம்மனின் சம்மதம் வாங்க “ பச்சை போடுதல் “ என்றதைச் செய்வர். “ பச்சை” செடியின் இலைகளையும், மற்றப் பல்வேறு மருந்துப் பொருட்களையும், ஐந்து வித காய்களும் கனிகளும், கிழங்குகளும், குறிப்பிட்ட சில கற்களையும் சேகரித்து, அடர்ந்த காட்டினுள் பெரும் பாறையின் மேல் வைத்து வழிபட்டுக் குறி கேட்பர். சம்மதம் கிடைத்தபின், திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பர். திருவிழாவின்போது, தேவராடி ஆடியபின், குலத்தவர் எல்லோரும் கூடி வணங்கும் போது மட்டுமே கலந்துகொள்ளப் பெண்களுக்கு அனுமதி உண்டு.
சட்டான் குடும்பத்தின் ஆண்கள், தேவராடி உடுத்தவேண்டிய வெள்ளை வேஷ்டியும் மற்றப்பூச்சு மருந்துகள், மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம் முதலியவற்றை ஓர் தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பர். தேவராடி ஆற்றோடையில், மஞ்சள் பூசிக்குளித்து, சட்டன் வீட்டார் கொடுத்த புத்தாடை உடுத்தி, எலுமிச்சம் பழங்களுடன், பூதனாச்சியம்மன் கோவிலுக்கு வந்தமர்ந்து தனது வழிபாட்டை ஆரம்பிப்பார். கோடைக்கானல் மலைச்சாரலிலுள்ள எல்லா மலைச்சிகரங்களையும், அங்குள்ள தெய்வங்களையும் தனித்தனியே பெயர் சொல்லி அழைத்து, ஓர் பாட்டாகப்பாடி, பின்னர் ” தேவர் வீடு” என்றழைக்கப்படும் கோவிலுக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் நீர் நிரம்பிய ஐந்து மண்பாண்டங்களில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரையும் தொட்டுக்கும்பிட்டு, மருள்காயெடுத்து ஆட ஆரம்பிப்பார். அவர் ஆடும்போது, மற்றைய ஆண்கள், அவருடன் இணைந்து குழலிசைத்து, மேளம் கொட்டி, அம்மன் வழிபாட்டில் ஈடுபடுவர். வனங்கள் காட்டுத்தீயால் சேதமாகாமல் செழித்திருக்கவும், நல்மழை பொழிந்து ஆறுகளும் நீர்நிலைகளும் நிரம்பவும், கொடிய மிருகங்களால் பாதிப்பு ஏற்படாமலிருக்கவும், நோய் நொடி இல்லாமலிருக்கவும் வேண்டி வழிபடுவர்.
அம்மன் மலைஏறிய பின், மற்ற எல்லோரும், பெண்கள் உள்பட, பூதனாச்சியம்மனிடம், நல்மழை பொழிந்து, காடுகள் வளத்துடனிருக்கப் பிரார்த்தனை செய்துகொள்வர். அம்மனின் முன்னிருந்த மஞ்சள் நீரை, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று, தங்கள் பாதுகாப்பிற்காக வீட்டுக்கூரைகளின் மேல் தெளித்துக்கொள்வர். வேனல்காலமாக இருந்த போதிலும் திருவிழா நடந்த அன்றிரவு நிச்சயமாக மழை பெய்யும் என்பது கண்கூடு.
எங்கள் குலத்தோர், இத்தகைய முக்கியமான திருவிழாக்களில் கலந்து கொள்ள, உலகில் எங்கிருந்தாலும் வந்து விடுவது வழக்கம். எங்கள் குல வழக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் மீறாமலிருப்பரேயாயின், இவற்றில் கலந்துகொள்வதற்கு ஜாதி மத வேறுபாடுகள் கிடையாது. எங்களுக்கு இயற்கையோடு இணைந்து வாழவேண்டும் என்பதே விருப்பம் – காடுகளிலும் மலைகளிலும்,வசிக்கும் தெய்வங்களை வழிபட்டு வருவதே எங்கள் பாரம்பரியம் – இவை எதுவுமே நசிக்காமலிருப்பதே எங்கள் ஆசை.
வாருங்கள் – எமது பாரம்பரியத் திருவிழாக்களில் எங்களுடன் கூடிக்களியுங்கள் –
எங்கள் வனங்களையும் மலைகளையும் போற்றிப் பாதுகாத்துப் பாரம்பரியம் கெடாமல் காப்போம்.
நன்றி – வணக்கம்.