ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பத்தாம் ஆண்டில், இந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஷெண்பகனூரில், கோடைக்கானல் புனித இருதயக்கல்லூரியால் ஆரம்பிக்கப்பட்டது . அப்போதுதான் புதியமலைப்பாதையும் தினசரிப்போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டிருந்தது. கோடைக்கானலில் வனவிலங்குகள் நிறையவும்இருந்தன. சிறுத்தைப்புலிகள் லேக்கைச் சுற்றி வருகையில் கூடத் தென்படலாம். கரடிகள்,புலிகள், மற்ற விலங்குகள் ஊரைச்சுற்றி இருந்த அடர்ந்த காடுகளில் அதிகஅளவிலிருந்ததால், பல இடங்களுக்கு, அவ்விலங்குகளின் பெயரையே வைத்துவிட்டனர் – “ புலிச்சோலை – TIGER SHOLA” ; “ கரடிச்சோலை – BEAR SHOLA “, “ மான்சோலை – IBEX POINT “ – எல்லாமேஅந்தந்த விலங்குகளின் பெயராலேயே அறியப்பட்டது.
இன்று, ஐயாயிரம் வெவ்வேறு வகையான வனவிலங்குகள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் எல்லாவகைகளும் இப்போது வனங்களில் காணக்கிடைக்காது. எப்போதாவது ஒரு லாரியோ வேறு பெரிய வாகனமோ சாலையைக்கடக்கும் விலங்கு ஏதாவதை அடித்துவிட்டால், அதை இங்கு கொண்டு வருவார்கள், என்று கூறுகிறார், இந்த அருங்காட்சி யகத்தின் காப்பாளராகவுள்ள அருட்தந்தை ஸ்டானிலாஸ் ரத்தினம் அவர்கள். “ இந்தமாதிரித்தான் இங்குள்ள பல விலங்குகளின் உடல்கள் இங்குவந்தன – அந்தச் வற்றின் மேல் இருக்கும் கரடியின் தோல் கூட,- எங்களுக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியேழில் கிடைத்தது. அதோ, அங்கிருக்கும் புலியின் எலும்புக்கூடு, இங்குள்ள செமினரியிலுள்ள பாதிரியார்கள் சுட்டது “ என்று விளக்குகிறார்.
கடந்த பன்னிரண்டு வருடங்களாக, இந்த அருங்காட்சியகம் இவரது பொறுப்பில் உள்ளது; அதனால் இங்கு காட்சியிலுள்ள ஒவ்வொன்றையும் துல்லியமாக விளக்குகிறார். பழனி மலைச்சாரலிலுள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகளின் வகைகளும் பார்வையில் இருக்கின்றன. வெகு அழகிய, தொட்டால் உடைந்துவிடுமோ என்று தோன்றும் விதவிதமான வகைகளிலும் உள்ளவை இவை. “ MINO, COMMON MAP, OAKLEAF”, – மினோ, காமன்மேப், ஓக்லீஃப், போன்ற பெயர்களை உடையவை. அதேபோல், இருநூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் பறவைகளும் – “ THE REDWHISKERED BULBUL,THE BLACK BULBUL, THE TRAVANCORE LAUGHING THRUSH – முதலிய பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களும், இன்னும் வெவ்வேறு பறவைகளின் வெள்ளை, நீலம், வண்ணப்புள்ளிகள் என்று பல வண்ணங்கள் கலந்த முட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தில், இந்தக்காடுகளில் வசிக்கும் பலவித பாலூட்டும் விலங்குகள் மையமாக வைக்கப்பட்டுள்ளன. முக்கியத்துவம் தரப்பட்டு, இங்கு காண்பவை – வனத்தில் எல்லா இடத்திலும் பரவலாக உள்ள, வரிமான், நீர்நாய், குள்ளநரி, பறக்கும்அணில், புனுகுப்பூனை முதலியவை. புலிகள், கருங்கரடி, – வேடிக்கையாக, ஒரு அல்சேஷியன் நாய் – ஆகியவற்றின் பதப்படுத்தப்பட்ட தோல்கள் சுவற்றின் மேல் மாட்டப்பட்டுள்ளன.
சிறு வயதில் கோடைக்கானலில் வளர்ந்தவர்கள், இங்கு பல முறை வந்திருப்பார்கள். பின்னால் தம் நண்பர்களுடன் மலைப்பாதையில் போகும் போது ஷெண்பகனூர் திருப்பம் வரும்போதே இதை அடையாளம் காட்டுவதுண்டு. இவ்வூரில் வளர்ந்தவர்களுக்கு வனத்தில் காட்டுமாடுகளைப் பார்ப்பதும், ஏரியைச் சுற்றி நடக்கப்போவதும், வரும்சுற்றுலாப்பயணியரைக்குறைகூறுவதும்போல, இந்த அருங்காட்சியகத்திற்கு வருவதும் ஒரு தவிர்க்கமுடியாத சடங்கு.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, எங்கள் மஞ்சள் நிற பஸ்ஸில் இங்கு வந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இதன் கட்டிடம் கல்லாலும் செம்மண்ணாலும் கட்டப்பட்டு, மஞ்சள் வண்ணப்பூச்சுடன் இருபதடிஉயரமும் இரண்டாயிரத்து இருநூறு அடிநீளமும் கொண்டது – மரத்தூண்களின் மேல் இங்கிலாந்திலிருந்து வந்த துத்தநாகத்தகடுகள் வேயப்பட்டது.
கட்டிடத்தின் உள்ளே இது போன்ற காட்சியகங்களுக்கே உரித்தான விநோதமானதொரு வாசனை இருக்கிறது. பழங்கால மரத்தாலாகிய கண்ணாடிப்பெட்டிகள், தரையிலிருந்து கூரை வரை சுவர் ஓரமாக அறை முழுதும் இருக்கின்றன – கோடைக்கானலின் விலங்குகளும் பறவைகளும், அவற்றின் பதப்படுத்தப்பட்ட உடல்களும், எலும்புக்கூடுகளும், தோல்களும், கண்ணாடி ஜாடிகளில் ஆல்கஹாலில் ஊறும் விதவிதமான பாம்புகளும் இந்த அலமாரிகளை நிறைக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளும் வண்டுகளும்- பல வித நிறங்களில் உயிருடனிருப்பது போலவே தோன்றும். இரட்டைசடையில் வலம் வரும் ஓர் சிறுமிக்கு, இந்தக் காட்சியகம், ஒர் கனவுலகமாகவே தோன்றியது.
முப்பது வருடங்களுக்குப் பின்னர், இங்கு வருவது மிக வித்தியாசமானது – இந்த இடம் கூறும் கதைகள் மனதை வெகுவாகப்பாதிக்கின்றன.
அருட்தந்தை ஆங்க்ளேட்டின் மேற்பார்வையில் புனித இருதயக்கல்லூரியின் மாணாக்கர்களும் ஆசிரியர்களும், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில், முதன் முதலில் இந்தக் காட்சியகத்திற்கு மாதிரிகள் சேகரித்தனர். பழனிமலைச்சாரலிலுள்ள சோலைக்காடுகளில் , வண்ணத்துப் பூச்சிகளையும் வண்டுகளையும், காடுகளிலிருக்கும் விதவிதமான மற்றப்பூச்சிகளையும், சிறு பறவைகளையும் வலைச்சிக்கங்கள் வைத்துப் பிடித்துக்கொணர்ந்தனர் . ஊரினுள் இவர்கள் நன்குஅறியப்பட்டதால், “ வண்ணத்துப்பூச்சி அணி”, அல்லது “ பறவைகள் அணி” என்று பெயர் சூட்டி அழைத்தார்கள்.
பல தசாப்தங்களாக இந்தக் காட்சியகம் வளர்ந்து வந்தது – முக்கியமாக, இங்கு நாம் பார்க்கும் பாம்புகள் – மலைப்பாம்புகளும், சாரைப்பாம்புகளும், – அனேகமாக , போக்குவரத்தில் வண்டிகளில் அடிபட்டு, கொண்டுவரப்பட்டவை – “ அருட்தந்தை ஆங்க்ளேட் அவற்றை எல்லாம் நன்கு பதப்படுத்திப் பலகாலத்திற்கும் இருக்கும்படிச் செய்துவிட்டார் “, என்கிறார் ஃபாதர் ஸ்டானிஸ்லாஸ்.
பங்களூரிலிருந்து இங்கு சுற்றுலா வந்த 34 வயதுள்ள விபாஸ் வெங்கட்ராம், – தி யெல்லொ ப்ரிக் ஸ்டுடியொ எனும் இசைக்கல்லூரி நடத்தி வருபவர்- இந்த மியூசியத்திற்குவந்து , கோடைக்கானல் வனங்களிலுள்ள வனவிலங்குகளைப் பற்றி அறிந்து கொள்ள வந்தார் – “ இவ்வளவு விதவிதமான விலங்குகளும் பறவைகளும் இந்தக்காடுகளில் இருக்கின்றனவா என்பது மிக ஆச்சரியமாக இருக்கிறது; காட்டுமாடுகளும், முள்ளம்பன்றி முட்களும் நான் மலைகளில் நடக்கப் போகும்போது பார்த்திருக்கிறேன் , ஆனால் நரிகளும் சிறுத்தைகளும் கூட இங்குண்டு என்பது தெரியாது” என்கிறார்.
அவைகள் இல்லைதான். ஷெண்பகனூர் ம்யூசியத்தில் உள்ளவை பல சோலைக்காடுகளில் அடிக்கடி பார்க்க முடியாதவைதான். ஒரு காலத்தில், பேரிஜம் அருகே HORNBILL – ஹார்ன்பில் பறவைகள் தென்படும் என்பது உள்ளூர்வாசிகளுக்கே ஆச்சரியமானவிஷயம். “ காட்டுக்கோழியையும், குயிலையும் தவிர, அனேகமாக எல்லாப் பறவைகளும் அழிந்துவிட்டன”, என்கிறார், ஃபாதர் ஸ்டானிஸ்லாஸ்.
“ இங்கு காட்சிப்படுத்தப்பட்ட பறவை, விலங்கினங்களில், மான், காட்டுமாடு, முள்ளம்பன்றி, மயில், பறக்கும்அணில் தவிர, அனேகமாக வேறு எந்த வகையையும், நீங்கள் இப்போது வனங்களில் பார்ப்பது அரிது”,
இந்த அருங்காட்சியகத்தில், ஒரு மணி நேரம்இருப்பதே, நம் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தைத் தோற்றுவிக்கும். சில தசாப்த கால அளவிலே பார்த்தாலும் கூட, இங்கிருப்பதை விடப் பறவைகளும், வனவிலங்குகளும், வண்ணத்துப்பூச்சிகளும் இக்காலத்தில் மிகக் குறைந்தே காணப்படுகிறது, என்பது நிபுணர்கள் கருத்து. கோடைக்கானல் மலைகளில், புல் வெளிப் பகுதிகள் மிகப் பெரிய அளவில் குறைந்துவிட்டதால், இத்தகைய புல்வெளிகளை ஆதாரமாகக் கொண்டு வாழும் விலங்கினங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருக்கும் – என்று சுட்டிக்காட்டுகிறார், திருப்பதியிலுள்ள IISER ல் உதவிப்பேராசிரியராகப் பறவை சூழலியலில் ஆராய்ச்சிசெய்யும் “ சோலைகளின் வான்தீவுகள்”, என்ற குழுவுடன் இணைந்து பணி புரியும் திரு,வி.வி.ராபின் என்பவர். கோடைக்கானலிலும் இதை இணைந்த பழனிமலைச்சாரலிலும் இதை கணிக்கத் தேவைப்படும் புள்ளி விவரங்கள் சரியாக சேகரிக்கப்படாததால், துல்லியமாகக் கூறமுடியவில்லை என்பதே உண்மை. “ நீலகிரி பிப்பிட்” என்ற பெயருடைய பறவைக்கு சரியாகக் கணிக்க முடிந்தது – கோடைக்கானலில் இப்பறவையினம் வெகுவாகக் குறைந்துவிட்டாலும், முற்றுமாக அழிந்துவிடவில்லை ; ஆனால், கிழக்கு நீலகிரியில் இவை முழுவதுமாக அழிந்துவிட்டன.” என்கிறார் அவர்.
எந்த வகை இனமும், உயிர் பிழைத்து வாழ்வது என்பதே உலகளவில் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும், நமது இடத்திலேயே உள்ள விலங்கினங்கள் அழிவதும் வாழ்வதும் சிக்கல் என்றால், பிரச்சினை சற்றுக் கடுமையானது என்றே தோன்றுகிறது. கோடைக்கானலில் தற்போதிருக்கும் வனவிலங்குகள் மறைந்து போகாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எவ்வளவுக்கெவ்வளவு தீவிரமாக, சீக்கிரமாக எடுக்கவேண்டும் என்பதை இந்த அருங்காட்சியகம் நமக்குத் தெரியப்படுத்துகிறது.
கோடைக்கானலின் காடுகளில், ஒரு புலியையோ அல்லது ஒரு கரடியையோ நேரேகாணும் அனுபவம், இப்போது இங்கிருப்பவர்களுக்குக் கிடைப்பது எவ்வளவு அரிதோ, அதேபோல், சில வருடங்களுக்குப்பின் உள்ளூர்வாசிகளே காட்டு ப்பன்றிகளையும் பறக்கும் அணில்களையும் பார்க்கமாட்டார்கள் – என்றுசொல்கிறார், ஃபாதர் ஸ்டானிஸ்லாஸ்.
“ இந்த ஷெண்பகனூர் அருங்காட்சியகம் கோடைக்கானலின் சாரம். நமது தாத்தா பாட்டிகள் சொன்ன கதைகளுக்கு உயிர் கொடுத்து உருவாக்குகிறது. ஆகையால், நம் போன்ற உள்ளூர்வாசிகள் கோடைக்கானலின் மீதமிருக்கும் ஒவ்வொரு துளியையும் நன்கு காப்பாற்றி வர வேண்டும்” – என்கிறார், என் சகோதரி, நதீஷா ஸாகர்.
ஆசிரியர் : பவிஸாகர் – தமிழாக்கம் : காமாக்ஷிநாராயணன்.