ஆசிரியர் : முருகேஸ்வரி
கொரொனா என்பது நாம் அறிந்த ஒன்றுதான் – அந்த நோய் சீனா நாட்டில் உள்ள வூகான் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. முதலில் சீன மக்களைத்தாக்கியது; சீன அரசு என்ன செய்வது என்று தெரியாமல் திணறியது; படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது; இந்த நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவியதால்; இந்தியா உள்பட எல்லா நாடுகளும் முடங்கின,. நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கு ஊரடங்குச்சட்டம் கொண்டு வரப்பட்டு மக்கள் அனைவரும் முடங்கினர்; ஒவ்வொரு நாடும் நிதி நெருக்கீடு சந்தித்தது இந்த நோயால் கோடிக்கணக்கிற்கு மேல் இறந்தனர். இதில் பாதிப்பு அதிகம்; இந்த நோய் எப்படி உருவானது என்று இதுவரை தெரியவில்லை.
இந்தச்சூழலில், பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் உள்ளனர். பொதுவாக அவர்களே அவரவர் வேலைகளைச் செய்து தங்கள் தேவைகளைப் பார்த்துக்கொள்கின்றவர்கள்; இவர்களுக்குத்தேவையான அனைத்தையும் வனங்களிலிருந்தே பெற்றுக்கொள்கின்றனர். தேன் எடுத்தல், மற்றும் வள்ளிக்கிழங்கு தோண்டி எடுத்தல், காணா மிளகாய், சிறுதக்காளி ஆகியவைகளையும் உணவாக உண்டு வந்துள்ளனர். . சில சமயங்களில் நற்பணி மன்றங்கள் மூலம் உதவி பெற்றுக்கொண்டாலும், அவர்களின் தினசரி உணவுக்கும் அன்றாடத்தேவைக்கும் இவர்கள் வனங்களையே நாடி வாழ்கின்றனர். சோப்புக்குப்பதிலாகத் தலைநார் எனும் பொருளைத்தான் உபயோகிக்கின்றனர். அவர்கள் வழக்கமாக சேகரித்து விற்கும் தேன், கல்பாசி, மலை நெல்லிக்காய், கடுக்காய் முதலியவையும், துடைப்பங்கள் தயாரிப்பதும் வெகுவாகப்பாதிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக இம்மலையில் விளையும் பொருட்களை வாங்க வருவோர் இப்போது வருவதில்லை. காட்டுப்பழங்கள் கொண்டு போவார் இல்லாமல் அழுகிவிட்டன; கிட்டத்தட்ட முப்பதாயிரம் துடைப்பங்கள் கறையான் அரித்தும் அதற்கு எஞ்சியவை காட்டுத்தீயில் கருகியும் வீணாகிவிட்டன. வணிகர்கள் இன்னமும் பொருள் வாங்கிச் செல்வதில் தயக்கம் காட்டுவதால், பளயர்கள் தினக்கூலி வேலைக்குச் செல்லவேண்டியுள்ள கட்டாயம் வந்துவிட்டது.

தங்களது அன்றாடத்தேவைகளுக்கு வனங்களையே நம்பி வாழும் இப்பழங்குடியினர், கொரொனா நோய், அவர்களது வனதெய்வத்தின் கோபத்தால்தான் வந்தது எனவும் கூறுகின்றனர் – இது என்னை ஆச்சரியத்திலாழ்த்தியது – வனங்களும் வனத்தில் உள்ள உயிர்களும் முன்பு இருந்ததுபோல் இப்பொழுது இல்லை; எங்களின் வனங்களின் ஒரு சில மரதெய்வங்களும் அழிந்து விட்டன; மேலும் எங்களின் சில வன உயிரிகளான காட்டுமாடு, எறும்பு தின்னி [ அலுங்கு ], புள்ளிமான் வகைகளும் எங்களின் வனசொந்தங்களும் அழிந்துவிட்டனவா இல்லை வேறு இடங்களுக்கு நகர்ந்து சென்று விட்டனவா என்றும் தெரியவில்லை என்றும் அம்மக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இவர்கள் வனங்களில் தங்கும் பொழுது மெலிதாகக்கூவும் வண்ணப்பறவை இனங்களையும் இப்போது காணவில்லை என வருத்தப்படுகின்றனர்.
மேலும் எங்கள் வனப்பகுதிகளைச் சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பிரியர்கள் எங்களைப்போன்ற பழங்குடியினரையும் எங்களது சொந்தங்களான வன உயிரிகளையும் நினைப்பதுமில்லை, மதிப்பதுமில்லை – மலைப்பகுதிகளைச் சுற்றுலாவாகச் சுற்றிப்பார்க்க வருபவர்கள், அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் .டப்பாக்கள், அவர்களின் வேண்டாத உடைகள், சில சமயங்களில் மதுபாட்டில்கள் போன்றவற்றை வனப்பகுதிகளில் கண்ட இடங்களில் போட்டுவிட்டுச் செல்வதால் வனங்களையே நம்பியிருக்கும் எங்களின் சொந்தமான வன உயிரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன – மேலும் எங்களுக்கும் வனங்களில் கிடைக்கும் சில மருந்துப்பொருட்களும் கிடைப்பதில்லை; இந்த நிலை வனங்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் மட்டுமில்லை – பொதுவாக பூமியின் நிலையே இதுதான் என்கின்றனர். சாலைக்கு இருபுறமும் கொட்டப்படும் கழிவுப்பொருட்களை அங்கு வளரும் உயிரிகள் அதை உண்டு இறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன எனவும் மனம் கலங்கக்கூறுகின்றனர் இந்தப்பழங்குடி மக்கள்

இவர்கள் அரசின் அனைத்து சட்டங்களையும் மதித்து நடப்பவர்கள், ,நோய்த்தொற்றுக்கு அவர்கள் பயப்படவில்லை. ஊரடங்கு காலத்தில், அவர்கள் தங்களது வேலைகளைத் தொடர்ந்து செய்துவந்ததாகவே கூறுகின்றனர். “ஆதி பழங்குடி இனங்களாக வாழ்ந்து வரும் எம் மக்கள் இனத்தாலும் மொழியாலும் கண்டங்களாலும் பிரிந்து வாழ்ந்தாலும் எங்களின் இயக்கம் ஒன்றுதான் – நாங்கள் அனைவரும் என்றும் காட்டோடு இணைந்து வாழவேண்டும் என்பதே – காலங்களும் சூழ்நிலைகளும் மாறி எம்மக்களை வேறெங்காவது தூக்கிப்போட்டாலும் எங்களின் வாழ்வு வனத்தைச் சார்ந்துள்ளதாகவே இருக்கும் – இயற்கையோடு இணைந்து வாழும் எம்மக்கள் வெளி உலகக்கல்வி அறிவோடு எங்களின் பாரம்பரியத்தையும் கற்று வருகின்றனர்.” எனக் கூறுகிறார்.

இந்த பூமியில் உள்ள மக்கள் அனைவரும் அவரவர் தேவைக்கேற்ப அவர்களின் தேவைகளைப் பெருக்கிகொண்டு வாழ்ந்து வரும்போது,. தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க இயற்கையின் அழகும் அலங்கோலமாக மாறிவிட்டது. – “ நான் என் மக்கள் வாழ்ந்து வரும் வனத்தை மட்டும் சொல்லவில்லை- வனத்தோடு சேர்த்து வானத்தையும் அதில் உள்ள அண்டங்களையும்தான் சொல்கிறேன். அதிகமான தொழிற்சாலைகளின் கழிவு நீர், வாகனப்புகை என எல்லாம் சேர்ந்து ஓசோன் எனும் ஓர் மென்படலத்தையே தின்றுவிட்டது. அரசாங்கம் பல அரசாணைகளை ஏற்படுத்தினாலும் அதனை மக்கள் ஏற்கவுமில்லை , ஏற்று நடக்கவுமில்லை

ஆனால், தற்சமயம் சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் மூடப்பட்டுவிட்டதால், வனங்களுக்குள் வருவோர் குறைந்து விட்டனர். இதன் காரணமாகவே, காணாமல் போன பலமூலிகைச் செடிகள் மறுபடியும் துளிர்த்து வருகின்றன; எங்கள் மருந்துச்செடிகள் மறுபடி வளர்ந்து வருவது தெரிந்து மனம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது “ என்று பளயரின மூதாட்டி காளீஸ்வரி அம்மாள் கூறுகிறார்.
“வனங்களைக் காப்பதோடு பளயர் இனப்பண்பாட்டையும் நாகரீகத்தையும் வளர்ப்போம்”